`சிக்ஸர்’ குல்தீப்... ரன் மெஷின் ரோஹித்... பணிந்து பதுங்கிய இங்கிலாந்து! #EngvInd

சொந்த மண்ணில் கோலி அண்ட் கோ-வை சுழற்றி அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து குல்தீப் சுழலிலும், ரோஹித்தின் அதிரடியிலும் பதுங்கி பணிந்திருக்கிறது. டி20 போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இந்தியா செம ஈஸியாக வென்றுவிடும் என்கிற பரவச மகிழ்ச்சி பட்டாசைக் கொளுத்தியிருக்கிறது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

`சிக்ஸர்’ குல்தீப்... ரன் மெஷின் ரோஹித்... பணிந்து பதுங்கிய இங்கிலாந்து! #EngvInd

சொந்த மண்ணில் கோலி அண்ட் கோ-வை சுழற்றி அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து, குல்தீப் சுழலிலும், ரோஹித்தின் அதிரடியிலும் பதுங்கி பணிந்திருக்கிறது. டி20 போலவே ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் இந்தியா செம ஈஸியாக வென்றுவிடும் என்கிற பரவச மகிழ்ச்சி பட்டாசைக் கொளுத்தியிருக்கிறது முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி. #EngvInd

#EngvInd

டாஸ்!
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 481 ரன்கள் அடித்த பிட்ச் இந்த நாட்டிங்ஹாம் பிட்ச். அதனால் பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்ச்சில் யார் டாஸ் வென்றாலும் முதலில் பெளலிங்கைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றதுபோலவே டாஸ் வென்ற கோலி பெளலிங்கையே தேர்ந்தெடுத்தார். 

மீண்டும் சுரேஷ் ரெய்னா!
காயம் முழுமையாக குணமடையாததால் புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக சித்தார்த் கவுல் அணியில் இடம்பிடித்திருந்தார். அதேபோல, பேட்டிங் வரிசையில் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னாவையே தேர்வுசெய்திருந்தார் கோலி. 
இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக அலெக்ஸ் ஹேல்ஸ் விளையாடமுடியாமல் போக, அவருக்கான இடத்தில் பென் ஸ்டோக்ஸ் வந்தார். இதனால் ஜோ ரூட்டின் இடம் தப்பித்தது.

பரபர ஓப்பனிங்!
இங்கிலாந்தின் சூப்பர் ஹிட் ஓப்பனிங் ஜோடியான ஜேஸன் ராயும், ஜானி பாரிஸ்டோவும் அதிரடியாக ரன்களை அடிக்கத்தொடங்கினர். உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் இருவருமே பவர் ப்ளே ஓவர்களில் அடி வாங்கினர். 8 ஓவர்களில் இங்கிலாந்து 56 ரன்கள் அடித்தது. முதல் 8 ஓவர்களிலும் பெளலிங் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் இருவரையும் மாற்றி மாற்றி பந்துவீசவைத்தார் கோலி. 9-வது ஓவரில்தான் முதல் மாற்றமாக சாஹல் பந்துவீசவந்தார். இந்த ஓவரில் 7 ரன்கள் கொடுத்தார் சாஹல். அடுத்த ஓவரை மற்றொரு ஸ்பின்னரான குல்தீப்புக்கு கொடுக்காமல் ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்தார் கோலி. ஆனால், இந்த ஓவரில் 8 ரன்கள் போனது. 11-வது ஓவரில் குல்தீப் யாதவிடம் வந்தது.

கோலி ரோஹித் குல்தீப்

டர்னிங் குல்தீப்!
முதல் டி20யில் குல்தீப்பிடம் வாங்கிய அடியை இங்கிலாந்து மறந்துவிட்டது என்பது முதல் ஓவரிலேயே புரிந்தது. குல்தீப்பின் முதல் பந்தில் இரண்டு ரன்கள் அடித்த ஜேஸன் ராய், அடுத்தப் பந்தை குல்தீப் எப்படிப் போடுகிறார் என்பதைப் பார்க்காமல் முன்முடிவோடு ரிவர்ஸ் ஸ்வீப் ஆட, அதே அல்வா போல உமேஷ் யாதவின் கைக்குப் போனது. 73 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. 38 ரன்களுக்கு வெளியேறினார் ராய்.

1 டவுன் வந்தவர் ஃபார்மிலேயே இல்லாத ஜோ ரூட். குல்தீப்பின் அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே எல்.பி.டபுள்யு ஆனார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் மீண்டும் ஒரு எல்.பி.டபிள்யு. இந்தமுறை ஜானி பாரிஸ்டோவ். நடுவர் அவுட் கொடுக்காமல் இருக்க, ரிவியூ கேட்டார் கோலி. இந்திய அணியின் முடிவு சரி. ராய் போலவே பாரிஸ்டோவும் 38 ரன்களுடன் வெளியேறினார். 2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார் குல்தீப்!

