கொஞ்சம் ஆச்சர்யம்... நிறைய அதிர்ச்சி... இது உலகக்கோப்பை பாஸ்! #WorldCup | Football World Cup is always something special

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (25/06/2018)

கடைசி தொடர்பு:18:25 (25/06/2018)

கொஞ்சம் ஆச்சர்யம்... நிறைய அதிர்ச்சி... இது உலகக்கோப்பை பாஸ்! #WorldCup

'இந்த அணி உலகக்கோப்பையை வென்றாலும் வெல்லலாம்' என்ற உத்தேசப் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் பெயரும் எழுதப்பட்டது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதானே உலகக்கோப்பையின் எழுதப்படாத விதி!

கொஞ்சம் ஆச்சர்யம்... நிறைய அதிர்ச்சி... இது உலகக்கோப்பை பாஸ்! #WorldCup

ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த உலகக்கோப்பை என்றில்லை. எல்லா உலகக்கோப்பையுமே மற்ற தொடர்களை விடவும் சுவாரஸ்யம் மிகுந்தவைதான். காரணம்... இங்கு எப்போது வேண்டுமானாலும் எதுவும் நிகழலாம்!

உலகக்கோப்பை கால்பந்து 2018

நான்குமுறை உலகக்கோப்பை வென்று சாம்பியனாக வலம்வந்த இத்தாலி உலகக்கோப்பையில் இல்லை. கடந்த உலகக்கோப்பையில் மூன்றாம் இடத்தைப் பிடித்த நெதர்லாந்து அணியால், இந்த உலகக்கோப்பைக்குத் தகுதிபெற முடியவில்லை. தென் அமெரிக்கப் போட்டிகளில் மற்ற நாடுகளுக்குக் கடும் சவால் அளிக்கும் சிலி இல்லை. கடந்த முறை போர்ச்சுகல் லீக் போட்டிகளுடன் வெளியேறக் காரணமான அமெரிக்கா இந்தமுறை விளையாடவில்லை. உலகக்கோப்பையின் அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும் இத்துடன் முடிந்துவிடவில்லை!

உலகக்கோப்பை போட்டியில் பனாமா ரசிகர்கள்

முதன்முறையாக உலகக்கோப்பையில் விளையாடத் தகுதிபெற்ற அணியான பனாமா இன்னும் தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கவில்லை. முதல் போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி. இரண்டாவது போட்டியில் 0-6 என்ற கோல் கணக்கில் தோல்வியின் விளிம்பில் இருந்தபோது, பனாமாவின் ஃபெலிபே பலோய் ஒரு கோல் அடிக்கிறார். தோல்வி நிச்சயம்... அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற முடியாத நிலை... ஆனால், பனாமா ரசிகர்கள் இதைக் கொண்டாடத் தவறவில்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டுக்கு இது முதல் உலகக்கோப்பை கோல். இதுதான் கால்பந்து!

நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்த உலகக்கோப்பையில் தனது முதல் லீக் போட்டியில் மெக்ஸிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றபோது ஜெர்மனி ரசிகர்கள் மட்டுமல்ல... கால்பந்து ரசிகர்கள் எவருமே நம்பவில்லை. அண்டர்டாக்ஸ் அணி பலம்வாய்ந்த எதிரணியைச் சாய்ப்பது இது முதல்தடவை இல்லை. 1-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனுக்கு எதிரான அடுத்த போட்டி டிராவை நோக்கி நகர்ந்தபோது, 'ஜெர்மனி அவ்வளவுதான்... லீக் போட்டிகளோடு வெளியேறிவிடும்' என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆட்டம் முடிய கடைசி சில நிமிடங்கள் இருக்கும்போது, டோனி க்ரூஸ் அடித்த கோல் ஜெர்மனிக்கு வெற்றியைத் தேடித்தந்தது. ஆனால், சாம்பியன்களை விடாது துரத்திக்கொண்டிருக்கும் சாபக்கேட்டிலிருந்து ஜெர்மனி இன்னும் முழுதாக விடுபடவில்லை. அடுத்த மேட்சில் வென்றுதான் அந்த சாபக்கேட்டை ஜெர்மனி போக்கிக்கொள்ள வேண்டும்.

கடந்த சில உலகக்கோப்பை வரலாற்றில், முந்தைய உலகக்கோப்பையை வென்ற அணி அடுத்த உலகக்கோப்பையின் லீக் போட்டிகளிலேயே வெளியேறியிருக்கின்றன. இதுதான் அந்த சாபக்கேடு. 1998 உலகக்கோப்பை சாம்பியன் ஃபிரான்ஸ், 2006 சாம்பியன் இத்தாலி, 2010 சாம்பியன் ஸ்பெயின் போன்றவை அடுத்த உலகக்கோப்பையில் லீக் போட்டிகளிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்திருக்கின்றன. இந்த வரிசையில் 2014 சாம்பியன் ஜெர்மனி, லீக் போட்டிகளில் இருந்து வெளியேறுமா அல்லது அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறுமா என்பதை அடுத்து நடைபெறவிருக்கும் போட்டிதான் தீர்மானிக்கவிருக்கிறது.

