வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (26/07/2018)

கடைசி தொடர்பு:19:15 (26/07/2018)

`ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடத் தேவையில்லை!’ - கொதிக்கும் சேவாக்

ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், அந்தத் தொடரில் இந்திய அணி பங்கேற்கத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார். 

சேவாக்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் துபாயில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி சமீபத்தில் வெளியிட்டது. இந்திய அணி அடுத்தடுத்த நாள்களில் (செப்டம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில்) விளையாடும் வகையில் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றிபெறும் அணியைச் செப்டம்பர் 18-ம் தேதி எதிர்கொள்ளும் இந்திய அணி, செப்டம்பர் 19-ம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அடுத்தடுத்த நாள்களில் இந்திய அணி போட்டிகளில் பங்கேற்கும்படி அட்டவணை தயாரித்த ஐ.சி.சி-க்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. 

இந்தநிலையில், ஐ.சி.சி-யின் ஆசியக் கோப்பை அட்டவணைக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதுதொடர்பாகப் பேட்டியளித்துள்ள அவர் கூறுகையில், ``ஆசியக் கோப்பை அட்டவணையைப் பார்த்து நான் அதிர்ந்துவிட்டேன். ஏனெனில், இன்றைய சூழலில் எந்த அணி, அடுத்தடுத்த நாள்களில் போட்டிகளில் பங்கேற்கின்றன. இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரின்போது இரண்டு போட்டிகளுக்கிடையே 2 நாள்கள் ஓய்வு இருந்தது. ஆனால், வெப்பம் தகிக்கும் துபாய் மைதானத்தில் அடுத்தடுத்த நாள்களில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறுவது எந்த வகையில் ஏற்புடையது. இதனால், இந்தத் திட்டமிடல் சரியானது இல்லை. 

ஆசியக் கோப்பை தொடர் குறித்து நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். அந்தத் தொடரில் விளையாட வேண்டாம். அந்த நாள்களில் உள்ளூர் தொடர் அல்லது வெளிநாட்டுத் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடலாம். அடுத்தடுத்த நாள்களில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது கடினமானது. ஒவ்வொரு ஒருநாள் போட்டி முடிந்ததும், அந்தச் சோர்விலிருந்து ஒரு வீரர் மீண்டு வர குறைந்தது 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் கொடுக்க வேண்டும். ஏனெனில், ஒரு நாள் போட்டிகளின்போது 3.5 மணிநேரம் ஃபீல்டிங் செய்ய வேண்டி இருக்கும். தோராயமாக 2 மணி நேரம் பேட் செய்ய நேர்ந்தால், மொத்தம் 5.5 மணி நேரம் மைதானத்தில் ஒரு வீரர் இருக்க வேண்டி சூழல் ஏற்படும்’’ என்றார்.