மாப்பிள்ளை பிரேசில், மணப்பெண் அர்ஜென்டினா...! கடவுளின் தேசத்தில் ரசிகர்களின் டும்டும்டும் | Brazil fan married an Argentina follower in kerala

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:51 (26/06/2018)

மாப்பிள்ளை பிரேசில், மணப்பெண் அர்ஜென்டினா...! கடவுளின் தேசத்தில் ரசிகர்களின் டும்டும்டும்

கேரளாவில் பிரேசில் கால்பந்து ரசிகர் அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகையை மணந்துள்ளார்.

மாப்பிள்ளை பிரேசில், மணப்பெண் அர்ஜென்டினா...!  கடவுளின் தேசத்தில் ரசிகர்களின் டும்டும்டும்

பிரேசில், இத்தாலி, அர்ஜென்டினா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இருந்தால் கால்பந்து களமே அதிரும்! அண்டைநாடுகளான பிரேசிலும் அர்ஜென்டினாவும்தான் கால்பந்து உலகில் எதிரிகள். இத்தாலி வேறு இந்தப் பிரிவில் இருந்தது. அப்போதெல்லாம் ஒரு பிரிவில் மூன்று அணிகள்தாம் இடம்பெற்றிருக்கும்.1982-ம் ஆண்டு ஸ்பெயின் உலகக்கோப்பையில் குரூப் ஆஃப் டெத்தில் மூன்று உலகச் சாம்பியன்களுமே இடம்பெற்றிருக்க,  ஆட்டத்தில் அனல் பறந்தது.

1978-ம் ஆண்டு முதன்முறையாக உலகச்சாம்பியன் ஆன, அர்ஜென்டினா  `நடப்புச் சாம்பியன்' அந்தஸ்த்துடன் ஸ்பெயின் தொடரில் பங்கேற்றது. முதல் ஆட்டத்தில் இத்தாலியிடம் 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினா தோற்க, பிரேசில் அணியுடன் அடுத்த ஆட்டம். பிரேசிலை வீழ்த்தினால்தான் வாழ்க்கை, இல்லையென்றால் அடுத்த ஃப்ளைட் பிடிக்கவேண்டிய நிலையில் அர்ஜென்டினா ஊசலாடிக்கொண்டிருந்தது. 

தம்பதியின் கால்பந்து காதல்

photo credits : Aneesh Thrithallur

அர்ஜென்டினாவை 3-1 என்ற கோல்கணக்கில் பிரேசில் துவம்சம்செய்ய, `நீங்கள் எல்லாம் உலகச் சாம்பியன் அணியா?!' என்று ரசிகர்கள் கொந்தளித்தார்கள். தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இறங்கி தலைமறைவாக ஓடவேண்டிய நிலை அர்ஜென்டினா வீரர்களுக்கு. விரோதிகளாக இருந்த அர்ஜென்டினாவும் பிரேசிலும் பரமவிரோதிகள் ஆனது இப்படித்தான்.

பீலேவும் மரடோனாவும்கூட அடிக்கடி மோதிக்கொள்வார்கள். `நெய்மர் பெட்டர்தென்  மெஸ்ஸி' என்று பீலே சொல்வார். அடுத்த நாளே `மெஸ்ஸிதான் பெஸ்ட்' என்று உலகின் ஏதாவது ஒரு மூலையில மரடோனா `பிரஸ் மீட்' நடத்துவார். ஜாம்பவான் வீரர்கள் மட்டும் மோதிக்கொள்வதில்லை. அர்ஜென்டினாவும் பிரேசிலும் மோதினால், ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஏற்பட்டு பிரளயமே ஏற்படும். 

இந்தியாவிலும் பிரேசில், அர்ஜென்டினா அணிகளுக்குத்தான் ரசிகர்கள் அதிகம். மேற்குவங்கத்திலும் கேரளத்திலும் இரு அணியின் ரசிகர்களும் சட்டையைப் பிடித்துக்கொள்ளாத குறைதான். விஷயம் இப்படியிருக்க, பிரேசில் அணியின் தீவிர ரசிகர் ஒருவர் அர்ஜென்டினாவின் பரம விசிறி ஒருவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியாவில்... அதுவும் கால்பந்துக்குப் பெயர்போன கேரளத்தில்தான் இந்தத் திருமணம் நிகழ்ந்துள்ளது. 

