கிளாசிகோ இல்லாத உலகக் கோப்பை! ரொனால்டோவை வெளியேற்றியது உருகுவே! #URUPOR

கிளாசிகோ இல்லாத உலகக் கோப்பை! ரொனால்டோவை வெளியேற்றியது உருகுவே! #URUPOR

எல்லோரும் அந்தப் பொன்னான தருணத்துக்காகக் காத்திருந்தனர். உலகக் கோப்பையில் ஒரு `எல் கிளாசிகோ’வை எதிர்பார்த்திருந்தனர். ரொனால்டோ – மெஸ்ஸி ரைவல்ரிக்காக தவம் கிடந்தனர். காலிறுதியில் போர்ச்சுகல் – அர்ஜென்டினா மோதும் என பெட் கட்டியிருந்தனர். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அர்ஜென்டினா, பிரான்ஸைத் தோற்கடிக்கும், போர்ச்சுகல், உருகுவேயை வென்றுவிடும் என கணக்கு போட்டிருந்தனர்.

போர்ச்சுகல்

எல்லோரும் ரொனால்டோ கோல் அடிப்பார் என எதிர்பார்த்தபோது, எங்கிருந்தோ வந்த சென்டர் பேக் பெப்பே ஹெட்டர் கோல் அடித்துவிட்டார். எப்படியும் ஃபினிஷ் செய்துவிடுவார் என நம்பப்பட்ட சுவாரஸ் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. கவானி அசால்ட்டாக இரண்டு கோல்கள் அடித்துவிட்டார், அதுவும் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறுவதற்கு 20 நிமிடத்துக்கு முன்பே…

இப்படி, எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. காயமடைந்த கவானியை ரொனால்டோ தோள்மீது தாங்கி, சைட் லைனுக்கு அப்பால் விட்டார். கடைசியில் உருகுவே, போர்ச்சுகலை உலகக் கோப்பை நடக்கும் ரஷ்யாவில் இருந்தே வெளியேற்றி விட்டது. ஸ்கிரிப்ட் படி காலிறுதியில் ஃபிரான்ஸ் – உருகுவேதான் மோத வேண்டும் என்றிருக்கும்போது யாரால்தான் என்ன செய்ய முடியும்?

கடைசியில், கிளாசிகோவுக்கும் வாய்ப்பில்லை. கிளாசிக் மேட்ச்சுக்கும் வாய்ப்பில்லை. மெஸ்ஸி தோற்றுவிட்டார். அர்ஜென்டினா வெளியேறிவிட்டது. ரொனால்டோ தோற்றுவிட்டார். போர்ச்சுகல் வெளியேறிவிட்டது. மெஸ்ஸி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிய நான்கு மணி நேரத்தில் ரொனால்டோவும் வெளியேறிவிட்டார். இருவரும் ஒரே நாளில் வெளியேறிவிட்டனர். இருவரும் ஒருவரையொருவர் களத்தில் சந்திக்காமலேயே உலகக் கோப்பைக்கு குட்பை சொல்லிவிட்டனர்.

ரொனால்டோ - மெஸ்ஸி

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போர்ச்சுகல் – உருகுவே மோதியது. இரு அணிகளும் 4-4-2 ஃபார்மேஷனில் தொடங்கியது. 6-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை ஆன் டார்கெட் செய்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஆனால், அடுத்த நிமிடத்தில் சிம்பிளாக, அதேநேரத்தில் நேர்த்தியாக வேலையை முடித்துவிட்டது உருகுவே. ரைட் விங்கில் இருந்து கவானி, லெஃப்ட் விங்கில் இருந்த சுவாரஸுக்கு கிராஸ்ஃபீல்ட் பாஸ் கொடுத்தார். அதை வாங்கி பாக்ஸில் புகுந்து செகண்ட் போஸ்ட் அருகே அட்டகாசமாக ஒரு பின்பாயின்ட் கிராஸ் கொடுத்தார் சுவாரஸ். இந்தத் தருணத்துக்காகவே காத்திருந்தது போலவே, கோல் போஸ்ட்டை நோக்கி ஓடி வந்த கவானி, குதிப்பதற்கும், அந்த கிராஸை தலையால் முட்டுவதற்கும் சரியாக இருந்தது. கோல். உருகுவே 1-0 என முன்னிலை.

ரொனால்டோ ஒரு arieal threat என்பதை உருகுவே டிஃபண்டர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். போர்ச்சுகல் வீரர்கள் ரைட், லெஃப்ட் விங்கில் இருந்து கிராஸ் போடுவதை முன்கூட்டியே தடுத்தனர் உருகுவே டிஃபண்டர்கள். மீறி வந்தாலும், அதை ரொனால்டோ ஹெட்டர் செய்ய அனுமதிக்கவில்லை. குறிப்பாக, உருகுவேயின் சென்டர் பேக் கோடின், ரொனால்டோவிடம் பந்து செல்வதையே அனுமதிக்கவில்லை. கோடின் போன்ற அரண்கள் இருக்கும் வரை உருகுவே டிஃபன்ஸை உடைத்து கோல் அடிப்பது கடினம் என போர்ச்சுகல் வீரர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால்தான், பாக்ஸில் புகுந்து டிரிபிளிங் செய்வதற்குப் பதிலாக, கார்னர் கிக் பெறுவதில் குறியாக இருந்தனர். செட் பீஸ்களை வாங்கி விட்டால் எப்படியும் ரொனால்டோ கோல் அடித்துவிடுவார் என்பது அவர்கள் நம்பிக்கை.

