வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (10/07/2018)

கடைசி தொடர்பு:14:00 (10/07/2018)

போலிச் சான்றிதழால் பறிபோன மகளிர் டி20 கேப்டனின் டி.எஸ்.பி. பதவி!

இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக, அவருக்கு வழங்கிய டி.எஸ்.பி பதவியை ரத்து செய்தது பஞ்சாப் அரசு.

ஹர்மன்ப்ரீத் கவுர்

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் அதிரடியில் ஜொலித்தார் ஹர்மன்ப்ரீத் கவுர். இவர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். கிரிக்கெட்டில் சிறப்பாகப் பங்காற்றியதற்காக, அவருக்கு காவல்துறையில் டி.எஸ்.பி. பதவியை வழங்கி கெளரவப்படுத்தியது அம்மாநில அரசு. இதையடுத்து, டி.எஸ்.பி. பதவிக்காக மீரட்டில் உள்ள சௌத்ரி ஷரன் சிங் பல்கலைக்கழகத்தில் தான் பெற்ற பி.ஏ. பட்டத்தைச் சமர்ப்பித்திருந்தார் ஹர்மன்ப்ரீத்.

அவரது சான்றிதழின் உண்மைத் தன்மையைக் கண்டறிய காவல்துறை சார்பில் பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், `ஹர்மன்ப்ரீத் படித்தது தொடர்பான பதிவுகள் எதுவும் எங்களிடம் இல்லை' என்று பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையிடம் தெரிவித்தது. இதுதொடர்பாக, பஞ்சாப் முதலமைச்சர் தலைமையிலான மாநில உள்துறைக்குப் போலீஸார் அறிக்கை அனுப்பியதாகத் தகவல் வெளியாகியது. இதனால், போலிச் சான்றிதழ் வழங்கிய சர்ச்சையில் சிக்கினார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இந்நிலையில், போலிச் சான்றிதழ் சமர்ப்பித்ததற்காக அவருக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பி பதவியை ரத்து செய்தது பஞ்சாப் அரசு. மேலும், அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் பெற்ற அர்ஜுனா விருதை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஹர்மன்ப்ரீத் கவுரின் மேனேஜர் கூறுகையில், `அவரின் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக பஞ்சாப் காவல்துறையிடமிருந்து எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை. இதே சான்றிதழைத்தான் ரயில்வே துறையிலும் சமர்ப்பித்தார். இப்படி இருக்கும்போது, காவல்துறையில் சமர்ப்பித்த சான்றிதழ் மட்டும் எப்படி போலித்தனமாக இருக்கும்' என்றார்.