`இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்த குல்தீப்' - இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்கு! | england scores 268 runs against india - kuldeep takes first 5-wkt haul in ODIs

வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (12/07/2018)

கடைசி தொடர்பு:08:35 (13/07/2018)

`இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைத் திணறடித்த குல்தீப்' - இந்திய அணிக்கு 269 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 268 ரன்கள் எடுத்துள்ளது. இதில், குல்தீப் யாதவ் அசத்தலாகப் பந்து வீசி  6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

குல்தீப் யாதவ்

photo credit : @icc

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஏற்கெனவே, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 - 1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதற்கிடையே, இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி ட்ரென்ட்ஃபிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கோலி, முதலில் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரெய்னா, சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவிடம் டி20 தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து, ஒருநாள் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதற்காகக் கடந்த ஒரு வாரமாகப் பல்வேறு விதமான பயிற்சிகளில் ஈடுபட்டது. அதன்படி, இங்கிலாந்துக்கு ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்  தொடக்க வீரர்களாகக் களம் புகுந்தனர். இருவரும் நிதானமாக ஆடினர். ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களைச் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நிலைகுலையவைத்தார். 

கேப்டன் மோர்கன் உள்ளிட்ட அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, ஸ்டோக்ஸ், பட்லர் ஜோடி ஓரளவுக்கு இங்கிலாந்தின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அரை சதம் கடந்த நிலையில், குல்தீப் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர். இங்கிலாந்து பேட்ஸ்மேன் அனைவரையும் ஒவ்வொருவராக வெளியேறினார். 10 ஓவர்களுக்கு 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், ஒருநாள் போட்டியில் முதல் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதுடன், தனது பெஸ்ட் இன்னிங்ஸையும் பதிவுசெய்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 6 விக்கெட்டுகளை எடுத்த முதல் இடது கை சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார். இதையடுத்து, 49.5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக,  பட்லர் 53 ரன்களும் ஸ்டோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து, 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க