உலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா! #WorldCup | Russia in the midst of doping crisis

வெளியிடப்பட்ட நேரம்: 18:59 (25/06/2018)

கடைசி தொடர்பு:19:33 (25/06/2018)

உலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா! #WorldCup

உலகக் கோப்பையை நடத்தும் நாடு, சொந்த மண், ரசிகர்களின் உற்சாகம் என ரஷ்ய வீரர்கள் இவ்வளவு துடிப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களது முந்தைய செயல்பாடு அவர்களை சந்தேகக்கண்கொண்டே பார்க்கச் சொல்கிறது.

உலகக் கோப்பையில் புதிய சர்ச்சை... மீண்டும் ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷ்யா! #WorldCup

விளையாட்டு உலகத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவையும் ஊக்கமருந்தையும் பிரித்துப்பார்க்க முடியாமலே உள்ளது. ஒலிம்பிக் தொடங்கி ஒவ்வொரு டோர்னமென்ட்டிலும் `டோப்’ விவகாரத்தில் சிக்கி பெயரைக் கெடுத்துக்கொள்வது அவர்கள் வாடிக்கை. குழு விளையாட்டு மட்டுமல்லாது, தனிநபர் விளையாட்டுகளிலும் ஊக்கமருந்துச் சோதனையில் பதக்கம் இழந்த, தடை விதிக்கப்பட்ட ரஷ்ய வீரர், வீராங்கனைகள் ஏராளம். இந்த உலகக் கோப்பையும் அதற்கு விதிவிலக்கல்ல.

ரஷ்யா

ரஷ்யாவில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பிருந்தே, ஊக்கமருந்துச் சோதனையில் ரஷ்ய கால்பந்து வீரர்களும் சிக்கியிருக்கிறார்கள், அவர்களை உலகக்கோப்பைக்கான ரஷ்ய அணியில் இடம்பெறக் கூடாது என்பதில் ஊக்கமருந்துக்கு எதிராக போராடுபவர்கள், பத்திரிகையாளர்கள் தெளிவாக இருந்தனர். அதனால்தான், ஊக்க மருந்துப் பிரச்னையை உலகத்துக்கு தொடர்ந்து அம்பலப்படுத்திவரும், ஜெர்மனியைச் சேர்ந்த ஹஜோ செப்பெல்ட் (Hajo Seppelt) என்பவருக்கு, இந்த உலகக் கோப்பையை நேரில் கண்டுகளிக்க அனுமதி அளிக்கவில்லை. `ரஷ்யாவுக்கு வேண்டப்படாதவர்கள்’ பட்டியலில் அவர் இடம்பெற்றிருப்பதால், செப்பெல்ட்டுக்கு விசா வழங்கவில்லை எனக் காரணம் தெரிவித்திருந்தது ரஷ்யா.

எதிர்பார்த்ததுபோலவே, இந்த உலகக் கோப்பையிலும் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (FIFA) தர வரிசைப் பட்டியலில் 70-வது இடத்தில் இருக்கிறது ரஷ்யா. முக்கிய டோர்னமென்ட்டுகளில் ரஷ்யா கடைசியாகப் பங்கேற்ற 9 போட்டிகளில், ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. ஏழு வார்ம் அப் போட்டிகளில் ஒன்றில்கூட வெற்றிபெறவில்லை. ஆனால், உலகக்கோப்பையின் முதல் போட்டியில், சவுதி அரேபியாவுக்கு எதிராக 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது போட்டியில் எகிப்தை 3-0 என வீழ்த்தி, ஒரு போட்டியை மீதம் வைத்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின், உலகக்கோப்பையில் ரஷ்யா அடைந்த மாபெரும் வெற்றி இது. 

வெற்றி, தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும், முதல் போட்டியின்போது ரஷ்ய வீரர்கள் கடைசி வரை சளைக்காமல் ஓடியது, கால்பந்து உலகில் பலரது புருவத்தையும் உயர்த்தியது. அந்த சந்தேகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்தது, FIFA வெளியிட்ட ஒரு புள்ளி விவரம். தனி நபர்களும்  ஒட்டுமொத்த அணிகளும் களத்தில் ஓடிய தூரம் குறித்த அந்தப் புள்ளிவிவரத்தில், ரஷ்ய அணியின்  `ஓட்டம்’ பிரமிக்கவைக்கிறது. சவுதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில், ரஷ்ய வீரர்கள் கடந்த தூரம் 118 கி.மீ. இரண்டாவது போட்டியில் எகிப்துக்கு எதிராக ஒட்டுமொத்த ரஷ்ய அணியும் 115 கி.மீ தூரத்தை கவர் செய்திருந்தது. இந்தப் பட்டியலில்,  எகிப்து 112 கி.மீ பயணித்து இரண்டாவது இடத்தில் உள்ளது. 

ரஷ்யா

தனி நபர் வரிசையிலும் ரஷ்யா வீரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ரஷ்ய மிட் ஃபீல்டர் அலெக்சாண்டர் கோலோவின், ஒரு போட்டியில் 25.15 கி.மீ வரை ஓடியுள்ளார். அவர் மட்டுமல்ல அதிக டிஸ்டன்ஸ் கவர் செய்த டாப் -10 வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இருப்பதும் ரஷ்ய வீரர்களே.  ஒரு நிமிடத்துக்கு கோலாவின்  118.1 மீ, அலெக்ஸாண்டர் சமடோவ் 116.7 மீ, ஐயூரி கஸின்ஸ்கி 113.9 மீட்டர் தூரம் ஓடியுள்ளனர். 

