சுவாரஸ் கோலில் உருகுவே வெற்றி... அடுத்த சுற்றுக்கு முன்னேறியது #WorldCup #URUKSA

கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் நேற்று ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சவூதி அரேபியா அணியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது, 

உருகுவே

முதல் போட்டியில் எகிப்துடன் போராடி வென்ற உருகுவே அணி, ரஷ்யாவிடம் அடிபட்ட சவூதி அரேபியாவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் சொதப்பியத் தள்ளிய சவூதி அணி, இந்தப் போட்டியில் தொடக்கத்திலிருந்தே பொறுப்புடன் விளையாடியது. அதேசமயம் உருகுவே அணி கொஞ்சம் பதற்றத்துடனேதான் இந்தப் போட்டியைத் தொடங்கியது. சுவாரஸ், கவானி என இரண்டு நட்சத்திர ஸ்ட்ரைக்கர்களையும் சவூதி நடுகளம் கன்ட்ரோலில் வைத்திருந்தது. 

இரண்டு விங்கில் இருந்தும் அட்டாக் செய்த சவூதி அரேபியா, சில வாய்ப்புகளை சரியாக கோலடிக்க முடியாமல் கோட்டை விட்டது. இதற்கிடையில் 23-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் முன்னிலை பெற்றது உருகுவே. கார்னர் வாய்ப்பில், கார்லோஸ் சான்சஸ் கிராஸ் செய்ய, அதை ஹெட்டர் செய்ய உருகுவே வீரர்களும், வெளியேற்ற சவூதி வீரர்களும் குதித்தனர். ஆனால், பந்து அவர்களையெல்லாம் தாண்டி சுவாரஸ் காலருகே செல்ல, அதை எளிதாக கோலாக்கினார் சுவாரஸ். 

போட்டியில் பின்தங்கியிருந்தாலும் சவூதி அரேபிய வீரர்கள் நன்றாகவே ஆடினார்கள். தொடர்ந்து கிராஸ்கள் மூலம் உருகுவே டிஃபன்ஸுக்கு வேலைவைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர்களால் கோலடிக்கத்தான் முடியவில்லை. முதல் பாதி 1-0 என முடிவுக்கு வந்தது.

சுவாரஸ் - உருகுவே

இரண்டாவது பாதியிலும் சவூதி அணியின் கையே ஓங்கியிருந்தது. 4-4-2 ஃபார்மேஷன் உருகுவேவுக்கு சரிபட்டு வரவில்லை போல, இரண்டு ஸ்டார் ஸ்ட்ரைக்கர்களும் கோவிலில் தொலைந்த குழந்தைகள் போல் கால்போன போக்கில் அல்லாடிக்கொண்டிருந்தனர். சவூதொ நடுகளம், உருகுவே மிட்ஃபீல்டர்களை கட்டிப்போட்டே வைத்திருந்தது. இரண்டாவது பாதியில் சுவாரஸ், கவானி இருவரும் ஆளுக்கு ஒரு வாய்ப்பை வீணடிக்க, சவூதி அரேபியாவின் அட்டாக்கை கோடின் - கிமினஸ் கூட்டணி அரணாக நின்று முறியடித்தது. அதன்பிறகு இரண்டு அணிகளின் முயற்சிகளும் பலனளிக்கவே இல்லை. அதனால் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

உருகுவே அணி இந்த வெற்றியால் 6 புள்ளிகள் பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கெனவே இரண்டு வெற்றிகள் பெற்றிருந்த ரஷ்யாவும் இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஏ பிரிவிலிருந்து சவூதி அரேபியா, எகிப்து அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!