வெளியிடப்பட்ட நேரம்: 22:44 (15/07/2018)

கடைசி தொடர்பு:11:45 (16/07/2018)

`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ்! #FifaWorldCupFinal

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷியாவை வீழ்த்தி பிரான்ஸ்  20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்தது.

ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிபா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொடரில் முக்கிய அணிகளுக்கு சிறிய அணிகள் அதிர்ச்சி அளித்தன. இதனால் இந்த தொடர் முழுவதுமே எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சீக்கிரமே நடையை கட்டின. அதேபோல் யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் அணியும் மீண்டும் உலகக்கோப்பை பைனலுக்கு நுழைந்துள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இதில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர். 

ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. தலையால் முட்டி குரோஷிய வீரர் மேண்ட்சுகிச் தடுக்க முயல, ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. இதேபோல் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி குரோஷியா கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் 38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷியா பவுல் செய்ய பிரான்ஸுக்கு பெனால்டி கிடைத்தது. இதை அசத்தலாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான், கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலை வகிக்கித்து.

பின்னர் இரண்டாவது பாதியில் முன்பை விட பிரான்ஸ் வேகம் காட்டியது. 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா ஒரு கோல் அடித்தார். 65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. இதன்பின் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியா கோல் அடிக்க விறுவிறுப்பு ஏற்பட்டது.  எனினும் குரோஷியாவின் உலகக்கோப்பை கனவை பிரான்ஸ் தகர்த்தது. பிரான்ஸ் வீரர்கள் தடுப்பு ஆட்டத்தை ஆட ஆட்ட நேரம் முடிந்தது. இதனால் 4 -2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 

கொட்டும் மழையில் பரிசளிப்பு விழா 

20 ஆண்டுகளுக்கு பின் பிரான்ஸ் வெற்றி பெற்றது, ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கரைபுரண்டு ஒடச்செய்தது. ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்தனர். இதையடுத்து மழை பெய்ததால் பரிசளிப்பு நிகழ்ச்சி மழையிலே நடத்தப்பட்டது. வெற்றி மழையில் நனைந்த பிரான்ஸ் வீரர்கள், கூடுதலாக இயற்கை மழையிலும் நனைந்தபடியே பரிசுகளை பெற்றுக்கொண்டனர். முதல் இடம் பிடித்த பிரான்ஸ் அணிக்கு 255 கோடி ரூபாய் பணம் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த குரோஷியா அணிக்கு 188 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. 

ரொக்க பரிசுகளை தொடர்ந்து, தொடரில் சிறந்த முறையில் செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடி, குரோஷிய அணியை பைனலுக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் கேப்டன் லுகா மோட்ரிக்குக்கு தங்க பந்து விருது வழங்கப்பட்டது. 2வது 3வது இடம்பிடிப்போருக்கு வெள்ளிப்பந்து வெண்கலபந்து வழங்கபடுகிறது.பெல்ஜியத்தின் எடன் ஹசார்ட் வெள்ளி பந்தையும், பிரான்ஸ் அணியை சேர்ந்த ஆண்டோனி கீரிஸ்மான் வெண்கலபந்தையும் பெற்றனர். 

மேலும் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ்க்கு  அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்திய பிரதமர் மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அணியின் வெற்றி உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களால் சமூகவலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க