தம்பதியின் கால்பந்து காதல்

திருச்சூரைச் சேர்ந்த ரோஷன் - மோனிஷாவின் திருணம் மே 27-ம் தேதி நடந்தது. ரோஷனுக்கு பிரேசிலும் நெய்மரும் உயிர் என்றால், மோனிஷாவுக்கு அர்ஜென்டினாமீது அலாதி ப்ரியம். மணமக்களை நன்கு அறிந்த அனீஷ் திரிதல்லூர் என்பவர்தான் இவர்களின் திருமண நிகழ்வுகளைப் புகைப்படமாகப் பதிவுசெய்தவர். ரோஷன் தம்பதியின் திருமணம் முடிந்த இரு வாரத்தில், உலகக்கோப்பைப் போட்டியும் தொடங்கியது. இந்தச் சமயத்தில் ரோஷனை அணுகிய அனீஷ் வித்தியாசமான ஐடியா ஒன்றைச் சொல்லியிருக்கிறார்.

``நீங்கள் பிரேசில் ரசிகர்... உங்கள் மனைவி அர்ஜென்டினா ரசிகை. பிரேசில் ஜெர்சி அணிந்துகொண்டு நீங்களும் அர்ஜென்டினா ஜெர்சியை அணிந்துகொண்டு உங்கள் மனைவியும் கால்பந்து விளையாடுங்கள். அதை நான், போட்டோ ஷூட் எடுத்துக்கொள்கிறேன்'' என்று சொன்னார்.

ரோஷனுக்கும் இந்த ஐடியா பிடித்துப்போக, கொட்டும் மழையில் கணவனும் மனைவியும் கால்பந்து விளையாடினர். முக்கியமாக, மோனிஷாவை மீறி  ரோஷன் `சிஸர் கிக்' அடிப்பது போன்ற புகைப்படம் மிக அருமையாக எடுக்கப்பட்டிருந்தது. உலகக்கோப்பை தொடங்கியதும் இந்தப் புகைப்படங்களை அனீஷ் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட, அது வைரலாகியது. இந்தத் தம்பதி, இப்போது கேரளா முழுக்க பாப்புலர். 
 
புகைப்படங்கள் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காக ரோஷனும் அனீஷும் மெனக்கெட்டுள்ளனர். கொட்டும் மழையில் `சிஸர் கிக்' அடித்த ரோஷன், கடும் உடல்வலியால் அவதிப்பட்டுள்ளார்.  `சிஸர் கிக்' அடிப்பது அவ்வளவு எளிதல்லவே! பல டேக்குகள் வாங்கியிருக்கிறார் ரோஷன். ஆனால், ``அந்த உடல்வலியெல்லாம் இப்போது சுத்தமா காணாமப்போயிடுச்சு. இன்றைக்குக் கேரளா முழுவதும் எங்க போட்டோதான் வைரல். மழையில் போட்டோ எடுத்த அனீஷின் கேமராகூட ரிப்பேர் ஆனது. இது ஃபுட்பாலுக்கும் அனீஷுக்கும் கிடைத்த வெற்றி'' என்று மகிழ்ச்சி பொங்க கூறும் ரோஷன், குவைத்தில் இன்ஜினீயராகப் பணிபுரிகிறார். மோனிஷா ஆயுர்வேத மருத்துவர். 

தம்பதியின் கால்பந்து காதல்

ரோஷன் - மோனிஷா திருமணத்தின்போது மணமேடை, இருக்கைகள், பலூன்கள் மேஜை எல்லமே அர்ஜென்டினாவின் வெள்ளை-ப்ளூ  நிறத்துக்கு மாற்றப்பட்டன. இதுக்கெல்லாம் பிரேசில் ரசிகரான ரோஷன் விட்டுக்கொடுத்துவிட்டாராம்.

நிஜ வாழ்க்கையில் அர்ஜென்டினா-பிரேசில் ரசிகர்கள்போல இருந்தால், காலத்தைத் தள்ள முடியுமா? காலும் பந்தும்போல பிணைப்புடன் இருப்பதுதானே நல்லது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்