வெளியிடப்பட்ட நேரம்: 14:28 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:24 (07/07/2018)

சுழற்றிய குல்தீப்... விளாசிய ராகுல்... இங்கிலாந்தை விரட்டி விரட்டி வெளுத்த இந்தியா! #ENGvIND

குல்தீப் யாதவின் சுழற்பந்துகளும், கேஎல் ராகுலின் விளாசல்களும் இந்தியாவுக்கு மிக எளிதான வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

சுழற்றிய குல்தீப்... விளாசிய ராகுல்... இங்கிலாந்தை விரட்டி விரட்டி வெளுத்த  இந்தியா! #ENGvIND

வெற்றிகளின் உச்சத்தில் இருந்த இங்கிலாந்துக்கு தோல்வியைப் பரிசளித்து, சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது  இந்திய கிரிக்கெட் அணி. குல்தீப் யாதவின் சுழற்பந்துகளும், கே.எல் ராகுலின் விளாசல்களும், முதல் டி-20 போட்டியில் இந்தியாவுக்கு மிக எளிதான வெற்றியைப் பெற்றுத்தந்திருக்கின்றன.

ராகுல்

கேப்டன் கோலி!

எதிர்பார்த்ததுபோலவே, டாஸ் வென்றதும் பெளலிங்கையே தேர்ந்தெடுத்தார் கேப்டன் கோலி. இங்கிலாந்து டீமில் எந்த சர்ப்ரைஸும் இல்லை. பட்லர், ராய், ஹேல்ஸ், மார்கன், பிராத்வெய்ட், ஜோ ரூட் என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அதே பேட்டிங் ஆர்டர். இந்திய டீமில்தான் பெரிய சர்ப்ரைஸ். ராகுலின் வருகையால் ஒன் டவுன் பேட்ஸ்மேன் இடம் காலியாகிவிட்டதால், சுரேஷ் ரெய்னாவுக்கு இடம் கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக அந்த இடத்தை சுரேஷ் ரெய்னாவுக்கு ரிசர்வ் செய்து, அணிக்குள் கொண்டுவந்திருந்தார் கோலி. 

முதல் ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். ஜேசன் ராய், பட்லர் என இருவருமே செம ஃபார்மில் இருப்பதால், பவர் ப்ளே ஓவர்களில் பவுண்டரிகள் பறந்தன. முதல் ஓவரிலேயே ராய் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்து 11 ரன்கள் எடுத்தது. யாதவின் இரண்டாவது ஓவரில் 9 ரன்கள். புவனேஷ்வர்குமாரின் அடுத்த ஓவரிலும் ரன்கள் தெறித்தன. அதனால், மேட்சின் நான்காவது ஓவரிலேயே ஸ்பின்னரைக் கொண்டுவந்தார் கோலி. சாஹல் வீசிய இந்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் என ராயும், பட்லரும் கலந்துகட்டி 15 ரன்கள் அடித்தனர். சாஹல் வலது கை லெக் ஸ்பின்னர். பட்லர், ராய் இருவருமே வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால், சாஹாலின் ஸ்பின் எடுபடவில்லை. அடுத்த ஓவர் உமேஷ் யாதவ். இந்த ஓவரின் கடைசிப்பந்து அவுட்சைடு ஆஃப் ஸ்டம்ப்பில் பட்டு உள்ளே வர, அதை சரியாக ரீட் செய்யத் தவறினார் ஜேஸன் ராய். இன்சைடு எட்ஜ் பட்டு பந்து ஸ்டம்ப்பைத் தாக்கியது. இந்தியாவுக்கு முதல் விக்கெட்.

குல்தீப்

பவர் ப்ளேவின் கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மூன்றே ரன்கள். 10-வது ஓவரில்தான் இடதுகை ஸ்பின்னரான குல்தீப் யாதவைக் கொண்டுவந்தார் கோலி. வலது கை பேட்ஸ்மேன்களான பட்லர், ஹேல்ஸ் இருவருமே குல்தீப்பின் பந்துகளைக் கணிக்க முடியாமல் திணறினர். அவர் வீசிய முக்கால்வாசிப் பந்துகள் அவுட் சைடு ஆஃப்ஸ்டம்ப்பில் பிட்ச்சாகி, லெக் ஸ்டம்ப்பை நோக்கி வர மிரண்டது ஹேல்ஸ், பட்லர் இணை. 11-வது ஓவரை பாண்டியா வீசினார். வெளுத்தார் பட்லர். முதல் மூன்று பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர். ஆனால், குல்தீப்பின் அடுத்த ஓவரில் ஹேல்ஸ் அவுட். கிளீன் போல்டு. குல்தீப்பின் மூன்றாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகள் விழுந்தது. இயான் மார்கன், பார்ஸ்டோவ், ஜோ ரூட் என இங்கிலாந்தின் டாப் ஆர்டர் அப்படியே குல்தீப் யாதவின் பந்துவீச்சில் காலியானது. 

