வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (07/07/2018)

கடைசி தொடர்பு:15:55 (07/07/2018)

'இறுதி ஆட்டத்தைக் காண நிச்சயம் வருவார்கள்!' - குகையில் சிக்கிய சிறுவர்களுக்காகக் கலங்கும் ஃபிஃபா

தாய்லாந்துக் குகையில் சிக்கியிருக்கும் சிறுவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப்பட்டு, உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டியைக் காண வருகை தர வேண்டும் என ஃபிஃபா அழைப்பு விடுத்துள்ளது. 

ஃபிஃபா

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிதான் தற்போது மொத்த நாடுகளையும் ஆட்கொண்டுள்ளது. எதிர்பாராத நிகழ்வுகளுடன் நடைபெறும் போட்டிகள், ரசிகர்களின் கவனத்தை வேறெங்கும் திசைதிருப்பாமல் இருக்கச்செய்கிறது. மொத்த ரசிகர்களும் கால்பந்து இறுதிப் போட்டிக்காகக் காத்திருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் பற்றிய செய்தி, வீடியோ போன்றவை மிகவும் கவனத்தை ஈர்த்துவருகிறது. 

கடந்த ஜூன் 23-ம் தேதியன்று, வடக்கு தாய்லாந்துப் பகுதியில் உள்ள தி தம் லுஅங் குகைக்குள் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் திடீரெனப் பெய்த கனமழையால் சிக்கிக்கொண்டனர். அதன்பிறகு, ஒருவாரமாகத் தீவிர தேடுதல் பணி நடைபெற்றது. இந்த மீட்புப் பணியில், தாய்லாந்து மீட்புப் படையினருடன் சீனா, மியான்மர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாட்டைச் சேர்ந்த 1000 மீட்புப் படையினர் பங்கேற்றனர். 10 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சிறுவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குகை முழுவதும் பலஅடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளதால், அவர்களைக் கண்டுபிடித்தும் வெளியில் கொண்டுவர முடியாமல் மீட்புப்படையினர் திணறிவருகின்றனர். தண்ணீரில் நீந்தும் அளவுக்கு சிறுவர்களின் உடல்நிலை சரியில்லை என்றும் குகையினுள் தண்ணீரின் அளவு அதிகமாக இருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 

ஃபிஃபா

இந்நிலையில், குகையினுள் உள்ள சிறுவர்கள் விரைவில் மீட்கப்பட்டு, அனைவரும் உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நேரில் காண வர வேண்டும் என ஃபிஃபா அமைப்பின் தலைவர் கியான்னி இன்ஃபான்டினோ அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தாய்லாந்து கால்பந்து அமைப்புக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், "குகையினுள் சிக்கியிருக்கும் சிறுவர்களும் அவர்களது குடும்பத்தினரும் படும் துயரத்தில் நாங்களும் பங்குகொள்கிறோம். அவர்களுக்கு எங்களின் ஆதரவு எப்போதும் உள்ளது. சிறுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்ற செய்தி வந்த வண்ணம் உள்ளது. அவர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் என்று நம்புகிறோம். உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி, வரும் ஜூலை 15-ம் தேதி மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அதற்குள், சிறுவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பயணம்செய்ய அவர்களின் உடல் ஒத்துழைத்தால் அனைவரும் ஃபிஃபா இறுதிப்போட்டியில் பங்கேற்க வேண்டும். சிறுவர்கள் அனைவரும் எங்களுடன் சேர்ந்து இறுதிப் போட்டியை நிச்சயம் நேரில் பார்ப்பார்கள் என நம்புகிறேன்" என எழுதியுள்ளார்.