பயந்துபோன ஸ்டோக்ஸ்!
``ரெய்னாவை ஏன் அணிக்குள் எடுக்கிறேன் என்று தெரியுமா?'' என்பதை நிரூபிப்பதற்காக ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக 14-வது ஓவரை சுரேஷ் ரெய்னாவிடம் கொடுத்தார் கோலி. ரெய்னாவின் முதல் ஓவரே மெய்டன் ஓவர். இயான் மோர்கன் எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை. குல்தீப்பின் அடுத்த ஓவரில் பென் ஸ்டோக்ஸ் அநியாயத்துக்குப் பயந்து ஆடினார். இந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே. இங்கிலாந்தின் ரன் ரேட் அப்படியே குறையத் தொடங்கியது.

17 ஓவர்களின் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களுடன் இருந்தது இங்கிலாந்து. 20-வது ஓவர் சாஹலிடம் வந்தது. இரண்டாவது பந்திலேயே கேப்டன் இயான் மோர்கன் அவுட். 19 ரன்கள் எடுத்திருந்தார் மோர்கன். பென் ஸ்டோக்ஸும், ஜோஸ் பட்லரும் கூட்டணி சேர்ந்தனர். விக்கெட்டுகள் விழாமல் தடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் ஸ்டோக்ஸ். இதனால் அவர் டாட் பால்களைப் பற்றி கவலைப்படவில்லை. 51 பந்துகளில் 23 ரன்கள் அடிக்கும் அளவுக்கு அநியாயப் பொறுமை. ஆனால், ஜோஸ் பட்லர் அடித்து ஆடிக்கொண்டிருந்தார். 30 ஓவர்களில் 158 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது இங்கிலாந்து.

#EngvInd

விடாது துரத்திய குல்தீப்!
குல்தீப்பின் ஓவர்களில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் விளையாடியது ஸ்டோக்ஸ்- பட்லர் கூட்டணி. ஓவருக்கு 4-6 ரன்கள் என எடுத்துக்கொண்டிருந்தார்கள். 31-வது ஓவரை குல்தீப் வீசினார். ஆனால், அதற்குப்பிறகு ஹர்திக், கவுல், உமேஷ் யாதவ் என வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓவர்கள் கொடுத்தார் கோலி. 39-வது ஓவர்தான் மீண்டும் குல்தீப்பிடம் வந்தது. இதற்கு முன்பு வரை 7 ஓவர்களில் 17 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார் குல்தீப். கோலியின் இந்த பெளலிங் மாற்றம் முதல் ஓவரிலேயே கைகொடுத்தது. இந்த ஓவரின் கடைசிப் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் பட்லர். 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்திருந்தார் பட்லர்.

மொயின் அலி உள்ளே வந்தார். சாஹல் 40-வது ஓவரை வீச, 41-வது ஓவர் மீண்டும் குல்தீப்பிடமும் வந்தது. ஸ்டோக்ஸ், மொயின் அலி இருவருமே இந்த ஓவரில் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக ஆடினர். 3 ரன்கள் மட்டுமே கொடுத்தார் குல்தீப். 9 ஓவர்களில் 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்பதுதான் அப்போது குல்தீப்பின் பெளலிங் பெர்ஃபாமன்ஸ். 

சொதப்பிய ஸ்டோக்ஸ்!
குல்தீப்புக்கு இன்னும் ஒரு ஓவர் இருந்தும் அடுத்தடுத்த ஓவர்களை குல்தீப்பிடம் தராமல் வேகப்பந்து வீச்சுக்குப் போனார் கோலி. குல்தீப்பை ஒரு பிரேக்குக்குப் பிறகு பந்து வீசவைத்தால் விக்கெட் கிடைக்கும் என்பதுதான் ஸ்ட்ரேட்டஜி. நினைத்தது பலித்தது. 45 ஓவர் குல்தீப்பின் கடைசி ஓவர். அதற்கு முந்தைய ஓவரில் 102 பந்துகளில் 50 ரன்கள் அடித்து பேட்டை உயர்த்தினார் ஸ்டோக்ஸ். 50 ரன்கள் அடித்த உற்சாகத்தில் இருந்தவர் குல்தீப்பின் முதல் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீட் ஆட விளையாட்டு வினையானது. சித்தார்த் கவுலுக்கு சிம்ப்பிள் கேட்ச். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் மீண்டும் விக்கெட். டேவிட் வில்லி அவுட். 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 'சிக்ஸர்' போட்டார் குல்தீப். தட்டுத்தடுமாறி 50 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்கள் அடித்திருந்தது இங்கிலாந்து. பேட்டிங் பிட்ச்சில் இது மிக சுமாரான ரன்கள் என்பதால் உற்சாகத்துடன் சேஸ் செய்ய வந்தது இந்தியா.

