போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய உருகுவே; ரொனால்டோ ரசிகர்கள் ஏமாற்றம் | Uruguay beats Portugal in knock out match

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (01/07/2018)

கடைசி தொடர்பு:05:30 (01/07/2018)

போர்ச்சுகலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய உருகுவே; ரொனால்டோ ரசிகர்கள் ஏமாற்றம்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றுகள் நேற்று தொடங்கியது. தொடக்கப்போட்டியில் பிரான்ஸ் அர்ஜெண்டினா அணியை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது போட்டியில் போர்ச்சுகல் உருகுவே அணிகள் மோதின. 

போர்ச்சுகல் உருகுவே ஆட்டம்

தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் அட்டாக்கிங் முறையில் ஆட்டத்தைத்  தொடக்கினர். போட்டி தொடங்கிய 7 -வது நிமிடத்தில் உருகுவே அணிக்கு முதல் கோலை அடித்தார் எடின்சன் காவானி. இதனால் கிறிஸ்டியானோ ரெனால்டோ ரசிகர்களும் போர்ச்சுகல் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆட்டத்தில் பந்து பெரும்பாலும் போர்ச்சுகல் அணியினரிடம் தான் இருந்தது. ஆனாலும் முதல் பாதியில் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என உருகுவே அணி முன்னிலைப் பெற்றது. 

உருகுவே வீரர் காவானி

இரண்டாவது பாதியிலும் போர்ச்சுகல் வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் பந்து பெரும்பாலும் இருந்தது. போட்டியின் 55 -வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் பெப்பே, தனது அணிக்கு முதல் கோலை பெற்றுத்  தந்தார். கார்னரில் இருந்து வந்த பந்தை, தனது தலையால் முட்டி, கோல் வலைக்குள் தள்ளினார். ஆட்டத்தில் 1-1 என்ற சமநிலை. போர்ச்சுகல் ரசிகர்கள் மீண்டும் உற்சாகமானார்கள். ஆனால் எல்லாம் அடுத்த 7 நிமிடத்துக்குத்  தான். 62 -வது நிமிடத்தில் எடின்சன் காவானி மீண்டும் தனது அணி முன்னிலை பெற உதவினார். அதன் ரொனால்டோபின்னர் போர்ச்சுகல் அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் உருகுவே டிபெண்டர்களால் தடுக்கப்பட்டது. இறுதியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 


இன்றைய போட்டியின் நாயகனாக ஜொலித்த எடின்சன் காவானி, போட்டியின் நடுவில் காயம் காரணமாக  நடக்கச்  சிரமப்பட்டார். அப்போது போர்ச்சுகல் கேப்டன் ரெனால்டோ அவரைக்  கைதாங்கலாக அழைத்துச் சென்றார். இதனைப்  போட்டியை காண வந்திருந்தவர்கள் கைதட்டி பாராட்டினர். நேற்று நடைபெற்ற  போட்டிகளில் நட்சத்திர வீரர்களான  மெஸ்சியின் அர்ஜென்டினா மற்றும் ரெனால்டோவின் போர்ச்சுகல் ஆகிய அணிகள் வெளியேறியதால் அவர்களது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.