இந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியில் கலக்கும் நெல்லை லட்சுமணன்!

எனக்கு நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் கிடைத்தால், அதன் மூலம் பயிற்சி எடுத்து சிறப்பான வகையில் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பேன். சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பதே எனது லட்சியம்.

இந்திய வீல்சேர் கூடைப்பந்து அணியில் கலக்கும் நெல்லை லட்சுமணன்!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள கொக்கிரக்குளம் பகுதியைச் சேர்ந்தவர், அம்பலவாணன். கூலித் தொழிலாளி. இவரது மகன் லட்சுமணன். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ப்ளஸ் டூ படித்துக்கொண்டிருந்தபோது, வீட்டின் அருகிலிருந்த மரத்தை வெட்டிக்கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை அவர் மீது விழுந்ததில், அவரின் தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களை அசைக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டது.

இவரின் தாயார் நங்கையார், வீட்டு வேலை செய்து வந்தார். மகனுக்கு ஏற்பட்ட நிலையைக் கண்டு அவர் வருந்தியபோதிலும், மகனுக்குத் தெம்பூட்டினார். அருகில் உள்ள வீடுகளில் வேலை செய்துவந்த நங்கையார், வேலைக்குச் செல்லாமல் மகனுடனேயே பொழுதைக் கழித்தார். அவருக்கு மனத்தெம்பை ஏற்படுத்தும் வகையில் உத்வேகம் அளித்துப் பேசினார். அதனால் லட்சுமணனின் மனதில் இருந்த கவலை மறைந்து, தன்னாலும் சாதிக்க முடியும் என்கிற வேகம் பிறந்தது. அதைத் தொடர்ந்து, வீட்டில் முடங்கிக் கிடக்க மனம் இல்லாமல் வீல் சேரில் வலம்வரத் தொடங்கினார். மனஉறுதியுடன் பயிற்சி மேற்கொண்டு, ஊனமுற்றோருக்கான இந்தியக் கூடைப்பந்து அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்! கூடைப்பந்து வீரர்

கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி எடுத்துக்கொண்ட அவர், இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கூடைப்பந்துப் போட்டிகளில் பங்கேற்ற 20 வயது நிரம்பிய லட்சுமணனிடம் பேசியபோது,  

``கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தால் எனது கால்கள் செயல் இழந்தன. இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடமும் என்னால் தேர்வு எழுத இயலவில்லை. இந்த நிலையில், என் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, வீல் சேரில் அமர்ந்தபடியே கூடைப்பந்துப் பயிற்சி எடுத்துக்கொண்டேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகரித்தது. தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டேன். பயிற்சிக்காக சென்னைக்குச் சென்றேன். அங்கே எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன.

கூடைப்பந்துப் போட்டியில் மாவட்ட அணியிலும், மாநில அணியிலும் தேர்வானேன். 23 வயதுக்கு உட்பட்டோருக்கான வீல் சேர் கூடைப்பந்துப் போட்டிக்கான இந்திய அணியில் எனக்கு இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினேன். இந்திய வீல் சேர் கூடைப்பந்து அணி முதல்முறையாக சர்வதேசப் போட்டியில் பங்கேற்றபோது, அந்த அணியில் நானும் இடம்பெற்றதில் பெரும் மகிழ்ச்சி.

வீரர் லட்சுமணன் தாயாருடன்

ஏற்கெனவே, மாவட்ட அணியிலும் மாநில அணியிலும் இடம்பெற்று பல போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஹைதராபாத் நகரில் நடந்த தேசிய கூடைப்பந்துப் போட்டியில் தமிழக அணியின் சார்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் பெற்றேன். கடந்த இரண்டு வருடமாகக் கூடைப்பந்துப் பயிற்சி எடுத்துக்கொண்ட நிலையில், இதுவரை 14 பதக்கங்களை வென்றுள்ளேன். சர்வதேசப் போட்டிகளுக்காக நான் தொடர்ந்து பயிற்சி எடுத்துவருகிறேன்.

சென்னையில் உள்ள சத்யபாமா கல்லூரியில் நடக்கும் பயிற்சிகளில், நான் பலமுறை கலந்துகொண்டுள்ளேன். எனக்கு விளையாட்டு மீது இருக்கும் ஆர்வத்தைப் பார்த்த அந்தக் கல்லூரி நிர்வாகம், எனக்கு இலவசமாக கல்வி அளிக்க ஒப்புக்கொண்டது. அதனால் அந்தக் கல்லூரியில் இந்த ஆண்டு பி.காம் படிப்பில் சேர்ந்துள்ளேன். தற்போது என்னிடம் சாதாரண வீல் சேர் மட்டுமே இருக்கிறது. அதில் அமர்ந்தபடி பயிற்சிசெய்துவருகிறேன். 

மாவட்ட ஆட்சியருக்கு மனு

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இதற்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட வீல் சேர்களை மட்டுமே பயன்படுத்துவார்கள். அதில் நவீன வசதிகள் இருக்கும். அந்த சேரின் விலை 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும். என் குடும்பத்தினரால் அதை வாங்கிக் கொடுக்க இயலாது. அதனால் அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளையின் மூலம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, வீல் சேர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளேன்.

எனக்கு நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் கிடைத்தால், அதன் மூலம் பயிற்சி எடுத்து சிறப்பான வகையில் சர்வதேசப் போட்டிகளில் வெற்றிகளைக் குவிப்பேன். சர்வதேசப் போட்டியில் இந்தியாவுக்குத் தங்கப்பதக்கம் வாங்கித் தர வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக, கடினமாக உழைத்து தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றபோது அவரின் கண்களில் நம்பிக்கை ஒளி பிரகாசித்தது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

லட்சுமணனின் தாயார் நங்கையார் பேசுகையில், ``என் மகன் படுக்கையில் விழுந்ததும் அவன் மனதளவில் சோர்ந்துபோயிருந்தான். விரைவிலேயே அதிலிருந்து மீண்டு, கூடைப்பந்துப் பயிற்சியில் ஈடுபட்டான். அவனுடைய ஆர்வத்துக்கு நானும் என் கணவரும் எப்போதுமே குறுக்கே நின்றதில்லை. அதனால் அவன் விருப்பப்படி சென்னைக்கு அனுப்பி பயிற்சி பெறவைத்தோம். அவன் திறமையாகச் செயல்பட்டுவருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவன் விரும்பியபடியே இப்போது கல்லூரியில் சேர்த்திருக்கிறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன். 

இந்த இளைஞரின் விளையாட்டுக்கு உதவும் வகையில், நவீன வசதியுடன்கூடிய வீல் சேர் வாங்கவும், அவருக்குச் சிறப்பான வகையில் பயிற்சி கிடைக்கவும் நெல்லை மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதை தானும் உணர்ந்து, பிறருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டுவரும் லட்சுமணன், பாராட்டுக்குரியவரே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!