வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (22/06/2018)

கடைசி தொடர்பு:23:00 (22/06/2018)

உலகப்கோப்பை கால்பந்து! - இந்தியாவில் 4.73 கோடி ரசிகர்கள் கண்டுகளிப்பு

ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் நான்கு நாள் போட்டிகளை  இந்தியாவில் 4.73  கோடி ரசிகர்கள் கண்டுகளித்துள்ளனர். 

ரஷ்யாவில் நடக்கும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் முதல் நான்கு நாள் போட்டிகளை  இந்தியாவில் 4.73  கோடி ரசிகர்கள் கண்டு களித்துள்ளனர். 

உலகக் கோப்பை கால்பந்து

ரஷ்யாவில்,21-வது கால்பந்து உலகக்கோப்பை நடக்கிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய போட்டிகள், ஜூலை மாதம் 15-ம் தேதி வரை, 11 நகரங்களில் நடக்கிறது. இதில், 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை என்றாலும், கால்பந்து விளையாட்டுக்கென்று ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. இந்த கால்பந்து மோகம் தற்போதைய உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியிலும் வெளிப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடந்த முதல் நான்கு போட்டிகளை 4.73 கோடி பேர் பார்த்துள்ளதாக சோனி நெட்வொர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றுள்ளது. 

இந்தியாவில், கால்பந்துப் போட்டியை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளது மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. 4.10 கோடி பேர் டி.வி-யிலும், 60 லட்சம் பேர் சோனி டி.வி இணையதளத்திலும் பார்த்துள்ளனர். தொடக்க விழாவை மட்டும் 21 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஜூன் 11-17-ம் தேதி வரையிலான வாரத்தில், டி.வி-யில் ஒளிப்பரப்பான அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளில் கால்பந்தின் பங்களிப்பு 66 சதவிகிதமாக இருக்கிறது. கேரளா, அஸ்ஸாம், இதர வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதில் ஆச்சர்யமான விஷயம், பார்த்தவர்களில் 45 சதவிகிதம் பேர் பெண்கள். கேரளாவிலிருந்து 30 சதவிகிதம் பேரும்,  வடகிழக்கு மாநிலங்களிலிருந்து 28 சதவிகிதம் பேரும், மேற்கு வங்கத்திலிருந்து 20 சதவிகிதத்தினரும் பார்த்துள்ளனர்.

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜேஷ் கவுல் கூறுகையில், `` தற்போது ரஷ்யாவில்  தொடங்கியிருக்கும் ஃபிஃபா உலகக்கோப்பைப் போட்டி,  கால்பந்துக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பை உருவாக்கியுள்ளது. இது, தொடக்க விழாவிலேயே தெரிந்தது. இது, கால்பந்துப் போட்டி இந்தியாவில் வளர உதவும். இந்தியா பங்கேற்காத ஒரு போட்டித் தொடரை  முதன் முறையாக அதிக அளவில் ரசிகர்கள் கண்டு களித்துள்ளது மிகப்பெரிய சாதனை. ஒரு அழகான விளையாட்டு இந்தியாவில் வளர்ச்சிகண்டுவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கால்பந்துப்போட்டியை மாநில மொழிகளில் ஒளிபரப்புச்செய்வது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த உலகக்கோப்பைத் தொடர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகரும் காட்சிகளை, ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்க விரும்புகிறோம்’’ என்றார்.