வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (16/07/2018)

கடைசி தொடர்பு:11:27 (16/07/2018)

பிரான்ஸ் சாம்பியன் - குஷியில் கொட்டும் மழையில் குதித்த பிரான்ஸ் அதிபர்!

உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் வெற்றிபெற்றதால், அந்நாட்டு அதிபர் மைதானத்திலேயே குஷியில் குதிக்கும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

பிரான்ஸ் அதிபர்

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்தாட்ட இறுதிப் போட்டி நேற்று ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்று முடிந்தது. மிகவும் பரபரப்பான ஆட்டத்தில் 4- 2 என்ற கோல் வித்தியாசத்தில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, பிரான்ஸ் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றியுள்ளதால், அந்நாடே வெற்றிக் கொண்டாடத்தில் திளைத்துவருகிறது.  இந்நிலையில், நேற்றைய போட்டியை நேரில் காண மாஸ்கோ வந்திருந்திருந்தார், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரோன். அப்போது, பிரான்ஸ் அணி தொடர்ந்து முன்னிலைபெற்று கோல் அடித்தபோது, ஸ்டேடியத்தின் விஐபி கேலரியில் அமர்ந்திருந்த  அதிபர் இமானுவல்,  திடீரென எழுந்து நின்று குஷியில் துள்ளிக்குத்தித்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

பிறகு நடைபெற்ற பரிசுவழங்கும் விழாவின்போது, மழை பெய்யத் தொடங்கியது. ஆனால், பிரான்ஸ் அதிபரோ, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மைதானத்தில் இறங்கி தன் நாட்டு வீரர்களைக் கட்டியணைத்து வாழ்த்தினார். 

 

அதைத் தொடர்ந்து, வீரர்கள் உடைமாற்றும் அறையில், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பெஞ்சமினுடன் இணைந்து சிறிய நடன அசைவை வெளிப்படுத்தி, வீரர்களின் வெற்றிக் கொண்டாடத்தில் பங்கேற்றார். இதை, பெஞ்சமின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பிரான்ஸ் அணியின் வெற்றிக்குப் பிறகு,   ‘நன்றி’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் இமானுவல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அதிபரின் செயல்கள் மற்றும் கொண்டாட்டங்கள் இணையத்தைக் கலக்கி வருகிறது.