VAR to VR Tech... FIFA உலகக் கோப்பையை நவீனப்படுத்திய ஐந்து டெக்னாலஜிகள்! #WorldCup | The technologies that took the FIFA world Cup to the next level

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (19/07/2018)

கடைசி தொடர்பு:16:11 (19/07/2018)

VAR to VR Tech... FIFA உலகக் கோப்பையை நவீனப்படுத்திய ஐந்து டெக்னாலஜிகள்! #WorldCup

பிபிசி ஒரு படி மேலே சென்று மொத்த மேட்ச்சையும் Virtual reality எனும் தொழில்நுட்பத்தில் காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் ரஷ்யாவுக்குப் போகாமலேயே கிரவுண்டில் நின்று பார்க்கும் அனுபவம் இந்த உலகக் கோப்பையில் கிடைத்தது.

VAR to VR Tech... FIFA உலகக் கோப்பையை நவீனப்படுத்திய ஐந்து டெக்னாலஜிகள்! #WorldCup

உலகில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட கால்பந்து எதிர்காலத்தில் சலிப்பு தட்டாமல் பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூஸ்ட், காம்பிளான் எல்லாம் தேவையில்லை, உலகக் கோப்பையே போதுமானது. 20-ம் நூற்றாண்டு ஆரம்பித்தது முதல் தொழில்நுட்பம் கால்பந்தும் சேர்ந்து பயணிக்கிறது என்பதற்கு உலகக் கோப்பை ஒரு எடுத்துக்காட்டு. நடந்து முடிந்த ரஷ்ய உலகக் கோப்பையில் எந்தெந்தப் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியிருந்தார்கள் என்று ஒரு சிறிய ரீகேப்...

VAR

 VAR (Video Assistant Referee)

லூகா மோட்ரிச், எம்பாப்பே, கிரீஸ்மேன், ஹாரி கேன் எனக் கால்பந்தின் சிறந்த வீரர்கள் ஆட்டத்தில் எப்படிப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தார்களோ அவர்களுக்கு இணையாக ஆட்டத்தில் த்ரில்லை சேர்த்த தொழில்நுட்பம் VAR. 2 ஆண்டுகள் தொடர்ந்து சோதித்த பிறகே இந்தத் தொழில்நுட்பத்தை உலகக் கோப்பைக்குக் கொண்டுவந்தது ஃபிஃபா. கிரிக்கெட்டில் இருக்கும் 3- rd அம்பயருக்கு இணையானவர் இந்த VAR. கிரவுண்டில் உள்ள ரெஃப்ரி போல மாஸ்கோவில் ஒரு ரூம் முழுக்க டிவி, கம்ப்யூட்டர்களை வைத்துக்கொண்டு 3 அசிஸ்டென்ட் ரெஃப்ரிகளும், ஒரு தலைமை ரெஃபிரியும் இருப்பார்கள். இந்த வேலைக்கு ஃபிஃபாவின் ரெஃப்ரி டீமிலிருந்து 13 டாப் ரெஃபிரிகளை நியமித்திருந்தார்கள். வீடியோ ரெஃபிரிக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. கிரவுண்டில் இருக்கும் ரெஃப்ரி எடுக்கும் முடிவுகளில் எதுவும் குறை இருந்தால் ரெஃப்ரியைக் குறுக்கிட்டுச் சொல்வார். இவர் சொல்வதை ரெஃப்ரி மறுக்கலாம், இல்லை காற்றில் கட்டம்போட்டு மேட்சை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஓரமாக வைக்கப்பட்டுள்ள டிவி பொட்டியில் குறும்படம் பார்த்து முடிவெடுக்கலாம். இரண்டு ஆண்டு தொடர் சோதனைக்குப் பிறகு எது தேவை எது தேவையில்லை என உணர்ந்து,  இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். 

goal line technology

Goal line technology

2014 பிரேசில் உலகக் கோப்பையிலேயே கோல் லைன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருந்தது ஃபிஃபா. சில நேரங்களில் பந்து கோல் போஸ்ட்டின் உள்பக்கத்தில் அடித்து வெளிவந்துவிடும். அல்லது, கோல் கீப்பர் பல நேரங்களில் கோலை லைனிலேயே பிடித்துவிடுவார். பந்து லைனை தாண்டியிருந்தால் அது கோல். கோல் போஸ்ட்டைச் சுற்றி 14 ஹை-ஸ்பீடு கேமரா வைக்கப்பட்டிருக்கும். பந்து லைனை தாண்டிய ஒரு நொடியிலேயே ரெஃபிரியின் வாட்ச்சில் கோல் விழுந்து விட்டதாகக் காட்டும். பந்து கோல் லைனை தாண்டியதா என்று ரெஃபிரிக்குக் குழப்பம் வருவதற்குள் ஆமாம், இல்லை என்று சொல்லிவிடும் கோல் லைன் தொழில்நுட்பம். இந்த உலகக் கோப்பையில், VAR மற்றும் Goal line இந்த இரண்டு தொழில்நுட்பத்திலிருந்தும் முதலில் பயனடைந்தவர்கள் பிரான்ஸ் வீரர்களே!

