`இளைஞர்கள் எல்லா விளையாட்டிலும் பங்கேற்க வேண்டும்’ - முன்னாள் கேப்டன் ஶ்ரீகாந்த் விருப்பம்

இளைஞர்கள் கிரிக்கெட் மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும் என முன்னாள் இந்திய அணி கேப்டனும் கிரிகெட் வீரருமான கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீகாந்த்


இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டநாயகனாக வலம் வந்தவர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த். 1980-களில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கி எதிர் அணியின் பந்துவீச்சுகளை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடித்தவர். தொலைக்காட்சி பரவலாகாத காலத்தில் வானொலி வழங்கிய வர்ணனையின் மூலம் ஶ்ரீகாந்த் ஆடிய ஆட்டத்தைக் கேட்டு ரசித்து அவரின் ரசிகர்களாகப் பல லட்சம் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டனர்.

முன்னாள் கேப்டன் ஶ்ரீகாந்த் மனைவியுடன் ராமேஸ்வரம் கோயிலில்

ராமேஸ்வரம் கோயிலுக்கு இன்று தன் மனைவி வித்யாவுடன் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார் ஶ்ரீகாந்த். ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சந்நிதிகளில் தரிசனம் செய்த பின்னர், உலகப் புகழ் பெற்ற கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை இருவரும் கண்டு ரசித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நான் 9-ம் வகுப்பு படிக்கும்போது ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து சென்றுள்ளேன். அப்போது இருந்ததைவிட தற்போது கோயில் சிறப்பான வகையில் உள்ளது. இதேபோல் திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிபட்டினம் கோயில்களும் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளன. 

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டை மட்டுமல்லாது அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். அதன் மூலம் தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு அந்தந்த விளையாட்டுகளில் சிறந்து விளங்க வேண்டும். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் சிறந்து விளங்க தங்கள் இஷ்ட தெய்வங்களைக் கும்பிட்டாலும்கூட அந்தத் தெய்வங்களின் அனுக்கிரகம் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!