`தோனியைவிட சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்! சொல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன் | Currently, Buttler is better than Dhoni in white-ball cricket: Paine

வெளியிடப்பட்ட நேரம்: 17:54 (25/06/2018)

கடைசி தொடர்பு:17:54 (25/06/2018)

`தோனியைவிட சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர்தான்! சொல்கிறார் ஆஸ்திரேலிய கேப்டன்

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தோனியைவிட சிறந்த வீரர் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் தெரிவித்திருக்கிறார். 

டிம் பெய்ன்

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி, 5-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்தது. குறிப்பாக, நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 206 ரன்கள் இலக்கை ஜோஸ் பட்லரின் சதத்தின் உதவியால் இங்கிலாந்து அணி எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்தப் போட்டியில், 50 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறிக்கொண்டிருந்தது. பின், கள வீரர்களுடன் கைகோத்த ஜோஸ்பட்லர், 110 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெறச்செய்தார். 5 போட்டிகள்கொண்ட அந்தத் தொடரில், பட்லர் 275 ரன்கள் குவித்தார். 

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கெட் கீப்பரும், ஆஸ்திரேலிய கேப்டனுமான டிம் பெய்ன், ``தற்போதைய சூழலில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சர்வதேச அளவில் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்தான். சமீபகாலமாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். தனது பலம் மற்றும் பலவீனம் ஆகியவைகுறித்து தெளிவான புரிதல் கொண்டிருக்கிறார் பட்லர். அவருக்கு சவால் அளிக்கக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள் என நான் எண்ணவில்லை. எம்.எஸ்.தோனி சிறந்த வீரர்தான்; ஆனால், தற்போதைய சூழலில் ஜோஸ் பட்லர், தன் வாழ்நாளில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அதேபோல ஜோஸ் பட்லர், ஜானி பேரிஸ்டோவ் மற்றும் ஜேசன் ராய் போன்ற இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத் திறனைக் கண்டு, அதிலிருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’’என்றார்.