``ரொனால்டோவுக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும்!’’ - கொந்தளிக்கும் ஈரான் கோச் குரோஸ் | Iran coach blasts VAR after draw vs Portugal

வெளியிடப்பட்ட நேரம்: 15:33 (26/06/2018)

கடைசி தொடர்பு:15:33 (26/06/2018)

``ரொனால்டோவுக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும்!’’ - கொந்தளிக்கும் ஈரான் கோச் குரோஸ்

``ரொனால்டோவுக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும்!’’ - கொந்தளிக்கும் ஈரான் கோச் குரோஸ்

உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேறி விட்டது. போகிற போக்கில் FIFA, VAR, ரெஃப்ரியை காட்டமாக விமர்சித்துவிட்டுச் சென்று விட்டார் ஈரான் பயிற்சியாளர் கார்லஸ் குரோஸ். 

கோல் லைன் டெக்னாலஜி, கோல் விழுந்தால் ரெஃப்ரி கையில் இருக்கும் வாட்ச்சில் அலாரம் அடிப்பது என ஒவ்வொரு உலகக் கோப்பையிலும் புதுப்புது டெக்னாலஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ரஷ்யாவில் தற்போது நடந்து வரும் 2018 உலகக் கோப்பையில் பெரிதும் கவனம் ஈர்ப்பது VAR.

பெனால்டி, ரெட் கார்டு கொடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகக் கருதினால் மெயின் ரெஃப்ரி,  VAR (Video Assistan Refree)  உதவியை நாடி தங்கள் முடிவை அறிவிப்பர்.  VAR பேனலில் இருக்கும் நிபுணர்கள், தொழில் நுட்பத்தின் உதவியுடன் ஆட்டத்தைப் பல கோணங்களிலும் கவனித்து, களத்தில் இருக்கும் மெயின் ரெஃப்ரிக்கு சில பரிந்துரைகளை முன்வைப்பர்.  அதை ஏற்பதும், நிராகரிப்பதும் மெயின் ரெஃப்ரியின் முடிவு. 

ரொனால்டோ

இந்த உலகக் கோப்பையில் VAR உதவியுடன் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேநேரத்தில் ரெஃப்ரிகள் VAR-ஐ பெரிதும் நம்பியிருப்பதால், ஆட்டத்தின் சுவாரஸ்யம் குறைகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அந்தப் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் ஈரான் கோச் கார்லஸ் குரோஸ்.

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள போர்ச்சுகல் - ஈரான் அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் மேட்ச், சரன்ஸ்க் நகரில் நேற்று நடந்தது. இந்தப் போட்டியில் பராகுவேயைச் சேர்ந்த ரெஃப்ரி  என்ரிக் கேசரிஸ், VAR ரிவ்யூக்காக  மூன்று முறை ஆட்டத்தை நிறுத்தினார். ஒருமுறை போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுத்தார். அந்த பெனால்டி கிக்கை போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ மிஸ் செய்தார். இஞ்சுரி டைமில் VAR ரிவ்யூ மூலம், ஈரானுக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கொடுத்தார். அதை கரிம் அன்சாரிஃபர்த் கோல் அடித்தார். இந்த இரண்டு Possible penalty review தவிர்த்து, மற்றொருமுறை ரெட் கார்டுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த VAR review பார்த்தார் ரெஃப்ரி. 

டெக்னிக்கல் லைனில் இருந்த வீடியோவில், நடந்த சம்பவத்தைப் பார்த்துவிட்டு களத்துக்குத் திரும்பிய ரெஃப்ரி, ரொனால்டோவுக்கு எல்லோ கார்டு காண்பித்தார். 82-வது நிமிடத்தில் லெஃப்ட் விங்கில் இருந்து பந்தைக் கடத்தி கோல் அடிக்க விரைந்து வந்தபோது, ஈரான் டிஃபண்டர் பவுரலிகஞ்சி, ரொனால்டோவை வழிமறித்தார். பக்கவாட்டில் அங்கும் இங்குமாக இரண்டொரு முறை ஏய்ப்பு செய்து ரொனால்டோவின் வழியில் குறுக்கிட்டார் பவுரலிகஞ்சி. இறுதியில் ரொனால்டோ அவரை இடித்துத் தள்ளி கடந்து சென்றார். இதில் ஈரான் டிஃபண்டர் கீழே விழுந்து விட்டார். ஈரான் வீரர்கள் ரெஃப்ரியிடம் மன்றாடிய பிறகு, VAR ரிவ்யூ மூலம், ரொனால்டோவுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டது. ஆனால், இது சரியான முடிவல்ல. ரொனால்டோவுக்கு சாதகமாக எடுக்கப்பட்ட முடிவு என்கிறார் ஈரான் பயிற்சியாளர் குரோஸ்.

