நெருங்கும் டி20 உலகக்கோப்பை - பயிற்சியாளர் அவதாரத்தில் ரமேஷ் பவார்!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரமேஷ் பவர்

இந்தியப் பெண்கள் அணியின் பயிற்சியாளர் துஷார் ஆரோத் இந்த மாத ஆரம்பத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், பயிற்சியாளர் விலகல் குறித்து சர்ச்சை கிளம்பியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய மகளிர் அணியில் செயல்பாடுகள் சிறப்பாக  அமைந்தது. இதனால் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கு ஜொலிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது. இதற்காக இந்திய வீராங்கனைகள் பெங்களூரில் பயிற்சி பெற்று வருகிறார்கள். துஷார் ஆரோத்தின் விலகலை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ரமேஷ் பவார்  இடைக்காலப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீராங்கனைகளுடன் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், `இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. என்னால் முடிந்தவரை சிறப்பாக செயலாற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார். பி.சி.சி.ஐ-யின் விதிகளின்படி புதிய பயிற்சியாளர் 55 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சர்வதேச அணிக்கு பயிற்சியாளராக இருந்திருக்க வேண்டும் அல்லது முதல் தர அணியில் இடம்பிடித்து விளையாடி இருக்க வேண்டும். இந்தியப் பெண்கள் அணி பயிற்சியாளர்களுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் வரும் ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!