காயம் காரணமாக நாடு திரும்பும் பும்ரா; டி20 மற்றும் ஒருநாள் தொடரில் சிக்கல்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக பும்ரா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் விலகியுள்ளனர். 

பும்ரா


இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதற்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்தத் தொடரை இந்தியா 2-0 என எளிதில் வென்றது. 

வரும் வாரத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணியின் வேகபந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக நாடு திரும்புகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது அவரது விரலில் காயம் ஏற்பட்டது.  இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடமாட்டார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகப் பந்து வீசக்கூடிய பும்ரா விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. எனினும் அவர் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தயாராகி விடுவார் என நம்புவதாக அணியின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பயிற்சியில் கால்பந்து விளையாடும் போது ஏற்பட்ட காயத்தால் விலகியுள்ளார். இவர்களுக்குப் பதிலாக, ஷ்ரதுல் தாக்கூர் அல்லது தீபக் சஹார் அணியில் சேர்க்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. சஹார் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காகச் சிறப்பாக பந்துவீசினார். தற்போது இங்கிலாந்து நாட்டில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வருகிறார். அதிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதால் பும்ராவுக்கு மாற்றாக சஹார் தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. சுந்தருக்குப் பதிலாக அக்சர் பட்டேல் அணியில் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!