``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம் | Ronaldo letter to real Madrid fans

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (11/07/2018)

கடைசி தொடர்பு:09:15 (11/07/2018)

``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். 

ரொனால்டோ

அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக முன்னரே பல தகவல்கள் வந்தாலும்,  33 வயதான ரொனால்டோ தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவார் என நினைத்திருந்த வேளையில், அவரின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள் மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

கடந்த 2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்த ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகள் ரியல் மாட்ரிட் அணிக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். இதுவரை ரியல் மாட்ரிட்  அணிக்காக 438 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 451 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இரண்டு முறை லா லீகா சாம்பியன், நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரின் சாம்பியன், மூன்று கிளப் உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் என அந்த அணியை உச்சம் தொட வைத்தார். தனிப்பட்ட முறையிலும் ரொனால்டோ ரியல் மாட்ரிட்  அணிக்காக விளையாடும்போது பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார். இதனால் ரொனால்டோ என்றால், ரியல் மாட்ரிட்  ரியல் மாட்ரிட்  என்றால் ரொனால்டோ என ரசிகர்கள் கொண்டாடினர். இதனால்தான் அவரின் இந்த முடிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
 
இந்நிலையில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``இத்தனை காலம் ரியல் மாட்ரிட் அணியிலும், மாட்ரிட் நகரத்திலும் நான் இருந்ததுதான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலகட்டம் வந்து விட்டதாக நம்புகிறேன். அதனால்தான் இந்த மாற்றம். ரியல் மாட்ரிட் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றைத் தான். எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள். 

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய 9 வருடங்களும் பொற்காலம். இங்கே கால்பந்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். களத்திலும் ஓய்வு அறையிலும் எனக்குக் கிடைத்த சிறந்த சக வீரர்களுக்கும் நன்றி. ரியல் மாட்ரிட் கிளப், மருத்துவக்குழு, தொழில்நுட்பக்குழு உட்பட அனைவருக்கும் நன்றி” என்றார். 

ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ் அணிக்காக 112 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 902 கோடி ரூபாய். 


[X] Close

[X] Close