ரொனால்டோ

``நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதேநேரத்தில் இதைச் சொல்லியே தீர வேண்டும். எங்கள் வீரர்கள், ரசிகர்கள் மதிக்கப்பட வேண்டும். இப்படி பேசுவாதல், எனக்கு எதிராக ஒரு யுத்தமே நடக்கும் எனத் தெரியும். VAR உதவிக்காக நீங்கள் ஆட்டத்தை நிறுத்துகிறீர்கள். அதில் எங்கள் டிஃபண்டரை அவர் (ரொனால்டோ) முழங்கையில் இடிப்பது தெளிவாகத் தெரிகிறது. விதிமுறைப்படி முழுங்கையில் இடித்தால், அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். விதிமுறைகள் எல்லோருக்கும் பொதுவானதே. விதிமுறையில்  அவர் ரொனால்டோவா, மெஸ்ஸியா என பார்க்கச் சொல்லவில்லை. பிரபலமான வீரர் என்பதால் ரொனால்டோவுக்கு கருணை காட்டுமாறு ரெஃப்ரிக்கு சொல்லப்பட்டிருக்கலாம். 

ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியே அனுப்பக் கூடாது என்பது ஒருவேளை ரெஃப்ரியின் முடிவாகவும் இருக்கலாம், அல்லது VAR பேனலில் இருந்தவர்களின் பரிந்துரையாகவும் இருக்கலாம். யார் முடிவு என உறுதியாகத் தெரியவில்லை. இந்த கேம் என்பது ரசிகர்களுக்கானது. திரைமறைவில் இருக்கும் இருந்து இயக்குபவர்களுக்கானது அல்ல. 

ரொனால்டோ

இதற்கு முன்பும் வீரர்கள் தவறு செய்தனர்; பயிற்சியாளர்கள் தவறு செய்தனர்; ரெஃப்ரிகள் தவறு செய்தனர்... இந்த மனிதத் தவறுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அது கால்பந்தின் ஒரு அங்கமும் கூட... ஆனால், இப்போது அதிர்ஷ்டவசமாக ஒரு சிஸ்டம் உள்ளது. ஹைடெக்கான தொழில்நுட்பம் உள்ளது. ஆறு பேர் அதை எந்நேரமும் கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில், சரியான முடிவுகளை அறிவிக்க வேண்டியது அவசியம். VAR விஷயத்தில் ரக்பி போட்டிகளில் நடப்பதைப் போல வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். அந்தக் குழுவில் இருப்பவர்களும், ரெஃப்ரியும் என்ன பேசுகிறார்கள் என்பது ரசிகர்களுக்குத் தெரிய வேண்டும். FIFA தலைவர் இன்ஃபேன்டினோ இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு முடிவு காண வேண்டும். `VAR விஷயத்தில் பல பிரச்னைகள் உள்ளன. பல புகார்கள் வருகின்றன. இதன் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. அதனால் இதை நிறுத்துகிறோம்’ என இன்ஃபேன்டினோ அறிவிக்க வேண்டும்’’ என பொறிந்து தள்ளினார் குரோஸ்

போர்ச்சுகல் பயிற்சியாளர் ஃபெர்ணான்டோ சான்டோஸ், ``கால்பந்தில் இது சகஜம். VAR வீடியோக்களை பார்க்கவில்லை என்பதால், இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க முடியாது. VAR அதன் பணியைச் செய்கிறது. நாம் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’’ என்றார்.

VAR கால்பந்தின் வரமா, சாபமா?!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்