வெளியிடப்பட்ட நேரம்: 05:43 (04/07/2018)

கடைசி தொடர்பு:10:08 (04/07/2018)

உலகக்கோப்பை கால்பந்து -  கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில், பெனால்டி ஷூட் முறையில் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி,  காலிறுதிக்குள் நுழைந்துள்ளது இங்கிலாந்து. 

இங்கிலாந்து

ரஷ்யாவில் நடந்துவரும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டடத்தை எட்டியுள்ளது. அனுபவமில்லாத அணிகள், முக்கிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வருவதால் போர்ச்சுக்கல், அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றில் தோல்வியடைந்து, தங்களது சொந்த நாட்டுக்கு நடையைக்கட்டிவருகின்றன. நாக் அவுட் சுற்றின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில், கொலம்பியா - இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரண்டு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடினர். ஆனால், முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் போஸ்ட்டை தொட முடியவில்லை. எனினும், இரண்டாவது பாதியில்  57-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இங்கிலாந்து சரியாகப் பயன்படுத்திக்கொண்டது. 

இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் ஒரு கோல் அடித்து அசத்த, 93-வது நிமிடத்தில் கொலம்பிய வீரர் யெரி மினா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். இதனால், இரு அணிகளும் 1-1 என சமநிலை வகித்தன. பின்னர் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்காததால், பெனால்டி ஷூட் முறை கொண்டுவரப்பட்டது. இதில், இங்கிலாந்து 4 கோல்கள் அடிக்க, கொலம்பியா 3 கோல்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம், இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. வரும் சனிக்கிழமை, காலிறுதிச் சுற்றில் ஸ்வீடன் அணியை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க