சென்னையின் பாய்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸில் அணியில் இடம்பிடித்திருந்தாலும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த டேவிட் வில்லியும், மார்க் உட்டும்தான் இங்கிலாந்தின் ஸ்ட்ரைக் பெளலர்ஸ். இரண்டாவது ஓவரிலேயே போட்டுப்பொளந்தார் தவான். வில்லியின் இந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள். அடுத்து உட் ஓவர். ஐந்தாவது ஓவர் வீசிய உட்டின் பெளலிங்கிலும் மூன்று பவுண்டரிகள் அடித்தார் தவான். 6-வது ஓவரில் பெளலிங் மாற்றத்தைக் கொண்டுவந்தார் இயான் மோர்கன். மொயின் அலி பந்து வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. எட்டாவது ஓவர் மீண்டும் மொயின் அலி கையில். 27 பந்துகளில் 40 ரன்களுக்கு  அவுட் ஆனார் தவான். 

#EngvInd

கோலி அட் 1 டவுன்!
 1 டவுன் பேட்ஸ்மேனாக யார் வருவார் என்கிற குழப்பம் தீர்ந்தது. டி20 போட்டிகளில் தன்னுடைய இடத்தை கே.எல் ராகுலுக்கு விட்டுக்கொடுத்திருந்த கேப்டன் கோலி, ஒருநாள் போட்டியில் மீண்டும் 1 டவுன் பேட்ஸ்மேனாக வந்தார்.  தவான் இருக்கும்வரை அமைதியாக இருந்த ரோஹித் ஷர்மாவின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. மார்க் உட் வீசிய 9-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார் ரோஹித் ஷர்மா. 10 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 74 ரன்கள் அடித்திருந்தது இந்தியா. கோலியும், ஷர்மாவும் பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்வதில் கவனம் செலுத்தினர். இருவரும் ஓவருக்கு கிட்டத்தட்ட 7 ரன்கள் என்கிற ரன் ரேட்டையும் காத்தனர். 15 ஓவர்களுக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. ரோஹித் ஷர்மா அரை சதம் அடித்தார். தான் எதிர்கொண்ட 54-வது பந்தை பவுண்டரி அடித்து அரை சதம் போட்டார் ரோஹித். 25-வது ஓவரில் கோலியும் அரை சதம் அடித்தார். மார்க் உட்டின் பந்தில் பவுண்டரி அடித்து 54 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் கோலி.

ஈஸியான டார்கெட்!
25 ஓவர்களில் 169 ரன்கள் அடிக்க, அடுத்த 25 ஓவர்களில் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்று டார்கெட் ஈஸியானது. கோலியும், ரோஹித்தும் செம ஃபார்மில் இருக்க, இங்கிலாந்து பந்துவீச்சு மிக சுமாராகிப் போனது. ரோஹித் ஷர்மா வேகம் எடுக்க ஆரம்பித்தார் சிக்ஸர்கள் பறந்தது. 31-வது ஓவரில் சிக்ஸரோடு சதம் அடித்தார் ரோஹித். 82 பந்துகளில் சதம் அடித்தார் ரோஹித். 33-வது ஓவரில் கோலி அவுட். ரஷித்தின் பந்துவீச்சில் 75 ரன்களில் அவுட் ஆனார் கோலி. 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் அடித்திருந்தார் கோலி. கே.எல் ராகுல் உள்ளே வந்தார்.

கோலி ரோஹித் குல்தீப்

ரோஹித் கிடைக்கும் கேப்பில் எல்லாம் பவுண்டரிகள் அடித்துக்கொண்டிருந்தார். 41-வது ஓவரில் டார்கெட்டை முடித்தது இந்தியா. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்கள் அடித்தது இங்கிலாந்து. ரோஹித் ஷர்மா 114 பந்துகளில் 4 சிக்ஸர், 15 பவுண்டரிகள் உள்பட 137 ரன்கள் அடித்தார். மேன் ஆஃப் தி மேட்ச் விருது 'சிக்ஸர்' எடுத்த குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது இந்தியா. 2019 உலகக்கோப்பையை வெல்லும் கனவில் இருக்கும் இங்கிலந்து, இந்தியாவை அடுத்தப் போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை இழக்காமல் தப்பிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!