`புவனேஷ்வர் குமார், ரோஹித் ஷர்மா மிஸ்ஸிங்!’ - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng

இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனியர் - ஜூனியர் காம்போவில் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய அணி

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை அதிரடியாகக் கைப்பற்றிய இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரில் சொதப்பியது. முதல் ஒரு நாள் போட்டியில் ஜொலித்த இந்திய அணி, மற்ற இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதன்மூலம் கோலி கேப்டனாகப் பதவியேற்ற பின் இருநாடுகள் இடையேயான ஒரு நாள் தொடரை முதல் முறையாக இந்தியா இழந்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி, இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. 2014-ம் ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் 3 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர், முகமது ஷமி உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அவர்களுடன் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள், டி20 போட்டிகளில் கலக்கிய குல்தீப் யாதவும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளார். அவர்களுடன் அஸ்வின், ஜடேஜாவும் இடம்பிடித்துள்ளனர். ஐபிஎல் போட்டி, உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சாதித்து வரும் ரிஷப் பாண்ட், தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாகூர், கருண் நாயர் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதே நேரம் ரோஹித் ஷர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல், இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் காயத்தின் தன்மையைப் பொறுத்து அவரை அணியில் சேர்ப்பதா இல்லையா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 

அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்: 

விராட் கோலி (கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே (துணைக் கேப்டன்), கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பாண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப், பாண்டியா, இஷாந்த், முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!