`இப்போதுதான் தலைவலியே' - வீரர்களைத் தேர்வு செய்வதில் கோலி குழப்பம்..!

அணியில் யார் யாரைச் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக எனக்குத் தலைவலி ஏற்பட்டுள்ளது என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

விராட் கோலி

@bcci

அயர்லாந்து அணியுடனான இரண்டாவது டி20 போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. இந்த இரண்டு போட்டிகளிலும் வீரர்கள் சுழற்சி முறையில் இறக்கி விடப்பட்டாலும் அவர்கள் அனைவரும் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். முதல் போட்டியில் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மாவும், இரண்டாவது போட்டியில் லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்திக் பாண்டியாவும் அதிரடி காட்டினர். இதனால் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்நிலையில் நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய கேப்டன் கோலி, ``இரண்டு போட்டிகளிலும் நிலையான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக பௌலிங், பேட்டிங்கிலும் வீரர்கள் சமமாக விளையாடினர். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் யாரைச் சேர்ப்பது, யாரை உட்காரவைப்பது என யோசிக்கும் போது தலைவலி ஏற்படுகிறது. 

இது ஆரோக்கியமான ஒன்றுதான். இந்திய அணிக்கு இது சிறப்பான காலகட்டம் ஆகும். இளம்வீரர்கள் தங்களது வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. எதிரணியைப் பற்றி யோசிக்கவில்லை. நாங்கள் எங்களது திறமையை வெளிப்படுத்துவோம். பிட்ச் நன்றாக உள்ளது. ஒருவேளை பிட்ச் கைகொடுக்கவில்லை என்றால் எங்களது பேட்டிங் திறனை வைத்து சமாளிப்போம். மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர்கள் இரண்டு பேர் எங்கள் அணியில் உள்ளனர். அவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். இங்கிலாந்துக்கு எதிரான தொடர் கடினமானதாகவே இருக்கும். எனினும் இந்திய வீரர்களுக்கு அவர்களது பொறுப்பு என்னவென்று தெரியும். கேப்டனாக நான் எதுவும் கூற வேண்டியதில்லை" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!