பவர் ப்ளே ஓவர்களின்போது 200 ரன்கள் வரை அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி, குல்தீப்பின் சுழலால் சுருண்டது. 15 ஓவர்களின் முடிவில் 112 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருந்தாலும், மற்றொருபக்கம் மிரட்டிக்கொண்டிருந்த பட்லரைத் தனது கடைசி ஓவரில் வெளியே அனுப்பினார் குல்தீப். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் குல்தீப். ஆனால், டேவிட் வில்லியின் பவுண்டரிகளால் கடைசி நான்கு ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து, இந்தியாவுக்கு 159 ரன்கள் டார்கெட் வைத்தது இங்கிலாந்து. 

லோகேஷின் பவர்ஃபுல் சேஸ்!

சென்னை சூப்பர் கிங்ஸ் பெளலர் டேவிட் வில்லியுடன் இங்கிலாந்து தனது பெளலிங் அட்டாக்கைத் தொடங்கியது. முதல் பந்திலேயே பவுண்டரியுடன் தொடங்கிய ஷிகர் தவான், ஐந்தாவது பந்தில் அவுட். போல்டு. வழக்கமான 1 டவுன் பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு பதிலாகக் களமிறங்கியது, கே.எல். ராகுல்! இரண்டாவது ஓவரிலேயே சிக்ஸருடன் சீறினார் ராகுல். முதல் நான்கு ஓவர்களின் முடிவில் 38 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்தது இந்தியா. எதிர்முனையில் ரோஹித் ஷர்மா இருந்தாலும், ராகுலே அதிகப் பந்துகளை ஸ்ட்ரைக் செய்தார். ஓவருக்கு ஒன்று அல்லது இரண்டு பவுண்டரிகள் எனப் போய்க்கொண்டிருந்த இந்தியாவின் சேஸிங், 8-வது ஓவரில் களைகட்டியது.

மொயின் அலியின் இந்த ஓவரில் ஒரு சிக்ஸர், 1 பவுண்டரி உள்பட 16 ரன்கள் குவித்தது இந்தியா. மற்றொரு ஸ்பின்னரான ரஷித்தின் பந்துகளை ரோஹித், ராகுல் இருவரும் மாறி அடித்து விளாசினர். 27 பந்துகளில் அரை சதம் அடித்தார் ராகுல். 10 ஓவர்களின் முடிவில் 103 ரன்கள் குவித்தது இந்தியா.  31 பந்துகளில் 65 ரன்களுடன் ராகுல் இருக்க, மறுபக்கம் ரோஹித் ஷர்மா, 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 11-வது ஓவர் வீசிய லயம் ப்ளெங்க்கெட்டின் ஓவரில் மரண அடி அடித்தார் ராகுல். இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரி. இந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள். 

ராகுல்

மிகவும் பொறுப்பான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஷர்மா 14-வது ஓவரில் அவுட். 30 பந்துகளில் 32 ரன்கள் அடித்திருந்தார் ரோ'ஹிட்மேன்'. 2 டவுன் பேட்ஸ்மேனாக உள்ளே வந்தார் கேப்டன் கோலி. பயங்கர நிதானமாக ஆடினார். 15 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. வெற்றிக்கு இன்னும் 30 பந்துகளில் 23 ரன்கள் எடுக்க வேண்டும் என்கிற நிலை. ராகுல் 91 ரன்களுடன் சதம் அடிக்கும் கனவுகளுடன் காத்துக்கொண்டிருந்தார்.

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஸ்பின் எடுபடவில்லை என்பதால் வில்லி, ப்ளங்கெட் என வேகப்பந்து வீச்சாளர்களிடமே கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். 17-வது ஓவரை ப்ளெங்கெட் சிறப்பாக வீசினார். இந்த ஓவரின் ஒரு பந்தைத் தவிர மற்ற அனைத்தையுமே கோலிதான் எதிர்கொண்டார். ஆனால், அவரால் ரன்கள் அடிக்கமுடியவில்லை. இந்த ஓவரில் 4 ரன்கள்தான் கொடுத்தார் ப்ளங்கெட். ஆனால், வில்லியின் 18-வது ஓவரில் 10 ரன்கள் அடித்து, வெற்றிக்கு நான்கு ரன்களே தேவை என்கிற நிலைக்கு வந்தது இந்தியா. இந்த ஓவரின் கடைசிப் பந்தில் 100 ரன்கள் அடித்தார் ராகுல். மொயின் அலியின் 19-வது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்ஸருக்குப் பறக்கவிட்டு இந்தியாவின் இங்கிலாந்து டூரை வெற்றியுடன் தொடங்கிவைத்தார் கோலி.

இந்தியாவின் இந்த வெற்றி, மிகப்பெரிய பாசிட்டிவ் எனர்ஜியை அணிக்குள் கொடுக்கும். மாறாக இந்தத் தோல்வி, இங்கிலாந்து அணிக்கு `ஆஸ்திரேலிய வெற்றிகளை மறந்துவிடு... இப்போது விளையாடுவது இந்தியாவுடன்...' என இன்னும் வெறிகொண்டு ஆடவைக்கும். ஆட்டம் ஆரம்பம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்