உலகக்கோப்பையை நடத்தும் நாடு, சொந்த மண், ரசிகர்களின் உற்சாகம் என ரஷ்ய வீரர்கள் இவ்வளவு துடிப்பாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களது முந்தைய செயல்பாடு அவர்களை சந்தேகக்கண்கொண்டே பார்க்கச்சொல்கிறது. 2014 உலகக் கோப்பையில் இடம்பெற்ற ஒட்டுமொத்த ரஷ்ய வீரர்களிடமும் சோதனை நடத்தியதில், சிலர் ஊக்க மருந்துச் சோதனையில் சிக்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதேபோல, 2018 உலகக் கோப்பைக்கான ரஷ்ய அணியில், வீரர் ஒருவர் ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியுள்ளார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை, ரஷ்ய விளையாட்டு அமைச்சகம் மற்றும் ரஷ்ய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து மறைத்துவிட்டதாக, இங்கிலாந்து பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

உலகக்கோப்பை தொடங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்பே, 155 ரஷ்ய கால்பந்து வீரர்கள் ஊக்கமருந்துச் சோதனையில் சிக்கியிருப்பதாகவும், அதில் 34 பேருக்கு எதிராக சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, FIFA-விடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு. அதைவிட, தடைசெய்யப்பட்ட steroid dexamethasone பயன்படுத்திய ரஸ்லன் கேம்போலாவ், இந்த உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்ததுதான் உச்சம். கடைசியில் அவர், காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது வேறு விஷயம். காயத்தால் அவர் விலகினாரா இல்லை, ஊக்கமருந்துப் புகாரில் இருந்து தப்பிக்க ரஷ்ய கால்பந்து அமைப்பே இந்த வேலையைச் செய்ததா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. 

ரஷ்யா

சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்குப் பின், ரஷ்ய அரசு ஊக்கமருந்துச் சோதனையை தீவிரப்படுத்தியது. ஒவ்வொரு ரஷ்ய வீரரும் தங்கள் ரத்த, சிறுநீர் மாதிரிகளைக் கொடுத்து, ஊக்கமருந்து பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என  உத்தரவிடப்பட்டது. இருப்பினும், சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தால், `clean urine bank’ என்ற முறைகேடான அமைப்பு மூலம், வீரர்கள் போலி மாதிரிகளைக் கொடுத்து தப்பித்துவந்துள்ளனர். இந்த பேங்க் மூலம், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் மாற்றப்பட்டுள்ளதாக `The daily Mail’ குறிப்பிட்டுள்ளது.

`கால்பந்து வீரர் கேம்பலோவின் சிறுநீரக மாதிரி உண்மையானது அல்ல; அவரது சிறுநீர் மாதிரிக்குப் பதிலாக வேறு ஒரு விளையாட்டு வீரரின் சிறுநீரக மாதிரி வைக்கப்பட்டிருந்தது.’ என, சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் விசாரணையாளரான பேராசிரியர் ரிச்சர்டு மெக்லேரன் தெரிவித்தார். இதேபோல, ஊக்கமருந்தில் சிக்கிய பலரது ஆவணங்கள் FIFA வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், FIFA இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்கவில்லை என்பதைவிட, உலகக் கோப்பைக்கும் கால்பந்துக்கும் களங்கம் ஏற்படும் என்பதால், இதை அப்படியே மூடிமறைக்க முயற்சிக்கிறது என்பது இங்கிலாந்துப் பத்திரிகைகளின் வாதம். ஆனால், `ரஷ்ய கால்பந்து வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தினார் என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை’ என  FIFA விளக்கம் அளித்துள்ளது.

அதேநேரம், உலகக்கோப்பை நடத்தும் உரிமம் பறிபோன ஆத்திரத்தில், இங்கிலாந்து பத்திரிகைகள் தங்கள்மீது இப்படி அபாண்டமாகக் குற்றம் சாட்டுவதாக ரஷ்யா தெரிவிக்கிறது. `FIFA எங்கள் அணியை 120 முறை சோதித்துவிட்டது, ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு 200 முறை சோதித்துவிட்டது. எங்கள் நாட்டின் ஊக்கமருந்து தடுப்பு ஆணையம், பயிற்சியின்போதே எங்கள் வீரர்களை பலமுறை பரிசோதித்துவிட்டது. இங்கிலாந்து வீரர்களைவிட எங்கள் வீரர்கள் பலமுறை சோதிக்கப்பட்டுவிட்டனர்’ என, இங்கிலாந்து மீது பாய்கிறது ரஷ்யா. 

ரஷ்யா

``ஏன் இங்கிலாந்து நிருபர்கள் மட்டும் இதைப் பற்றி கேள்வி எழுப்புகின்றனர்? ஃப்ரெஞ்ச் பத்திரிகையாளர்களோ, ஸ்பானிஷ் நிருபர்களோ ஏன் இதைப்பற்றி கேட்பதில்லை? இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம். களங்கம் இல்லாத இடத்தில் அழுக்கைத் தேடிக்கொண்டிருக்க வேண்டாம். உலகக்கோப்பையை நடத்தும்போது யாராவது இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவார்களா? மனநிலை சரியில்லாதவர்கள் மட்டுமே அப்படிச் செய்வர். ஊக்கமருந்து பயன்படுத்தியதால் மட்டுமே, இரண்டு போட்டிகளில் எட்டு கோல்கள் அடித்துவிட முடியாது. கோல் அடிப்பதற்கு ஓட்டத்தைவிட,  இலக்கை நோக்கிய துல்லியமான ஷாட்டுகள்தான் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்கிறார், ரஷ்ய அணியின் செய்தித்தொடர்பாளர் ஐகர் விளாடிமிரோவ்.

இது, ரஷ்யா Vs ஊக்கமருந்து விவகாரமா அல்லது ரஷ்யா vs இங்கிலாந்து பிரச்னையா?! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்