வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:18:10 (10/07/2018)

`டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடத்த தடை விதிக்க வேண்டும்'- கேளிக்கைவரி சட்ட மீறல் எனப் புகார்!

நெல்லையில் நாளை தொடங்கவுள்ள டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு உள்ளாட்சி அமைப்புகளில் முறைப்படி முன்வைப்புத் தொகை செலுத்தி அனுமதி பெறாமல் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது தமிழக கேளிக்கைச் சட்டத்துக்கு விரோதமானது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

டிஎன்பிஎல் கிரிக்கெட்

தமிழ்நாடு பிரீமியர் லீக் எனப்படும் டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நெல்லையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் மைதானத்தில் நாளை (11-ம் தேதி) தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை, காஞ்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 32 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நெல்லை இந்தியா சிமென்ட்ஸ் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மைதானங்களில் தலா 14 போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதிப் போட்டி உள்ளிட்ட 4 ஆட்டங்களும் நடக்க இருக்கின்றன. 

இந்த நிலையில், இந்தப் போட்டிகள் தமிழக கேளிக்கைச் சட்டத்துக்கு முரணாக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலரான முத்துராமன், போட்டி நடைபெற இருக்கும் இந்தியா சிமென்ட்ஸ் மைதானம் அமைந்துள்ள சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் கேளிக்கை வரி அலுவலருக்கு புகார் மனுவை அனுப்பியுள்ளார். 

முத்துராமன் - சமூக ஆர்வலர்

அதில், ``தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரிச் சட்டம் 2017-ன் படி ஐ.பி.எல்., டி.என்..பி.எல்., 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும். அத்துடன், பேரூராட்சியில் உரிய முன்வைப்புத் தொகை செலுத்தி அனுமதி பெற வேண்டும். ஆனால், நெல்லையில் நடக்க இருக்கும் போட்டிகளுக்கு முறைப்படி அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. அத்துடன், போட்டிகளைப் பார்க்க வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு 5,000 பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

உரிய அனுமதி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளியின் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தப் போட்டிகள் சட்டத்துக்கு விரோதமாக நடக்க இருக்கிறது. அதனால் இது குறித்து உரிய விசாரணை நடத்தி, அனுமதி பெறாமல் நடத்தப்படும் இந்தப் போட்டிகளுக்கு சங்கர்நகர் சிறப்பு பேரூராட்சி நிர்வாகம் தடை விதிக்க வேண்டும்’’ என வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியின் ஒருங்கிணைப்பாளரான ஆர்.என்.பாபா கூறுகையில், ’’டி.என்.பி.எல் போட்டிகளைப் பொறுத்தவரையிலும் எப்போதுமே அனைத்து விதிமுறைகளையும் சட்டத்துக்கு உட்பட்டு கடைபிடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். கடந்த இரு ஆண்டுகளிலும் நடத்தப்பட்ட போட்டிகளிலும் விதிமுறைப்படியும் கேளிக்கை வரிச் சட்டத்துக்கு உட்பட்டும் டிக்கெட்டுகளுக்கான வரித் தொகையை முறைப்படி கட்டியிருக்கிறோம். 

இந்த ஆண்டிலும், பாதுகாப்பு தொடர்பாக காவல்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற்ற பின்னரே, போட்டிகளை நடத்துகிறோம். நாங்கள் எப்போதுமே சட்டத்துக்கு உட்பட்டு அனைத்து அனுமதிகளையும் வாங்கியே போட்டிகளை நடத்துவோம். ஒரு சிலர், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக இது போன்று சர்ச்சைகளை கிளப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நாங்கள் அதற்கெல்லாம கவலைப்படப் போவதில்லை’’ என்று முடித்துக் கொண்டார்.