வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (20/06/2018)

கடைசி தொடர்பு:15:30 (20/06/2018)

ஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்?!

இவர்கள் இன்னும் சாதிக்கவில்லை. சாம்பியன் ஆகவில்லை. சாம்பியன் என்ற ஈகோ இல்லை. ஆனால், ஆக்ரோஷம் மட்டும் இருக்கிறது. சாணை பிடிக்கும் கருவியை மட்டும் எடுத்துக்கொண்டு எப்படிப் போருக்குப் போவது? வாள் வேண்டுமே? ஆஸ்திரேலியா போரில் தோற்கத் தொடங்கிவிட்டது. 

ஈகோ இல்லாத ஆஸ்திரேலியா... இது முடிவின் தொடக்கம்?!

கிரிக்கெட் உலகம் மொத்தமுமே உறைந்திருக்கிறது. இங்கிலாந்து ஆடிய ஒரு இன்னிங்ஸ் அனைவரையும் ஃப்ரீஸ் மோடிலேயே வைத்திருக்கிறது. 50 ஓவர்களில் 481 ரன்கள். உலகக் கோப்பை கால்பந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களும், ஆஸ்திரேலியா அடி வாங்குகிறது என்று தெரிந்ததும் சேனல்களை மாற்றுகிறார்கள். ஆஸ்திரேலியா அடிவாங்குவதைப் பார்க்கத்தான் எத்தனை ஆர்வம்! சமூக வலைதளங்களில் ஆஸ்திரேலியாவை ஏகத்துக்கும் கலாய்க்கிறார்கள். அதற்கு மத்தியில், 'எப்படி இருந்த டீம் இப்படி ஆயிருச்சு' என சோக ஸ்மைலியோடு ஒரு ட்வீட். அதைப் பார்க்கும்போது நிறைய கேள்விகள்... இவ்வளவுதான் ஆஸ்திரேலியாவா? அவர்களின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதா? ஆஸ்திரேலியாவுக்கு என்னதான் ஆச்சு..?

ஆஸ்திரேலியா

1999 உலகக் கோப்பை அரையிறுதி... 214 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்கோடு களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா. தன் முதல் உலகக் கோப்பையில் கோப்பை வென்றே தீரவேண்டும் என்ற வெறியோடு அணியை வழிநடத்துகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ். கிப்ஸ் - கிர்ஸ்டன் ஜோடி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்குகிறது. திடீரென தன் துருப்புச்சீட்டை பயன்படுத்துகிறார் ஸ்டீவ். ஷேன் வார்ன்...14 பந்துகளில் 3 விக்கெட்டுகள். ஆஸ்திரேலியாவின் கை ஓங்கும்போது காலிஸ் - ஜான்டி ரோட்ஸ் ஜோடி கைகோர்க்கிறது. ஆஸ்திரேலியா தடுமாறவில்லை. அவர்களையும் உடைக்கிறார்கள்.

 கடைசிகட்டத்தில் குளூஸ்னர் ஆட்டம் காட்டுகிறார். அவரை விட்டுவைத்து மற்றவர்களை பெவிலியனுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் ஆஸி பௌலர்கள். ஒரு ரன் எடுத்தால் வெற்றி... ஆஸ்திரேலிய வீரர்கள் இன்னும் அதே  நம்பிக்கையோடு... பதற்றம் இல்லை. பயம் இல்லை. ஆனால், தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களிடம் இரண்டுமே தொற்றிக்கொண்டது. ரன் அவுட். ஆஸ்திரேலியா ஃபைனலில்! ஃபைனல் - பாகிஸ்தான் 132 ஆல் அவுட். ஆஸ்திரேலியா சாம்பியன். 

