ஊக்கமருந்து சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்! விரைவில் நடவடிக்கை | Ahmed Shehzad charged over positive test for banned substance, says PCB

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (10/07/2018)

கடைசி தொடர்பு:18:20 (10/07/2018)

ஊக்கமருந்து சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர்! விரைவில் நடவடிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அகமது செஷாத், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். அவர்மீது ஐசிசி விதிமுறைகள் அடிப்படையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருக்கிறது. 

பாகிஸ்தான் வீரர் அகமது செஷாத்

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர் ஒருவர், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியிருப்பதாக அந்நாட்டுக் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தெரிவித்திருந்தது. ஆனால், ஐசிசி விதிமுறைகளின்படி, வேதியியல் சோதனை நிறைவுக்குப் பின்னரே, அவரது பெயரை வெளியிட வேண்டும் என்று கூறி, அவரது பெயரை அப்போது வெளியிட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தனிப்பட்ட அமைப்பு ஒன்று நடத்திய சோதனையின் முடிவுகள், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த முடிவுகளை ஆய்வுசெய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், குறிப்பிட்ட அந்த கிரிக்கெட் வீரரின் ரத்த மாதிரியில், தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து இருப்பதை உறுதிசெய்துள்ளது. இதையடுத்து, அந்த சர்ச்சையில் சிக்கிய வீரர் அகமது செஷாத் என்று கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. மேலும், இதுதொடர்பாக அவர்மீது  விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மோசமான ஃபார்ம் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவந்த அகமது செஷாத், கடந்த ஜூன் மாதம் ஸ்காட்லாந்து  அணிக்கெதிரான தொடரில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்தார். பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்திய அந்தத் தொடரில், மொத்தம் 38 ரன்கள் மட்டுமே அவர் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.