பெபே

ஒருவழியாக, அவர்கள் கணக்கு பலித்தது. காத்திருப்புக்கு பலன் கிடைத்தது. லெஃப்ட் கார்னரில் 55-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு ஒரு செட் பீஸ் கிடைத்தது. ரஃபேல் குரேரோ கொடுத்த கிராஸை ஹெட்டர் செய்வதற்காக குதிக்கிறார் ரொனால்டோ டைமிங் மிஸ். அந்தரத்தில் இருந்து ரொனால்டோவின் கோல்கள் தரையிறங்கியபோது குதிக்கத் தயாரானார் பெப்பே. ரொனால்டோவின் தலைக்கு தப்பிய பந்து, பெப்பேவின் தலைக்கு தப்பவில்லை. உருகுவே கோல்கீப்பர் ஒரு இன்ச் கூட நகரவில்லை. அழகான ஹெட்டர். நல்ல கோல். ஆட்டம் லெவல். பெப்பே கோல் அடிப்பார் என யாரும் நம்பவில்லை. அவரும் கூட தன்னை உருகுவே டிஃபண்டர்கள் அன்மார்க் பொசிஷனில் நிற்க அனுமதிப்பார்கள் என நம்பவில்லை.

போர்ச்சுகல் கோல் அடிக்க போராடிக்கொண்டிருந்தபோது, உருகுவே மற்றொருமுறை ஈஸியாக கோல் அடித்தது. முஸ்லெரா கொடுத்த லாங் பாஸை, பென்டங்கர்  கன்ட்ரோல் செய்து, பெனால்டி பாக்ஸின் லெஃப்ட் கார்னரில் இருந்த கவானி பக்கம் தள்ளி விட, அதை கவானி ஒட்டுமொத்த பலத்தையும் சேர்த்து ஒரு ஷாட் அடிக்க, போர்ச்சுகல் கோல் கீப்பர் தன் இடது பக்கம் ஃபுல் லென்த் டைவ் அடிக்க, பந்து தங்குதடையின்றி கோல் வலைக்குள் விழுந்தது. கூட்டம்  ஆர்ப்பரித்தது. உருகுவே மீண்டும் முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் லெஃப்ட் ஃபுட், ரைட் ஃபுட், ஹெட்டர் என மூன்று வழிகளிலும் கோல் அடித்தவர்கள் பட்டியலில் இணைந்தார் கவானி. அதற்கு அடுத்த நிமிடமே காயம் அவரை களத்தில் இருந்து வெளியேற்றிவிட்டது.

கவானி

கவானியை கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு சைட் லைனில் விட்டு ரசிகர்களிடம் Fair Play அவார்டு வாங்கிய ரொனால்டோ, கடைசி நிமிட பரபரப்பில் ரெஃப்ரியிடம் எல்லோ கார்டு வாங்கினார். கடைசி வரை அவரால் கோல் அடிக்க முடியவில்லை. கோடின், கசரெஸ், ஜிம்மென்ஸ், லக்ஸால்ட் ஆகிய நால்வரும் ரொனால்டோவை கோல் அடிக்க அனுமதிக்கவில்லை. இந்தப் போட்டியில் மட்டுமல்ல, ரொனால்டோ கடைசியாக பங்கேற்ற உலகக் கோப்பையின் ஆறு நாக் அவுட் போட்டிகளிலும் கோல் அடிக்கவில்லை.

 இஞ்சுரி டைமிலாவது ஒரு கோல் அடித்து ஆட்டத்தை டிரா செய்துவிட வேண்டும் என தவியாய் தவித்தனர் போர்ச்சுகல் ஸ்ட்ரைக்கர்கள். கடைசி நிமிடத்தில் கார்னர் கிக் கிடைத்ததும், ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் போல, போர்ச்சுகல் கோல் கீப்பர் ரூய் பேட்ரிசியா கூட, உருகுவே எல்லையில் வந்து பாக்ஸுக்குள் ஹெட்டர் செய்ய முயன்றார். ம்ஹும். வேலைக்காகவில்லை. முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே.

ரொனால்டோ

ஆக, வெள்ளிக்கிழமை நிஷ்னி நவ்க்ரோட் ஸ்டேடியத்தில் நடக்கவுள்ள காலிறுதியில், இருமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உருகுவே, முன்னாள் வேர்ல்ட் சாம்பியன் பிரான்ஸை எதிர்கொள்கிறது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அட்டகாசமான கோல்கள் அடித்த இரு அணிகளும், காலிறுதிக்கு தகுதி வாய்ந்த அணிகள். ஸ்டார் வேல்யூ இல்லை; இன்டிவிஜுவல் பிளேயர் இல்லை. அணியின் கூட்டு முயற்சி மட்டுமே பிரதானம் என்பதால், உண்மையில், எல்லோரும் எதிர்பார்த்த அர்ஜென்டினா – போர்ச்சுகல் மேட்ச்சைவிட, பிரான்ஸ் – உருகுவே காலிறுதி சுவாரஸ்யமாகவே இருக்கும். கால்பந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும். காயத்தில் இருந்து சரியான நேரத்தில் குணமடைய முடியாது என்பதே உருகுவே அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!