வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (08/07/2018)

கடைசி தொடர்பு:11:52 (08/07/2018)

இரண்டு ஹெட்டர் கோல்... இரண்டு அட்டகாச Save... ஸ்வீடனை வீழ்த்தியது இங்கிலாந்து! #SWEENG #WorldCup

மற்ற முன்னணி அணிகளைப் போல் தடுமாறாமல், ஸ்வீடனுக்கு அடிகொடுத்து வெளியேற்றி, 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதியும் பெற்றுவிட்டது த்ரீ லயன்ஸ்!

இரண்டு ஹெட்டர் கோல்... இரண்டு அட்டகாச Save... ஸ்வீடனை வீழ்த்தியது இங்கிலாந்து!  #SWEENG #WorldCup

​ஸ்வீடன் - இந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய சென்சேஷன். பெரிய வெற்றிகள் பெறவில்லை. ஆனால், பெரிய அணிகளின் இடத்தை சைலன்ட்டாக அபகரித்து அவர்களுக்கு வேட்டு வைத்தது அந்த அணி. உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் குரூப் பிரிவில் நெதர்லாந்து அணியின் உலகக் கோப்பை வாய்ப்பைத் தகர்த்தது. ​பிளே ஆஃப் சுற்றில் நான்கு முறை சாம்பியன் இத்தாலியை போட்டுத் தள்ளியது. உலகக் கோப்பை குரூப் பிரிவில் ஜெர்மனியுடன் தோற்றாலும், மற்ற 2 வெற்றிகளால் நடப்பு சாம்பியன் வெளியேறக் காரணமாக அமைந்தது. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அணிக்கு அடி கொடுத்த ஸ்வீடனை எதிர்கொண்டது கால்பந்தின் சோக்கர்களான இங்கிலாந்து. ஆனால், மற்ற முன்னணி அணிகளைப் போல் தடுமாறாமல், ஸ்வீடனுக்கு அடிகொடுத்து வெளியேற்றி, 28 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பை அரையிறுதிக்குத் தகுதியும் பெற்றுவிட்டது த்ரீ லயன்ஸ்!

இங்கிலாந்து

ஸ்வீடன் அணியில் ஸ்டார் வீரர்கள் இல்லை. டெக்னிக்கல் பிளேயர்கள் இல்லை. அதனால் டிஃபன்ஸ்தான் அவர்களின் மிகப்பெரிய் ஆயுதம். எதிரணியை கோலடிக்க விடாமல் தடுத்து, ஏரியல் பால்கள் மற்றும் செட் பீஸ்கள் மூலமாக கோலடிப்பதுதான் அவர்களின் ஸ்டைல். அதை உடைக்கத்தான் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து அணிகள் சிரமப்பட்டன. ஆனால், இங்கிலாந்து அதை சிறப்பாகச் செய்தது. ஸ்வீடன் டிஃபன்ஸை பல முறை சோதித்தபோதும், மோசமான ஃபினிஷிங்கால் அவர்களால் கோலடிக்க முடியாமலேயே இருந்தது. 

7-வது நிமிடம், ஸ்வீடன் வீரர்களிடமிருந்து பந்தைப் பறித்தார் டெலே அல்லி. கேன் த்ரூ பாலுக்காகக் காத்திருந்தார். ஒரு நல்ல பாஸ், அதை கோலாக்கியிருக்கும். அல்லி மோசமாக பாஸ் செய்ய, கோல் வாய்ப்பு பறிபோனது. அதன்பின் அடுத்த சில நிமிடங்கள் ஆட்டம் மிகவும் சுமாராகவே இருந்தது. இரு அணிகளும் தொடர்ந்து மோசமான பாஸ்களால் பொசஷனை இழந்தனர். 19-வது நிமிடம் இங்கிலாந்து கவுன்ட்டர் அட்டாக் செய்தது. ஸ்டெர்லிங் பாக்சுக்கு வெளியே கொடுத்த பாஸை, கேன் அடிக்க, மிகச்சிறிய இடைவெளியில் பந்து வெளியே சென்றது.அதன்பின் இங்கிலாந்து அணியின் வேகம் கூடியது. 

