பாடகரின் தந்தையைத் தாக்கியதாக வினோத் காம்ளி மனைவிமீது காவல்நிலையத்தில் புகார்..!

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹெவிட், பாடகர் அன்கித் திவாரியின் தந்தையைத் தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

வினோத் காம்ளி

இசையமைப்பாளரும் பாடகருமான அன்கித் திவாரியின் தந்தை ராஜேந்திர குமார் திவாரி, மும்பையிலுள்ள பங்கூர் நகர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்தப் புகாரில், 'ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி அளவில் மும்பையிலுள்ள ஒரு மாலின் விளையாட்டு இடத்திலிருந்து, எனது பேத்தியுடன் வெளியேறினேன்.

அப்போது ஒரு பெண், திடீரென்று என் முகத்தில் தாக்கினார். நான், அவரைத் தவறான முறையில் தொட்டதாகக் கூறினார். நான், அப்போது அவரிடம் எதும் விவாதத்தில் ஈடுபடவில்லை. உடனே, அருகிலிருந்த எனது மகனிடம் சென்று கூறினேன். இதுகுறித்து அந்தப் பெண்ணிடம் சென்று எனது மகன் விசாரிக்கும்போதுதான், அவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா ஹெவிட் என்பது தெரியவந்தது. அப்போது அவருடைய பாடிகாட்ஸ், என்னுடைய மகனைத் தாக்கினார்.

அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்த புகாரையடுத்து, வினோத் காம்ப்ளியின் மனைவி மீது மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து, மும்பைக் காவல்துறைக்கு ட்விட்டர் மூலம் வினோத் காம்ப்ளி அளித்துள்ள விளக்கத்தில், 'ஒருவர், என் மனைவியைத் தவறான முறையில் தொடப் பார்த்தார். இதுகுறித்து விசாரித்தபோது, அவர், அவரது மகனை அழைத்து வந்து அடித்தார். நாட்டில், பெண்கள் பாதுகாப்பு மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது வேதனையாக உள்ளது' என்று பதிவிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!