ஜெர்மனியை வென்ற மகிழ்ச்சியில் மெக்ஸிகோ வீரர்கள்

ஒட்டுமொத்த நபர்களும் அணியாகத் திரண்டு விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பது கால்பந்தில் எழுதப்படாத விதி. தனியொரு நபரை மட்டும் நம்பினால் அவர் எப்போதாவது அடிக்கும் கோலை மட்டும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான். போர்ச்சுகல் அணிக்கு 2014-ம் ஆண்டு அதுதான் நடந்தது. 'கோல் மெஷின்' ரொனால்டோவால் லீக் போட்டியைத் தாண்டி தனது அணியை அழைத்துச் செல்ல முடியவில்லை. ஆனால், இந்த உலகக்கோப்பையில் நடந்ததே வேறு! இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்று ஸ்பெயின். ரொனால்டோ என்ற உலக நாயகன் அணியில் இருக்கும் போர்ச்சுகல், தனது முதல் போட்டியில் ஸ்பெயினை எதிர்த்து விளையாடியது. தனி நபராக 3 கோல்கள் அடித்து ஆட்டத்தை சமன் செய்தபோது, 'இந்த அணி உலகக்கோப்பையை வென்றாலும் வெல்லலாம்' என்ற உத்தேசப் பட்டியலில் போர்ச்சுகல் அணியின் பெயரும் எழுதப்பட்டது. எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதானே உலகக்கோப்பையின் எழுதப்படாத விதி!

ரொனால்டோ - மெஸ்ஸி

கிளப் மேட்ச்களில் சாதிக்கும் நபர்... நாயகனாகப் போற்றப்படும் நபரால் உலகக்கோப்பையில் சோபிக்க முடியாமல் போகக்கூடும். மெஸ்ஸி தலைசிறந்த வீரர் என்பதை எவரும் மறுக்கமுடியாது. கடந்த உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா தோற்றிருந்தாலும், `கோல்டன் பால்’ வென்றார் அவர். ஆனால், இந்த உலகக்கோப்பையின் முதலிரு போட்டிகளிலும் கோல் அடிக்க முடியவில்லை. அடுத்த போட்டியில் அவர் சாதித்தாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார். இந்த உலகக்கோப்பையின் 'ரொனால்டோ Vs. மெஸ்ஸி' போட்டியில், மெஸ்ஸியை விட பல மைல் முந்தி விட்டார்  ரொனால்டோ. 'மீண்டு வருவார்... மீண்டும் வருவார்' என்பதே இன்றும் மெஸ்ஸி ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. காலமும், மெஸ்ஸியின் கால்களும் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

எப்போது ஜெயிக்கும், எப்போது தோற்கும் எனக் கணிக்க முடியாத சில அணிகள் 'நாங்கள் சளைத்தவர்கள் அல்ல' என நிரூபித்து, எந்த நேரத்திலும் 'டார்க் ஹார்ஸ்' ஆக மாறும். எந்த நொடியிலும் கேம் மாறும். ஜெர்மனியை வென்ற மெக்ஸிகோ, கொலம்பியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஜப்பான் போன்றவை இந்தமுறை இதைத்தான் நிரூபித்துள்ளன. முதன்முறையாக உலகக்கோப்பையில் ஆடும் ஐஸ்லாந்து, அர்ஜென்டினாவுடன் சமன் செய்தது. இதனால், அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற அர்ஜென்டினா தற்போது போராடிக் கொண்டிருக்கிறது.

நாக்-அவுட் போட்டிகளுக்குத் தகுதிபெறும் அணிகளின் பட்டியல் சில தினங்களில் முடிவாகிவிடும். அதற்குள் எத்தனை அதிர்ச்சிகளும், ஆச்சர்யங்களும், சாதனைகளும் நடக்கலாம்; ஹாட்ரிக் கோல்கள் விழலாம்; சேம் சைடு கோல் அதிர்ச்சி தரலாம். தோல்வி பெறும் அணியைப் பார்த்து மனம் நொறுங்கிப் போகக்கூடும். ஆனால், கோல் விழுந்ததும் ரசிகர்களின் செலிப்ரேஷன் சத்தம் விண்ணதிரச் செய்வது உறுதி. ரெஃப்ரியின் விசில் சத்தம் கேட்கும்வரை இங்கு எவருக்கும் மனநிம்மதி கிடையாது. இதுவரை கோல் எதுவும் இன்றி டிராவில் எந்த ஆட்டமும் முடியவில்லை. இனியும் சுவாரஸ்யத்துக்கு துளியும் பஞ்சம் இருக்காது. ஆச்சர்ய அதிர்ச்சிகளுக்குப் பழகிக்கொள்ளுங்கள். ஏனெனில் உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் எதுவும் நடக்கலாம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்