`எப்போதும் என் இதயத்தில் இருக்கிறான்' - உயிரிழந்த நண்பனை கௌரவப்படுத்தும் குரோஷிய கோல்கீப்பர்! | Croatia goalkeeper Subasic honors dead friend

வெளியிடப்பட்ட நேரம்: 06:54 (06/07/2018)

கடைசி தொடர்பு:08:11 (06/07/2018)

`எப்போதும் என் இதயத்தில் இருக்கிறான்' - உயிரிழந்த நண்பனை கௌரவப்படுத்தும் குரோஷிய கோல்கீப்பர்!

உயிரிழந்த தனது நண்பனுக்கு மரியாதைசெய்யும் விதமாகச் செயல்பட்ட குரோஷியா கால்பந்து அணியின் கோல்கீப்பருக்கு பாராட்டுகள் குவிகின்றன. 

கோல்கீப்பர் டேனிஜல் சுபாஷிக்

உலகக்கோப்பை கால்பந்து தொடரில்  கலக்கிவருகிறது குரோஷியா அணி. கடந்த 2-ம் தேதி நடந்த நாக் அவுட் சுற்றின் பரபரப்பான ஆட்டத்தில், டென்மார்க் அணியை வீழ்த்தி குரோஷியா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அந்த அணி காலிறுதிக்கு முன்னேறியதற்கு ஒரு காரணியாக இருந்து வருகிறார், குரோஷியா கோல்கீப்பர் டேனிஜல் சுபாஷிக். இதற்கிடையே, உலகக்கோப்பை ஆட்டங்களின்போது சுபாஷிக் தான் அணிந்திருந்த ஜெர்சிக்குள் மற்றொரு டி - ஷர்ட் அணிந்திருந்தார்.

இதுகுறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சுபாஷிக்கும் இவரது நெருங்கிய  நண்பரான கஸ்டிக்கும் கால்பந்து வீரர்கள். இருவரும் 2008-ம் ஆண்டு ஜடார் என்ற உள்ளூர் அணிக்காக முதல்தர போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடியுள்ளனர். அப்போது, ஒரு ஆட்டத்தில் பந்தை எடுக்கச் சென்றபோது, கஸ்டிக் தலையில் எதிர்பாராதவிதமாக பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சை பெற்றுவந்த கஸ்டிக் சிறிது நாள்களுக்குப் பின் உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பால் மிகவும் மனமுடைந்துபோன சுபாஷிக், நீண்ட நாள்களுக்குப் பின் அத்துயரிலிருந்து மீண்டு வந்துள்ளார். எனினும், தனது நண்பனை மறவாத வண்ணம் அன்று முதல் தான் பங்கேற்கும் போட்டிகளின்போதெல்லாம் கஸ்டிக் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கோல்கீப்பர் டேனிஜல் சுபாஷிக்

மேலும், `எப்போதும் உன்னுடனே இருப்பேன். எங்கே சென்றாய் ஏஞ்சலே' போன்ற வாசகங்களை இடம்பெறவைத்து, தனது நண்பனை கௌரவித்துவருகிறார். இந்தத் தகவல் வெளியே தெரியவர, இதுகுறித்து கூறிய சுபாஷிக், ``கஸ்டிக் எனது உயிர் நண்பன். அதனால்தான் அவன் எப்போதும் என்னுடன் இருக்கும் வகையில் அவனது படம் போட்ட டி - ஷர்ட்டை அணிந்துவருகிறேன். டி - ஷர்ட் மட்டுமில்லாமல் அவன் எப்போதும் என் இதயத்தில் இருக்கிறான்" என்று கூறி நெகிழவைத்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close