வெளியிடப்பட்ட நேரம்: 12:23 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:30 (07/07/2018)

வரலாற்றைத் திருத்தி எழுதும் இங்கிலாந்து கால்பந்து அணி! #COLENG

சொல்லப்போனால் இந்த ஆட்டம் பெனால்டிக்குப் போயிருக்கவே தேவையில்லை. நியாயப்படி 90 நிமிட முடிவிலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கவேண்டும். ஆனால், முடிவின் விளிம்பில் நின்றிருந்த ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் யெர்ரி மினா.

வரலாற்றைத் திருத்தி எழுதும் இங்கிலாந்து கால்பந்து அணி! #COLENG

லகக் கோப்பை நாக் அவுட் சுற்றில் வென்று 12 வருடங்கள் ஆகிவிட்டன. உலகக் கோப்பையில் 3 முறை, யூரோவில் 3 முறை என பெனால்டி வந்தபோதெல்லாம் தோற்று வெளியேறியிருக்கிறது. இப்போது மீண்டும் நாக் அவுட்... மீண்டும் பெனால்டி... இங்கிலாந்தின் முன்னால் பல வருடத் தோல்வி வரலாறும் 5 ஸ்பாட் கிக்குகளும். இங்கிலாந்து அணி ரஷ்யாவுக்குப் போகும் முன் ``நாங்கள் சரித்திரம் படைக்கப் போகிறோம்" என்றார் அந்த அணியின் கேப்டன் ஹேரி கேன். வரலாறுகளைத் திருத்தி எழுதும்போதுதானே சரித்திரம் படைக்கப்படுகிறது! `கேன் அண்டு கோ’ அந்த மோசமான வரலாற்றைத் திருத்தி எழுதியிருக்கிறது. பெனால்டியில் வென்றிருக்கிறது. உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் வென்றிருக்கிறது. புதிய சரித்திரத்தை நோக்கி இன்னும் ஓர் அடி வைத்திருக்கிறது.

இங்கிலாந்து

முதல் 3 பெனால்டி ஷூட்களையும் கோலாக்கியிருந்தது கொலம்பியா. இங்கிலாந்தின் மூன்றாவது வாய்ப்பு. லிவர்பூல் கேப்டன் ஜோர்டான் ஹெண்டர்சன் பெனால்டி ஸ்பாட்டை நோக்கி வருகிறார். எப்படியும் கோலடித்து 3-3 என சமன் செய்துவிடுவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். அவர் அனுபவம்மீது நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்தச் சுமாரான ஷாட்டை சூப்பராகத் தடுத்தார் கொலம்பிய கோல்கீப்பர் ஓஸ்பினா. 3-2. இங்கிலாந்து ரசிகர்கள் நொறுங்கிவிட்டனர். ஆனால், அவர்களை ஆசுவாசப்படுத்தினார் உரிபே. கிராஸ் பாரில் அடித்து பெனால்டியை வீணாக்கினார். அடுத்த ஷாட்டை ட்ரிப்பியர் கோலாக்க, 3-3 என ஆட்டம் சமன். 

கார்லோஸ் பக்கா... கொலம்பியாவின் கடைசி ஷாட்டை அடிக்க வருகிறார். இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்ஃபோர்டின் வலதுபுறம் அடிக்கிறார். அதை அற்புதமாக டைவ் அடித்துத் தடுத்துவிட்டார் பிக்ஃபோர்ட். இங்கிலாந்து கோல் அடித்தால் வெற்றி. இப்போது கொலம்பிய ரசிகர்கள் உடைந்துவிட்டனர். எரிக் டையர்... அடித்தால் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும், கொலம்பியா வெளியேறும். கூலாக நிற்கிறார். மொத்த அரங்கமும் அமைதி காக்கிறது. ஓஸ்பினாவின் வலதுபுறம் அடிக்கிறார். ஓஸ்பினா சரியாகக் கணித்து டைவ் அடிக்கிறார். வலது கையில் பந்து லேசாகப்படுகிறது. ஆனால், வெளியேறவில்லை. கோல் போஸ்டுக்குள் நுழைகிறது. இங்கிலாந்து வீரர்களின் சத்தம். ரசிகர்களின் சத்தம், இங்கிலாந்தின் சத்தம் மட்டுமே அங்குக் கேட்கிறது. இங்கிலாந்து வரலாறு படைத்து விட்டது. இல்லை இல்லை வரலாற்றைத் திருத்தி எழுதிவிட்டது. 