மகுயர்

ஆட்டத்தின் 30-வது நிமிடம் முதல் கோலை அடித்தது த்ரீ லயன்ஸ். கார்னர் கிக் மூலம், ஆஷ்லி யங் கொடுத்த கிராஸை அற்புதமாக முட்டி ஹெட்டர் கோல் அடித்தார் ஹேரி மகுயர். இங்கிலாந்து அணிக்காக அவர் அடிக்கும் முதல் கோல் இது. இதுவரை முதல் பாதியின் முடிவில் பின்தங்கிய போட்டிகளை ஸ்வீடன் வென்றதில்லை. அதனால் அவர்கள் முன்னமே கோல் அடிக்க அதிரடியாக் ஆடினார்கள். ஆனால், அவர்களின் வாய்ப்புகள் அனைத்தும் தடுக்கப்பட்டது. அதே சமயம், இங்கிலாந்து அணி முன்னிலையை அதிகப்படுத்தும் வாய்ப்பு இரண்டு முறை ஸ்டெர்லிங்குக்குக் கிடைத்தது. முதலில் ஆஃப் சைட் பொசிஷனில் நின்று அதைக் கெடுத்தவர், அதன்பின் ஹெண்டர்சன் கொடுத்த மேஜிக்கல் பாஸையும் கோலாக்காமல் கோட்டை விட்டார். முதல் பாதி 0-1 என முடிவுக்கு வந்தது. 

இரண்டாவது பாதி தொடங்கியதுமே அட்டாகிங் ஆட்டத்தைக் கையில் எடுத்தது ஸ்வீடன். 47-வது நிமிடம் கிடைத்த ஒரு அட்டகாசமான கிராஸை, பெனால்டி ஏரியாவில் நின்றிருந்த ஸ்வீடன் ஸ்ட்ரைக்கர் பெர்க் ஹெட்டிங் செய்ய, அதை அற்புதமாகத் தடுத்தார் இங்கிலாந்து கோல்கீப்பர் ஜோர்டன் பிக்ஃபோர்ட். அதன்பிறகு இங்கிலாந்து அணி இரண்டு முறை ஸ்வீடன் ஏரியாவில் கோலடிக்க முயன்று ஏமாந்தது. ஆனால், 58-வது நிமிடம், அந்த ஏமாற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த அணி. மிகவும் கூலாக பாக்சுக்கு அருகில் பாஸ் செய்து, ஸ்வீடனுக்கு நெருக்கடி கொடுத்தது லிங்கார்ட் - ட்ரிப்பியர் கூட்டணி. அந்த பாஸிங்குக்கு நடுவே லிங்கார்ட், ஒரு கிராஸ் கொடுக்க, கோல் போஸ்டுக்கு அருகில் இருந்த டெலே அல்லி, அதை கோலாக்கினார். இங்கிலாந்து 2-0!

டெலே அல்லி

அந்த கோல் அடிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து டிஃபன்ஸ் ஆட்டம் கண்டது. வேகமாக கவுன்ட்டர் அட்டாக் செய்து, இங்கிலாந்து பாக்சுக்குள் நுழைந்தது ஸ்வீடன் முன்களம். கிளாசன் அடித்த பந்தை சூப்பராக டைவ் அடித்துத் தடுத்தார் பிக்ஃபோர்ட். ரீபௌண்ட் ஆன அந்தப் பந்து ஸ்வீடன் வீரர்களின் கால்களிலேயே சுற்றியது. நிச்சயம் கோலாகியிருக்க வேண்டிய ஷாட்டை சரியான நேரத்தின் வந்து பிளாக் செய்தார் ஹெண்டர்சன். ஸ்வீடன் அணியின் அற்புதமான மூவ் வீணானது. 

ஸ்வீடன் வீரர்களில் மிகவும் பரிதாபத்துக்குரியவர் மார்கஸ் பெர்க் தான். ஐக்கிய அரபு அமீரக லீகில் ஆடும் அவர், கடந்த சீசனில் 21 போட்டிகளில் 25 கோல்கள் அடித்து அசத்தியிருந்தார். அந்த அளவுக்கு கன்சிஸ்டென்ட்டான ஸ்ட்ரைக்கர். ஆனால், இந்த உலகக் கோப்பையில் அவரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. 5 போட்டிகளில், கோல் நோக்கி 16 ஷாட்கள்! ஆனால், ஒன்று கூட கோல் ஆகவில்லை என்பதுதான் சோகம். நேற்றும்  அவர் அடித்த அற்புதமான 2 ஷாட்களை, மிக அற்புதமாகத் தடுத்தார் பிக்ஃபோர்ட். கடைசிவரை இந்த உலகக் கோப்பையில் கோல் போடாமலேயே வெளியேறினார் பெர்க். 

pickford

நேரம் செல்லச் செல்ல, இங்கிலாந்து அணியின் வேகம் கொஞ்சம் குறைந்தது. நடுகளத்தையும், டிஃபன்ஸையும் பலப்படுத்தினார்கள். ஸ்வீடன் அணியின் முயற்சிகள் நடுகளத்திலேயே தடுக்கப்பட்டன. ஏரியால் பால்கள் சிறப்பாக கையாளப்பட்டு வெளியேற்றப்பட்டன. இங்கிலாந்து கூலாக வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காலிறுதி வரை வந்த ஸ்வீடன் அணி ரசிகர்களின் கரகோஷத்தோடு வெளியேறியது.


டிரெண்டிங் @ விகடன்