1999 உலகக் கோப்பை

அதுதான் ஆஸ்திரேலியா என்னும் தன்னிகரில்லா ராஜ்ஜியத்தின் தொடக்கம். அந்த வெற்றிதான் அடுத்த 12 ஆண்டுகளுக்கு அவர்களை சாம்பியன்களாக வலம்வர வைத்தது. அவர்களை மட்டும் சாம்பியன்களாக வலம்வர வைத்தது. அந்த சகாப்தத்தைத் தொடக்கியவர்கள் ஆஸ்திரேலிய பௌலர்கள். பான்டிங், ஸ்டீவ் வாஹ், கில்கிறிஸ்ட், ஹெய்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியை பலமாக்கினர். ஆனால், மெக்ராத், வார்னே, கில்லஸ்பி, பிரெட் லீ போன்றவர்கள்தான் அவர்களை நாம் வியந்த, ஆராதித்த, பயந்த, தோற்க வேண்டும் என்று வேண்டிய 'ஆஸ்திரேலியா' ஆக்கினார்கள். 

அதற்குக் காரணம் அவர்களின் ஆட்டிட்யூட். ஆட்டிட்யூட் என்றதும், எல்லோரையும் வம்பிழுக்கும் அவர்களின் அந்த நெகடிவ் குணத்தை நினைத்துக்கொள்ளவேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் தங்களை சாம்பியனாகவே நினைத்த அந்த மனப்பான்மை. எந்தத் தருணத்திலும் அவர்கள் தங்கள் மீதான நம்பிக்கையை இழந்ததில்லை. அவர்களுக்குள் இருந்த ஈகோவை இழந்ததில்லை. சச்சின் க்ரீசிலிருந்து வெளியே வந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தாலும், வார்னேவின் கண்கள் அவரை முறைத்துக்கொண்டுதான் இருக்கும். அது தலைக்கனமாகவும் இருக்கலாம். 'நான் சாம்பியன்' என்ற ஈகோவாகவும் இருக்கலாம். ஆஸ்திரேலிய பௌலர்களை ஜாம்பவான்களாக்கியது, ஆஸ்திரேலியாவை சாம்பியனாக்கியது அந்த ஈகோதான். 

வார்னே - மெக்ராத்

அவர்கள் அந்த ஈகோவை பேட்ஸ்மேன்களிடம் மட்டும் காட்டியதில்லை. தங்களுக்குள்ளேயே காட்டிக்கொண்டவர்கள் அவர்கள். சுழலுக்குச் சாதகமில்லாத ஆடுகளத்திடம், ஸ்விங் ஆகாத பந்திடம், தோல்வியைக் காட்டிக்கொண்டிருக்கும் ஸ்கோர் போர்டிடமும் தங்களின் ஈகோவைக் காட்டியவர்கள். அதனால்தான் நம் ஸ்பின்னர்கள் குறைகூறும், ஸ்பின்னுக்கு உதவாத ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து மைதானங்களில் மட்டுமே 558 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தினார் வார்னே. அதனால்தான் ஸ்விங்குக்குச் சாதகமில்லாத துணைக்கண்ட ஆடுகளங்களில் ஒவ்வொரு 5 ஓவருக்கும் (ODI) ஒரு விக்கெட் வீழ்த்தினார் மெக்ராத். அந்த பௌலர்களும் இன்று ஆஸ்திரேலிய அணியில் இல்லை, அவர்களிடத்திலிருந்த ஈகோவும் இவர்களிடத்தில் இல்லை. அதனால்தான் ஆஸ்திரேலியா இன்று ஆஸ்திரேலியாவாக இல்லை. 

