ஹீமா வெற்றியைத் தேடினார்... இங்கே சாதியைத் தேடுகிறார்கள்!

சாதி நம் சமூகத்தில் புரையோடிய விஷயம். யாராவது ஒருவர் ஏதாவது புதிய விஷயத்தில் சாதித்துவிட்டால் 'அவர் என்ன சாதி' என்றும் சம்பந்தப்பட்டவர்களின் பின்புலத்தை அறிய முற்படுவதும் இந்தியர்களின் வழக்கம். சமீபத்தில், பின்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகத் தடகளப் போட்டியில் அஸாமைச் சேர்ந்த இந்திய வீராங்கனை ஹீமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரேநாளில் இந்தியா முழுவதும் பாப்புலராகிவிட்ட ஹீமா தாஸூக்கு குடியரசுத் தலைவர் முதல் சாமானிய மக்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

ஹீமா தாஸ்

அதேவேளையில் கூகுளில் பலரும் ஹீமா தாஸ் என்ன சாதி என்பதை அறிந்துகொள்வதிலும் லட்சக்கணக்கானோர் ஆர்வம் காட்டியுள்ளனர். ஹீமா தாஸ் மட்டுமல்ல இதற்கு முன்னரும் பல இந்திய வீரர் -வீராங்கனைகளின் சாதியை அறிந்துகொள்வதிலும் இந்தியர்கள் அதீத ஆர்வம் காட்டியுள்ளனர். .ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றபோது கூகுளில் அவரின் சாதியை அதிகமானோர் தேடினர்.  குறிப்பாக சிந்து சார்ந்த மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானாவில்தான் அவரின் பின்புலத்தை அறிந்துகொள்ள அதிகமானோர் முயன்றுள்ளனர். தற்போது, அதேபோல் அஸாம் மாநிலத்தில்தான் ஹீமா தாஸின் சாதியை அறிந்துகொள்ள லட்சக்கணக்கானோர் முயன்றுள்ளனர். அடுத்ததாக அருணாச்சல பிரதேசத்தில் அதிகமானோர் ஹீமா தாஸின் சாதியைத் தேடியுள்ளனர்.

சாதிப்பவர்கள் சாதியைத் தேடுவதில்லை... சாதியைத் தேடுபவர்கள் சாதிக்கவும் போவதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!