சுரேஷ் ரெய்னா உதவியால்தான் என் மனைவி உயிருடன் உள்ளார்..! இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர் உருக்கம்

ரெய்னாவின் உதவியால்தான் என் மனைவி உயிருடன் இருக்கிறார் என்று இங்கிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பேருந்து ஓட்டுநராக இருக்கும் ஜெஃப் குட்வின் நெகிழ்ந்திருக்கிறார். 

சுரேஷ் ரெய்னா

Photo Courtesy: Twitter/BCCI

இங்கிலாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணி எப்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டாலும், இந்திய அணிக்காக ஏற்பாடு செய்யப்படும் பேருந்தின் ஓட்டுநராக ஜெஃப் குட்வின் என்பவர்தான் இருப்பார். அவரிடம் பி.சி.சி.ஐ பேட்டி எடுத்திருந்தது. அந்தப் பேட்டியில் அவர் கூறியதாவது, 'இந்திய அணியை 1999-ம் ஆண்டிலிருந்து எனக்குத் தெரியும். அப்போதிலிருந்து இப்போதுவரை இந்திய அணி, எப்போது இங்கிலாந்து வந்தாலும், நான்தான் பேருந்து ஓட்டுநராக இருப்பேன். நான் பார்த்த கிரிக்கெட் அணி வீரர்களிலேயே, இந்திய அணி வீரர்கள்தான் மிகவும் ஒழுக்கமானவர்கள்.

உலகக் கோப்பை போட்டியின்போது பல்வேறு அணிகளுக்காக நான் பேருந்து ஓட்டியுள்ளேன். ஆனால், இந்திய அணி வீரர்கள்போல ஒழுக்கமானவர்களைப் பார்த்ததில்லை. போட்டி முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் இந்திய வீரர்கள் பேருந்துக்கு வந்துவிடுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள், இரவு முழுவதும் மது அருந்திவிட்டு தாமதமாகத்தான் பேருந்துக்கு வருவார்கள். இந்திய அணியின் ஒழுக்கமான பழக்கம்தான், கிரிக்கெட்டை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும். என் மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. இதுகுறித்து இங்கிலாந்து வந்திருந்த சுரேஷ் ரெய்னாவிடம் தெரிவித்தேன். அவர், அவருடைய ஆடையை லீட்ஸ் நகரில் ஏலம் விட்டு, அதில் கிடைத்த பணம் முழுவதையும் என் மனைவியின் சிகிச்சைக்காக அளித்தார். அதனால், இன்று என் மனைவி உடல்நலம் பெற்று மகிழ்ச்சியாக உள்ளார். என் மனைவி உயிருடன் இருக்க, சுரேஷ் ரெய்னா செய்த உதவிதான் காரணம்'’ என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!