நேற்றைய போட்டிக்கு வருவோம்... 300 பந்துகளில் 481 ரன்கள்... இங்கிலாந்தின் அதிரடியும், மிகச்சிறிய பௌண்டரி எல்லையும் மட்டுமே இதற்குக் காரணம் இல்லை. ஆஸி பௌலர்களின் படுமோசமான பௌலிங். ஆண்ட்ரே டை ஸ்லோ பால் மட்டும்தான் வீசவேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். ஜை ரிச்சர்ட்சன் ஷார்ட் லென்த்தில் மட்டும்தான் பிட்ச் செய்கிறார். ஸ்டேன்லேக் மட்டும் லைனையும் லென்த்தையும் மாற்றுகிறார்.. ஆனால், பெர்ஃபெக்ஷன் இல்லை. ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் பாரபட்சம் இல்லாமல் புரட்டி எடுத்துவிட்டது இங்கிலாந்து. தொடக்கத்திலிருந்தே பௌண்டரிகளாக போகும்போது, ஒரு முன்னணி அணியின் வீரர்கள் இப்படியா செயல்படுவார்கள்? ஓப்பனர் ஜேசன் ராய் பேட்டிங் செய்யும்போது எப்படிப் பந்துவீசினார்களோ அப்படியேதான் டெத் ஓவர்களில் மோர்கனுக்கும் வீசினார்கள். ராய் அடித்தார்... மோர்கன் அடித்தார்... ஆனால், பௌலர்களின் பிளான் மாறவில்லை. 

அலெக்ஸ் ஹேல்ஸ்

நேற்றைய போட்டியில் விளையாடிய 4 ஆஸ்திரேலிய பௌலர்களின் ஒட்டுமொத்த அனுபவம் -  15 ஒருநாள் போட்டிகள். முன்னணி பந்துவீச்சாளர்கள் காயமடைந்துவிட்டதால், ஆஸ்திரேலிய தேர்வாளர்களுக்குக் கிடைத்தவர்கள் இவர்கள்தான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 15 பௌலர்கள் ஆஸ்திரேலிய அணிக்காக 'லிமிடெட் ஓவர்' போட்டிகளில் அறிமுகமாகியுள்ளனர். ஆனால், அவர்களால் இன்னொரு மெக்ரத்தையோ, வார்னேவையோ கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு ஏன் ஒரு மிட்செல் ஸ்டார்க், ஒரு நாதன் லயான் கூடக் கிடைக்கவில்லை. ஒவ்வொரு தொடருக்கும் புதிய வேகப்பந்துக் கூட்டணியோடு பயணிக்கிறது ஆஸ்திரேலியா. ஆஷ்டன் அகர், ஆடம் ஜம்பா.. துணைக்கண்ட ஆடுகளங்களில்கூடத் திணறுகிறார்கள். ஆஸ்திரேலிய பௌலிங் மிட்செல் ஸ்டார்க் ஓய்வோடு முற்றிலுமாக முடிந்துவிடப் போகிறது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. 

சரி ஏன் இங்கு பௌலர்களையும், அவர்களின் ஆடிட்யூட் பற்றி மட்டும் பேசவேண்டும்? ஏனெனில், கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக மாறி ஆண்டுகள் ஆகிவிட்டது. பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான விதிகள், ஆடுகளங்கள், சிறிய பௌண்டரிகள் என மாற்றிக்கொண்டு, ரோஹித் ஷ்ர்மாவின் இரட்டைச் சதங்களையும், கோலியின் தொடர் சதங்களையும் மையமாகக் கொண்டு வணிகம் செய்யத் தொடங்கிவிட்டது. இங்கு அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோ மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அதிவேக சதம் அடிக்கலாம். யார் வேண்டுமானாலும் ஒருநாள் இரட்டைச் சதம் அடிக்கலாம். இனி 500 ரன்கள் ஒருநாள் போட்டியில் சரவசாதாரணம் ஆகும். பந்துவீச்சு - இதுதான் உண்மையான கிரிக்கெட்டின் போராட்டத்தை இனிக் காட்டும். அதுதான் இனி வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். 

ஜானி பேர்ஸ்டோ

'பால் டேம்பரிங்' பிரச்னையையும், அதன் விளைவுகளையும் மட்டுமே ஆஸ்திரேலியாவின் இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரின் காயத்தையும் காரணமாகச் சொல்லிடமுடியாது. சொல்லப்போனால் இங்கேயும் பிரச்னை ஆட்டிட்யூட்தான். முந்தைய ஆஸ்திரேலிய வீரர்களிடமிருந்து, ஈகோவின் பாசிடிவ் பக்கங்களை விட்டுவிட்டு ஆக்ரோஷத்தை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது இந்தத் தலைமுறை. இப்போது இருக்கும் வீரர்கள் மட்டுமல்ல, மைக்கேல் கிளார்க் தலைமுறையிலிருந்து அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் ஆக்ரோஷத்தை மட்டுமே ஆட்டிட்யூடாகக் காட்டப் பழகியிருக்கிறார்கள்.

