`நீ என்னை பைத்தியம்னு நினைக்கிறீயா?' தோனி சீறிய அந்த நாளை நினைவூட்டிய குல்தீப்  | Do you think I'm mad? MSDhoni Lost His Cool

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (11/07/2018)

கடைசி தொடர்பு:13:23 (12/07/2018)

`நீ என்னை பைத்தியம்னு நினைக்கிறீயா?' தோனி சீறிய அந்த நாளை நினைவூட்டிய குல்தீப் 

இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியின்போது தோனி தன்னிடம் கோபப்பட்டதாகக் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

குல்தீப் யாதவ்

Photo Credit:BCCI

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியைப் பொறுமையின் திலகம் என்றே கூறலாம். மிஸ்டர் கூல் என்ற அடைமொழிகூட அவருக்கு உண்டு. எவ்வளவு இக்கட்டான சூழலிலும் பொறுமையைக் கையாண்டு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளார். மிஸ்டர் கூல் தோனியை ஓர் இந்தியப் பந்துவீச்சாளர் கோபப்படுத்தியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.  வாட் தி டக் என்ற இணையத் தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்று பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர். களத்தில் வீரர்களிடையே நடக்கும் உரையாடல்கள் குறித்த தகவலும் இதில் பகிரப்படுகிறது. குல்தீப் யாதவும் சாஹலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதில் பேசிய குல்தீப் யாதவ், இந்தூரில் நடைபெற்ற இந்தியா - இலங்கைக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியின்போது தோனி தன்னிடம் கோபப்பட்டதாகத் தெரிவித்தார். "மைதானம் சிறியதாக இருந்ததால் நான் வீசிய பந்துகள் சிக்ஸருக்கு பறந்துகொண்டிருந்தது. நான் தோனியைப் பார்த்தேன். சிறப்பாகப் பந்துவீசச் சொன்னார். நான் என்னுடைய நான்காவது ஓவரை வீசும்போது பேட்ஸ்மேன் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். தோனி என்னிடம் வந்து ஃபீல்டிங் செட்டப்பை மாற்றச் சொன்னார். கவர் திசையில் இருந்த ஃபீல்டரை நீக்கிவிட்டு டீப்பில் நிற்கச் சொல்லுமாறு கைகாட்டினார். நான் பரவாயில்லை; மகி பார்த்துக்கொள்கிறேன் என்றேன். இதைக்கேட்ட மறுகணமே தோனி வெடிக்கத் தொடங்கிவிட்டார். `நீ என்னை பைத்தியம்னு நினைக்கிறீயா, நான் 300 ஒருநாள் போட்டி விளையாடி இருக்கேன்" எனத் தோனி கூறியதாகக் குல்தீப் தெரிவித்தார். தோனியின் அட்வைஸ்படி ஃபீல்டிங்கை அட்ஜஸ்ட் செய்த பிறகு, விக்கெட்டுகளை எடுக்க முடிந்ததாகக் குல்தீப் கூறினார். இந்தப் போட்டியில் குல்தீப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரோகித் ஷர்மாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.