`300 டெஸ்ட் விக்கெட்டுகள் என்பது ஜோக் இல்லை!’ - அஷ்வினுக்காகக் குரல்கொடுக்கும் கங்குலி

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் ஆடும் லெவனில் அஷ்வின் இடம்பெற வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்துத் தெரிவித்திருக்கிறார். 

அஷ்வின் - கங்குலி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை முடித்துவிட்டது. டி20 தொடரை 2-1 என கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இவ்விரு அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர், ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் அஷ்வின், ஜடேஜா ஆகியோருடன் மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும் இடம்பெற்றிருக்கிறார். 
 
குல்தீப் மற்றும் சாஹல் ஆகியோரின் எழுச்சிக்குப் பின்னர், டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டுமே அஷ்வின் மற்றும் ஜடேஜா  இடம்பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சாதித்த குல்தீப் யாதவை, டெஸ்ட் தொடரிலும் களமிறக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. அஷ்வினுக்குப் பதிலாக அவரைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக எழுந்துவருகிறது. 

இந்த நிலையில், தனியார் இணையதளம் ஒன்றில் டெஸ்ட் தொடர்குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பிளேயிங் லெவனில் அஷ்வின் இடம் பெற வேண்டும் என கருத்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``அஷ்வின் போன்ற திறமையான பந்துவீச்சாளர்களை நீங்கள் அவ்வளவு எளிதில் ஒதுக்க முடியாது. டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்பது ஜோக் கிடையாது. அஷ்வினுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும். ஏனெனில், அணியில் தனக்கான இடத்துக்குப் போட்டி வந்தபோது, புதிய முயற்சிகள்மூலம் தன்னை நிரூபிக்க முயற்சித்தார். ஐபிஎல் தொடரில் வழக்கமான ஆஃப் ஸ்பின்னுடன் லெக் ஸ்பின்னையும் அவர் முயன்றதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை இதுபோன்ற டெக்னிக்குகளால் அவர் வீழ்த்தவில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே, அவருக்கு வாய்ப்புகள் நிறைய வழங்க வேண்டும்’’ என்றார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!