இவர்களெல்லாம், மொத்த ஆஸ்திரேலியாவும் வெற்றியில் மட்டுமே மிதந்து கொண்டிருக்கும்போது கிரிக்கெட் ஆடத் தொடங்கியவர்கள். அதனால் தோல்வியிலிருந்து வெற்றியை எப்படித் தேடுவது என்பது அவர்களுக்குப் பரிச்சயம் ஆகவில்லை. 90-களில் எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த துணைக்கண்ட அணிகளை, அவர்களின் பேட்ஸ்மேன்களை வீழ்த்த வார்னே, மெக்ரத், டேனியல் ஃப்ளமிங் போன்றவர்கள் தங்களை மிகப்பெரிய ஆயுதங்களாக மாற்றிக்கொண்டனர். சச்சின், ஜெயசூர்யா, அன்வர் போன்றவர்களின் நுணுக்கங்களையும் நகர்வுகளையும் ஆராய்ந்து, தங்கள் விரல்களில் ஜாலம் செய்தவர்கள். தோல்வியிலிருந்து வெற்றியைத் தேடியவர்கள். 

ஆஸ்திரேலியா

அதனால் ஒவ்வொருமுறை தங்களின் அணி பின்தங்கும்போதும் அவர்களுக்கு, வெற்றியை மீட்கத் தெரிந்தது. எதிரணியை எப்படி குலைக்கவேண்டும் என்பது தெரிந்தது. அவர்களின் ஈகோ, எந்த இடத்திலும் அவர்களைப் பின்தங்க விட்டதில்லை. எதிரணியைத் தகர்க்கும் ஆயுதம் அவர்களின் கைகளில் இருக்கும். அதைக் கூராக்கும் அம்புதான் ஸ்லெட்ஜிங்! ஆனால், இங்கே..? இவர்கள் இன்னும் சாதிக்கவில்லை. சாம்பியன் ஆகவில்லை. சாம்பியன் என்ற ஈகோ இல்லை. ஆனால், ஆக்ரோஷம் மட்டும் இருக்கிறது. சாணை பிடிக்கும் கருவியை மட்டும் எடுத்துக்கொண்டு எப்படிப் போருக்குப் போவது? வாள் வேண்டுமே? ஆஸ்திரேலியா போரில் தோற்கத் தொடங்கிவிட்டது. 

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியர்கள் எந்த ஆக்ரோஷத்தையும் காட்டவில்லை. பால் டேம்பரிங் பிரச்னையினால் அடக்கி வாசிக்கிறார்கள். ஆனால், இவர்களும் அதே குட்டையில் விழுந்த மட்டைகள்தான். அதனால்தான் நேற்று Fighting spirit எனப்படும் விளையாட்டின் மிகமுக்கிய ஆயுதத்தை பயன்படுத்தக்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. இவர்கள் இளைஞர்கள்தான். வாய்ப்புகள் வேண்டும்தான். ஆனால், அந்த வாய்ப்பில் ஆஸ்திரேலியா இவர்களுக்கு என்ன கற்றுக்கொடுக்கப் போகிறது? இந்தத் தோல்விகளிலிருந்து வெற்றிகளைத் தேடக் கற்றுக்கொடுக்கவேண்டும். எப்படி தன்னை சாம்பியன் பிளேயராக மாற்றிக்கொள்வது என்பதைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அந்த ஈகோவை எப்படி சரியாக வெளிப்படுத்துவது என்பதையும் கற்றுக்கொடுக்கவேண்டும். ஆஸ்திரேலியா இனி 19 ஆண்டுகள் பின்னாலிருந்து தொடங்கவேண்டும்!
 


டிரெண்டிங் @ விகடன்