ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் அபாரம்; அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்திய இந்தியா! | India beat Ireland in first T20 match

வெளியிடப்பட்ட நேரம்: 00:32 (28/06/2018)

கடைசி தொடர்பு:07:28 (28/06/2018)

ரோகித் ஷர்மா, குல்தீப் யாதவ் அபாரம்; அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்திய இந்தியா!

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் முதல்  டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தவான் ரோகித் ஷர்மா

Photo Credits: BCCI/Twitter

இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி, முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்யப் பணித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் ஷர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். தொடக்கத்தில் ஷர்மா நிதானமாக ஆட, தவான் அதிரடியில் இறங்கினார். இருவரும் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினர்.

45 பந்துகளில் 74 ரன்கள் குவித்த தவான், கெவின் ஓ பிரையின் ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்துக் களமிறங்கிய ரெய்னா 10 ரன்னிலும் தோனி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மறுபுறம் ரோகித் ஷர்மா சதத்தை நெருங்கிய வேளையில் கடைசி ஓவரில் 97 ரன்னில் போல்ட் ஆனார். கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, கடைசிப் பந்தில் பாண்ட்யா சிக்சர் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் பீட்டர் சேஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

பின்னர் 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜேம்ஸ் ஷன்னான், அதிரடியாக விளையாடினார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் தனது அதிரடியால் அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடினார் ஷன்னான். 35 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற அயர்லாந்து அணி திணறியது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆட்டநாயகனாவும் குல்தீப் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அயர்லாந்து அணிகள் மோதும் 2 -வது டி20 போட்டி வரும் வெள்ளி இதே மைதானத்தில் நடைபெறுகிறது.