வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கிய புகைப்பட கலைஞர்...! # Viral #ENGCRO | An news agency photographer was get locked in the goal celebration

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (12/07/2018)

கடைசி தொடர்பு:12:41 (12/07/2018)

வெற்றிக் கொண்டாட்டத்தில் சிக்கிய புகைப்பட கலைஞர்...! # Viral #ENGCRO

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் முதலில் அடியெடுத்து வைத்தது பிரான்ஸ். நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அடியெடுத்துவைத்தது குரோஷியா. வரும் 15-ம் தேதி நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் பிரான்ஸுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது குரோஷியா.

புகைப்பட கலைஞர்

இந்தப் போட்டியில் ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் இரு அணிகளும் தலா ஒரு கோலுடன் சம நிலையில் நீடித்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. முதல் கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது கூடுதல் நேரத்தில் குரோஷியா தனது இறுதிப்போட்டிக்கான கோலை அடித்தது. 

இந்த வெற்றியை குரோஷியா கால்பந்து வீரர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அப்போது தடுப்பைத் தாண்டி இருக்கும் புகைப்பட கலைஞர்கள் முன்பு நின்று கொண்டாடினர். பின்னால் இருந்து வந்த சக வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி கோலை கொண்டாடினர். அப்போது எதிர்பாராத விதமாக ஏ.எஃப்.பி மெக்சிகோ செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் யூரி கோர்டெஸ் மீது விழுந்தனர். மீதம் இருந்த வீரர்களும் பாய்ந்து மேலே விழ, புகைப்படக் கலைஞர் கீழே சிக்கிக்கொண்டார். அவரிடம் இரண்டு விலை உயர்ந்த கேமராவும் இருந்தது. நிலை தடுமாறினாலும் அவர் தொடர்ந்து புகைப்படங்களை எடுக்கத் தவறவில்லை. 

வீரர்களின் கொண்டாட்டத்தின் நெருக்கத்தில் புகைப்படங்கள் எடுத்தார். குரோஷிய முன்கள வீரர் மாரியோ, அவருக்கு கை கொடுத்து உதவ முயன்றது வரை அவர் அழகாக தன் கேமராவில் பதிவு செய்துள்ளார். பின்னர் அவருக்கு கைகொடுத்து எழுந்து நிற்க உதவி செய்தனர். குரோஷிய வீரர் விடா அவரின் நெற்றியில் முத்தமிட்ட புகைப்பட கலைஞரையும் கொண்டாட்டத்தில் இணைத்துக்கொண்டார். 
இந்த நேரத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில்,  ஏ.எஃப்.பி செய்தி ஊடகம், யாரும் கவலைகொள்ள வேண்டாம். யூரி நலமுடன் இருக்கிறார்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.