போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்! #PORMAR | Portugal win against Morocco in fifa world cup

வெளியிடப்பட்ட நேரம்: 19:52 (20/06/2018)

கடைசி தொடர்பு:19:52 (20/06/2018)

போர்ச்சுக்கல் வெற்றி... மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றம்! #PORMAR

போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து உதவ, மொராக்கோவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போர்ச்சுக்கல். 

#PORMAR

ரஷ்யாவில் நடந்துவரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரில், குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுக்கல் - மொராக்கோ அணிகளுக்கு இடையிலான மோதல், மாஸ்கோவில் இன்று நடந்தது. ஸ்பெயினுக்கு எதிரான தங்கள் முதல் போட்டியை 3-3 என போர்ச்சுக்கல் டிரா செய்திருந்தது.  இரானுக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோ தோற்றிருந்தது.  இந்தப் போட்டியில் வென்று, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் களமிறங்கியது போர்ச்சுக்கல். 

ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே போர்ச்சுக்கல் கோல் கணக்கைத் தொடங்கியது. கார்னரில் இருந்து ஜோ மொடினோ கொடுத்த லோ கிராஸை அட்டகாசமாக ஹெட்டர் செய்து கோல் அடித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது, இந்த உலகக் கோப்பையில் அவர் அடிக்கும் நான்காவது கோல். மொராக்கோ அணியால் இதற்கு பதிலடி கொடுக்கமுடியவில்லை. முதல் பாதி முடிவில் 1-0 என போர்ச்சுக்கல் முன்னிலையில் இருந்தது.

#PORMAR

இடைவேளைக்குப் பின், மொராக்கோ உக்கிரமாகத் தாக்கியது. பத்து நிமிடங்களில் மூன்று ஷாட்டுகள் இலக்கை நோக்கி அடித்தது. அதில், இரண்டை அற்புதமாகத் தடுத்தார் போர்ச்சுக்கல் கோல் கீப்பர் ரூய் பேட்ரிசியோ.  கடைசி 15 நிமிடத்தில் எப்படியாவது கோல் அடித்து சமநிலை செய்யப் போராடியது மொராக்கோ. மறுபுறம் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பாக்ஸுக்கு  அருகே ஃப்ரி கிக் கிடைத்தது. ஸ்பெயினுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் ஃப்ரி கிக்கை கோல் அடித்தது போல, இன்றும் மேஜிக் நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை.

ஸ்டாப்பேஜ் டைமில் மீண்டும் போர்ச்சுக்கல் எல்லையை முற்றுகையிட்டது மொராக்கோ. ஆனாலும், அவர்களால் ரூய் பேட்ரிசியோவைத் தாண்டி கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் 1-0 என போர்ச்சுக்கல் வெற்றிபெற்றது. அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததன்மூலம், மொராக்கோ உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க