உலகக் கோப்பை

Electronic performance & Tracking system

4G, 5G போல புதிய தொலை தொடர்பு தொழில்நுட்பங்கள் ரஷ்ய உலகக் கோப்பையில் இடம்பெற்றிருந்தன. போட்டியில் பங்குபெறும் டீமின் டெக்னிக்கல் மற்றும் மெடிக்கல் ஸ்டாஃப்களுக்கு மீடியா ரூம் ஒன்று தனியாக ஒதுக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து அவர்கள் கிரவுண்டில் இருக்கும் கோச் மற்றும் மெடிக்கல் ஸ்டாஃப்களுடன் தொடர்பில் இருப்பார்கள். ஒவ்வொரு டீமுக்கு மூன்று டேப்லெட் கம்ப்யூட்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஸ்டாண்டு மற்றும் பென்ச்சில் இருக்கும் அனலிஸ்ட்களுக்கு இரண்டு டேப்லெட்டும், மெடிக்கல் டீமுக்கு ஒரு டேப்லெட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. கிரவுண்டில் பிளேயர்களையும், பந்தையும் கவனிக்கத் தனியாக ஆப்டிகள் டிராக்கிங் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இப்படித் தனித்தனியாக வீரர்கள் கவனிக்கப்படுவதால் ஆட்டத்தின் நடுவில் டாக்டிக்கல் மாற்றங்களைச் செய்வது சுலபமாக்கப்பட்டது. மெடிக்கல் டீமுக்கு எந்த பிளேயர் எப்போது உடலை வருத்தி விளையாடுகிறார், எப்போது அவரை ஆட்டத்திலிருந்து எடுக்க வேண்டும் போன்ற விஷயங்களை முடிவு செய்யமுடிந்தது.

VR tech

4 K and VR Tech

HD காலம் காலாவதியாகிவிட்டது. இது 4 K காலம். மொபைல் ஃபோன் முதல் டிவி, கம்ப்யூட்டர் ஸ்கிரீன் வரை 4K வந்துவிட்டது. 4K ஸ்கிரீன் வைத்திருந்தால் மட்டும் துல்லியமாக மேட்ச்சைப் பார்த்துவிட முடியாது. அதற்கு 4 K Resolution-ல் மேட்ச்சைப் படம்பிடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு நேரில் பார்க்கும் அந்த உற்சாகத்தைத் தரும் விதத்தில் மொத்த உலகக் கோப்பையும் துல்லியமான 4K கேமராவில் பதிவுசெய்யப்பட்டது. இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டது சாதாரண HD தரம்தான். ஆனால், இதே மேட்ச்சை நீங்கள் லண்டன், எகிப்து, கத்தார், அமெரிக்கா, ஜெர்மன், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்திருந்தால் 4 K-ல் பார்த்திருப்பீர்கள். பிபிசி ஒரு படி மேலே சென்று மொத்த மேட்ச்சையும் Virtual reality எனும் தொழில்நுட்பத்தில் காண்பித்தது. விர்ச்சுவல் ரியாலட்டி மூலம் ரஷ்யாவுக்குப் போகாமலேயே கிரவுண்டில் நின்று பார்க்கும் அனுபவம் இந்த உலகக் கோப்பையில் கிடைத்தது.

Fan ID

Fan ID

ரஷ்யாவில் உலகக் கோப்பையைப் பார்க்க வருபவர்களுக்கு விசா தேவையில்லை. ஃபேன் ஐடி இருந்தால் போதும் என்றும், ஃபேன் ஐடி வைத்திருப்பவர்கள் இலவசமாகப் பேருந்தில் செல்லாம், ஹோட்டல்களில் ஆஃபர் உண்டு போன்ற சலுகைகளைக் கொடுத்து கால்பந்து ரசிகர்களைக் கவர்ந்தது ரஷ்யா. உலகக் கோப்பைக்கான டிக்கெட்டை வாங்கியவுடன் அந்த டிக்கெட் நம்பரை வைத்து இணையதளத்தில் பதிவு செய்து ஃபேன் ஐடி வாங்கவேண்டும். டிக்கெட் வைத்திருந்தாலும் கூட ஃபேன் ஐடி உள்ளவர்களுக்கு மட்டுமே ரஷ்யாவில் நுழைய அனுமதி. ரஷ்யாவின் ஏர்போர்ட் மற்றும் சாலை வழி எல்லை பகுதிகள் அனைத்திலும் கால்பந்து ரசிகர்களை வரவேற்கவும், ஃபேன் ஐடியைச் சரிபார்க்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஜூன் 4 முதல் ஜூலை 25 வரை ஃபேன் ஐடி வைத்திருப்பவர்களுக்கு ரஷ்யாவில் இருக்க விசா தேவையில்லை என்றார்கள். ஆனால், ரஷ்ய அணி உலகக் கோப்பையில் காலிறுதி வரை வந்த சந்தோஷத்தில் ``ஃபேன் ஐடி வைத்திருப்பவர்கள் இந்த ஆண்டு முழுவதும் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு வந்துபோகலாம்" என்று அறிவித்திருக்கிறார் அதிபர் புதின்.