வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:08:31 (05/07/2018)

`பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த கிமர் ரோச்' - மோசமான ஸ்கோரை பதிவுசெய்த வங்கதேசம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, டெஸ்ட் வரலாற்றில் தனது மோசமான இன்னிங்ஸை வங்கதேச அணி பதிவுசெய்துள்ளது. 

கிமர் ரோச்

@icc

ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று ஆண்டிகுவாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டர், முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணிக்கு வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக, கிமர் ரோச் வங்கதேச பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்தார். இவரது வேகத்தில் தமீம் இக்பால், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், சாகிப் அல் ஹசன், மகமதுல்லா  ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். லிட்டன் தாஸ் மட்டும் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 25 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. 

இதனால், 18.4 ஓவர்களுக்கு வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேசம் சுருண்டது. பந்துவீச்சில் அதிகபட்சமாக 8 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, கிமர் ரோச் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதேபோல 11 ரன்களை விட்டுக்கொடுத்து, கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெஸ்ட் வரலாற்றில் தனது மோசமான இன்னிங்ஸை வங்கதேச அணி பதிவுசெய்தது. இதற்கு முன் அந்த அணி, 62 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. இதேபோல குறைந்த ஓவர்களில் ஆல் அவுட் ஆன பட்டியலில், அந்த அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.  கடந்த 2015-ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, வங்கதேசம் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க