குறைந்த போட்டியில் 1000 ரன்கள்; தொடர் சாதனையில் பாகிஸ்தான் வீரர் ஃபகர் ஜமன்!

குறைந்த போட்டிகளில் 1000 ரன்கள், இரட்டைச் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமன். 

ஃபகர் ஜமன்

Photo Credit: Twitter/ICC

பாகிஸ்தானின் தொடக்க ஆட்டகாரர் ஃபகர் ஜமன். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவரைப் பற்றிதான் இப்போது கிரிக்கெட் உலகில் பேச்சு. 28 வயதான ஃபகர், தொடர்ச்சியாகப் பல சாதனைகளை செய்து வருகிறார். பாகிஸ்தான் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃஃபகர் ஜமன் தொடர் நாயகனான தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தத் தொடரில் அவர்  முறையே 60, 117*, 43*, 210*, 85 என மொத்தம் 515 ரன்கள் எடுத்து அசத்தினார். நான்காவது ஒருநாள் போட்டியில் 156 பந்துகளில்  210 ரன்கள் குவித்து ஒரு நாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், அதே போட்டியில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக் உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 304 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தனர். 

மேலும், 5 போட்டிகள் கொண்ட இருநாட்டுத்  தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர்(515) இதுதான். இவை எல்லாவற்றுக்கு மேலாக 5-வது ஒருநாள் போட்டியிலும் அபாரமாக அரை சதம் அடித்த அவர், தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 1000 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் குறைந்த போட்டிகளில் 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக ரிச்சர்ட்ஸ், கெவின் பீட்டர்சன், ஜோனதன் ட்ராட், டி காக் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தலா 21 இன்னிங்ஸில் 1000 ரன்களைக் கடந்து முதலிடத்தில் இருந்து வந்தனர். தற்போது 1000 ரன்களை வெறும் 18 இன்னிங்ஸில் கடந்து உலக சாதனைப் படைத்துள்ளார். இந்த ஒரு தொடரில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ஃபகர் ஜமனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!