பிக்ஃபோர்ட்

சொல்லப்போனால் இந்த ஆட்டம் பெனால்டிக்குப் போயிருக்கவே தேவையில்லை. நியாயப்படி 90 நிமிட முடிவிலேயே இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கவேண்டும். ஆனால், முடிவின் விளிம்பில் நின்றிருந்த ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் யெர்ரி மினா. கொலம்பியா இந்தச் சுற்றுக்கு வரக் காரணமாக இருந்தவர். செனகல் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில்... வெற்றி கட்டாயம் என்ற போட்டியில் கோலடித்து அணியை வெற்றி பெற வைத்தவர். இந்த முறையும் அணியின் தோல்வியைத் தள்ளிவைத்தார். 1-0 என கொலம்பியா பின்தங்கியிருக்க, ஸ்டாப்பேஜ் டைமின் 3-வது நிமிடத்தில் ஹெட்டர் மூலம் கோலடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

75 நிமிடங்கள் நன்றாக விளையாடிய இங்கிலாந்து, முன்னணியில் இருப்பதால் கொஞ்சம் கேஷுவலாக ஆடியது. அதைப் பயன்படுத்திய கொலம்பிய வீரர் உரிபே பாக்சுக்கு வெளியே இருந்து, `லாங் ரேஞ்ச் ஷாட்' அடிக்க, அதைக் கடைசி நொடியில் சூப்பராகத் தடுத்தார் பிக்ஃபோர்ட். அவர் சேவ் செய்த பந்து வெளியே செல்ல, கொலம்பியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த கார்னரைப் பயன்படுத்தித்தான் கோலடித்தார் மினா. 

யெர்ரி மினா

இந்த கோலுக்கு முன்னாள் வரை, ஆட்டம் வேற மாதிரி இருந்தது. ``நீ மட்டும் ஏன் சும்மா போற, இந்த யெல்லோ கார்ட்" என ஒவ்வொருவருக்காக யெல்லோ கார்ட் கொடுத்துக்கொண்டிருந்தார் ரெஃப்ரீ. மொத்தம் 8 மஞ்சள் அட்டைகள். இங்கிலாந்துக்கு இரண்டு, கொலம்பியாவுக்கு ஆறு! ஆம், 6 கொலம்பிய வீரர்கள் இங்கிலாந்து வீரர்களை ஃபவுல் செய்ததற்காகத் தண்டிக்கப்பட்டனர். பலமுறை வீரர்களுக்கு இடையே மோதல் கடுமையாக இருந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. 

இங்கிலாந்து அடித்த அந்த கோல், கொலம்பியா செய்த தவற்றின் பலனால் அடிக்கப்பட்டதுதான். கார்னருக்காக, கொலம்பியா பாக்ஸில் காத்திருந்த ஹேரி கேனை, சேன்சஸ் பிடித்துத் தள்ளிவிட, பெனால்டி கொடுத்தார் ரெஃப்ரீ. ஹேரி கேன் - இந்தத் தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது பெனால்டி. அதைத் தடுக்கமுடியவில்லை. கோ......ல்....! இந்தத் தொடரில் கேன் அடிக்கும் ஆறாவது கோல். கடந்த முறை ஜேம்ஸ் ராட்ரிகியூஸ் அடித்த கோல் எண்ணிக்கையை, அவர் அணிக்கு முன்பே சமன் செய்தார் கேன். ஆனால், ராட்ரிகியூஸ்..?

ராற்றிகியூஸ்

உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்தே காயத்தால் அவதிப்பட்டுவந்த ஜேம்ஸ் ராட்ரிகியூஸ், நேற்றைய போட்டியின் ஸ்டார்டிங் லெவனில் இடம்பெறவில்லை. சரி, சப்ஸ்டிட்யூட்டாகக் களமிறங்குவார் என்று கொலம்பிய ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருக்க, ஐ.டி கார்டை பிக்பாஸ் போட்டியாளர் போல் சைடில் மாட்டிக்கொண்டு வந்து கேலரியில் அமர்ந்து ஷாக் கொடுத்தார். கொலம்பியா அவர் இல்லாமலே விளையாடியது. மெச்சூரிட்டி இல்லாமல் ஃபவுல்கள் செய்தது, சண்டை போட்டது, கோல் விட்டது, பெனால்டியில் வீழ்ந்தது... கடந்த முறை சாதனை நாயகனாகக் கண்ணீரோடு விடைபெற்ற ஜேம்ஸ், இந்த முறை சாதனைகள் படைக்காமல் வெளியேறினார். அவரை, அவர் அணியை வெளியேற்றிய இங்கிலாந்து அணி அவர்கள் கண் முன்பே சரித்திரம் படைக்கத் தொடங்கியிருந்தது!


டிரெண்டிங் @ விகடன்