`தோனியின் டி20 சாதனை!’ - தொடரை வெல்ல இந்திய அணிக்கு 199 ரன்கள் இலக்கு

இந்திய அணிக்கெதிரான  மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. 

இந்திய அணி

Photo Credit: BCCI

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் ஏற்கெனவே முடிந்து விட்டன. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி பிரிஸ்டோல் நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக தீபக் சஹார் மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, இந்தப் போட்டி மூலம் தீபக் சஹார் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகிறார். போட்டிக்கு முன்னதாக, அவருக்கு இந்திய அணியின் தொப்பியை கேப்டன் விராட் கோலி வழங்கினார். இங்கிலாந்து அணியில் ஜோ ரூட்டுக்குப் பதிலாக பென் ஸ்டோக்ஸ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இங்கிலாந்து தொடக்க வீரர்கள், பவர் ஃப்ளே ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவர்களில் 94 ரன்கள் குவித்திருந்த நிலையில், இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. 34 ரன்கள் சேர்த்திருந்த ஜோஸ் பட்லர், சித்தார்த் கவுல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 9.1 ஓவர்களில் 100 ரன்களை எட்டி மிரட்டியது. இதனால், அந்த அணியின் ஸ்கோர் 200 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 23 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்திய ஜேசன் ராய், 67 ரன்களில் ஆட்டமிழந்தார். தீபக் சஹார் வீசிய பத்தாவது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் (30), பேரிஸ்டோவ் (25) ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனால், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், இந்தப் போட்டியில் 5 கேட்சுகள் பிடித்த தோனி, டி20 போட்டி ஒன்றில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசமாக்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!