4,000 கி.மீ சைக்கிளில் பயணித்து ரஷ்யாவுக்கு உலகக் கோப்பை பார்க்கச் சென்ற இந்தியர்! | Cliffin Francis from Kerala travelled in cycle to witness Russia world cup

வெளியிடப்பட்ட நேரம்: 15:42 (30/06/2018)

கடைசி தொடர்பு:16:08 (30/06/2018)

4,000 கி.மீ சைக்கிளில் பயணித்து ரஷ்யாவுக்கு உலகக் கோப்பை பார்க்கச் சென்ற இந்தியர்!

சைக்கிளில் சென்று போட்டியைப் பார்த்த இந்தியக் கால்பந்து ரசிகர்

4,000 கி.மீ சைக்கிளில் பயணித்து ரஷ்யாவுக்கு உலகக் கோப்பை பார்க்கச் சென்ற இந்தியர்!

லகக் கோப்பை தொடரில் பிரான்ஸ், டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம், ஜூன் 26-ம் தேதி மாஸ்கோவில் லஸ்கினி மைதானத்தில் நடைபெற்றது. டென்மார்க், பிரான்ஸ் நாட்டுக் கொடிகள் ஆயிரக்கணக்கில் பறந்துகொண்டிருந்தன. அவற்றுக்கிடையே இந்திய தேசியக்கொடியும் ஒன்று தென்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்தியா தகுதி பெறவில்லையென்றாலும், ஏராளமான இந்தியர்கள் போட்டியைக் காண  ரஷ்யா சென்றுள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த, கணித ஆசிரியரான கிளிஃபின் பிரான்ஸிஸ் ஒரு கால்பந்து வெறியர். நடப்பு  உலகக் கோப்பை தொடரில் பிரான்ஸ் - டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டத்தைக் காண டிக்கெட் வாங்கியிருந்தார். ஆனால், ரஷ்யாவுக்கு விமானத்தில் செல்ல அவரிடத்தில் போதிய பணம் இல்லை. கணித ஆசிரியர் கணக்குப்போட்டு, சைக்கிளில் பயணிப்பது என முடிவெடுத்தார். 

உலகக் கோப்பை

கடந்த  பிப்ரவரி  23-ம் தேதி கொச்சியிலிருந்து துபாய் பறந்தார். அங்கே ஒரு சைக்கிளை வாங்கினார். துபாயிலிருந்து இரான் நாட்டின் துறைமுக நகரான பந்தர் அப்பாஸுக்குக் கப்பல் பிடித்தார். அங்கிருந்து பிரான்சிஸின் ரஷ்யப் பயணம் தொடங்கியது. இரான், எமிரேட்ஸ், அஸர்பைஜான் நாடுகள் வழியாக காடு, மலைகளைக் கடந்து சுமார் 4,000 கிலோமீட்டர் பயணித்து ஜூன் 5-ம் தேதி ரஷ்யா சென்றடைந்தார். FIFA fan - அடையாள அட்டை இருந்ததால், அவருக்குப் பயணத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஜார்ஜியா நாட்டுக்குள் நுழைய மட்டும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

உலகக் கோப்பை

(Photo Courtesy: Facebook/Clifin Francis)

இதனால், அஸர்பைஜான் நாட்டு வழியாக  ரஷ்யப் பயணத்தை பிரான்சிஸ் தொடர்ந்தார். அஸர்பைஜான் நாட்டு அதிகாரிகள், கால்பந்து விளையாட்டு மீது பிரான்சிஸ்கொண்ட காதலை அறிந்து  அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வழியில் இவரைப்போலவே ரஷ்யா நோக்கி சைக்கிளில் சென்றவர்களுடன் ஜோடி போட்டுக்கொண்டார். இதனால் சைக்கிள் பயணமும் சுகமான அனுபவமாக அமைந்தது. சுமார் மூன்று மாதங்களில் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து, உலகக் கோப்பை மைதானத்தில் இந்திய தேசியக்கொடியுடன் தென்பட்டவர் இவர்தான். 

உலகக் கோப்பை

ரஷ்யப் பயணத்தின்போது இரான் நாட்டு மக்கள் தன்னை நெகிழவைத்ததாக பிரான்சிஸ் கூறுகிறார். ``இரானில் சென்ற இடமெல்லாம் நான் தங்குவதற்கு இடமும் உணவும் தந்து மக்கள் உபசரித்தனர். இரான் நாட்டில் மட்டும் 45 நாள்கள் சைக்கிளில் பயணித்தேன். இருநாள்கள் மட்டுமே ஹோட்டலில் தங்கினேன். பெர்சிய மக்கள் உபசரித்தவிதம் இரான் நாட்டைப் பற்றிய என் எண்ணத்தையே மாற்றிவிட்டது. இரான் நாட்டிலிருந்து நான் ரஷ்யா சென்ற வரை வழியெங்கும் ஏராளமான தாய்மார்கள் எனக்குக் கிடைத்தனர். அவர்கள் என்னைப் பற்றி அறிந்துகொண்டதும், `இப்படியெல்லாம் வரலாமா... உடல் என்னாவது?' என்று அன்புடன் கடிந்துகொண்டனர். சுற்றுலா வந்து உணவு அருந்திக்கொண்டிருந்தவர்கள்கூட எனக்கு விருந்தளித்து உபசரித்தனர். `ரஷ்யா சென்றதும்  இரான் அணிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும்' என்றும் என்னிடம் வேண்டிக்கொண்டனர்'' என பெர்சிய மக்களின் புகழ்பாடுகிறார் பிரான்சிஸ். 

உலகக் கோப்பை கால்பந்து

அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிதான் இவருக்கும் ஹீரோ. அர்ஜென்டினா போட்டிக்கான டிக்கெட் வாங்க இவரால் முடியவில்லை. நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஏதாவது ஒரு போட்டியைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆசையில் ரஷ்யா புறப்பட்ட பிரான்சிஸை, இப்போது உலக மீடியாக்கள் மொய்க்கின்றன. அவர்களிடத்தில் பிரான்சிஸ் சொல்வது ஒன்றே ஒன்றுதான்... `எனது ரஷ்யப் பயணம், ஓர் இந்தியச் சிறுவனை கால்பந்து விளையாடவைத்துவிட்டால்கூட போதும்'' என்பதுதான்.

இந்தியச் சிறுவர்கள் கால்பந்து விளையாடத் தொடங்கிய என்றாவது ஒருநாள், உலகக் கோப்பை தொடருக்கு இந்திய அணி முன்னேறும் என நம்புவோம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்