துபாயில் மோதும் இந்தியா, பாகிஸ்தான் - ஆசியக் கோப்பை அட்டவணை வெளியீடு!

ஆசியக் கண்டத்தில் இருக்கும் நாடுகள் மோதும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது. 

ஆசிய கோப்பை

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். கடந்த முறை டி20 போட்டியாக நடைபெற்ற  தொடர் இந்த ஆண்டு ஒரு நாள் போட்டி வடிவில் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆசியக் கோப்பையை தொடர்ந்து நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பைத் தொடரை மனதில் கொண்டு டி20 போட்டிகளாக நடத்தப்பட்டது. மேலும், ஆசியக் கோப்பைத் தொடரை டி20 மற்றும் ஒருநாள் போட்டி வடிவங்களில் தொடர்ந்து நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தாண்டு நடைபெற  உள்ள ஆசியக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை  அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்தியாவில் இந்தத்  தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வந்து விளையாடுவதில்  உள்ள சிக்கல்கள் தொடர்வதால், தொடர் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளில் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அணிகள் மோதும் இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் நேரடியாகத்  தகுதி பெற்றுள்ளது. மீதம் உள்ள ஒரு அணி தகுதிப் போட்டிகள் மூலமாகத்  தேர்ந்தெடுக்கப்படும். ஹாங்காங், மலேசியா, நேபாளம் , ஓமன், சிங்கப்பூர் மற்றும் யு.ஏ.இ ஆகிய அணிகள் தகுதி சுற்றுப்போட்டிகளில் விளையாட உள்ளன. 

இத்தொடரில் விளையாட இருக்கும் 6 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குரூப் ஏ -யில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் தகுதி பெறும் அணியும். குரூப் பி-யில் வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்தத்  தொடர்  வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. 

இந்திய அணி தனது முதல் போட்டியில் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் செப்டம்பர் 18-ம் தேதி மோதவுள்ளது. அதன் அடுத்த நாள் செப்டம்பர் 19-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. முதல் சுற்று முடிவில் தங்களது பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் 2 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 4 சுற்றில் அனைத்து அணிகளும் மீதம் இருக்கும் 3 அணிகளுடனும் ஒரு போட்டியில் மோத வேண்டும். அதில் முதல் இரண்டு இடங்களைப்  பிடிக்கும் அணிகள்  செப்டம்பர் 28 -ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுவார்கள். 
அனைத்துப்  போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்தியா 6 முறையும், இலங்கை 5 முறையும் பாகிஸ்தான் 2 முறையும் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!