`2019 உலகக்கோப்பைக்குப் பின் ஓய்வு?' - என்ன சொல்கிறார் டேல் ஸ்டெயின்

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் தான் ஓய்வு பெறப்போவதாக தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் அறிவித்துள்ளார். 

டேல் ஸ்டெயின்

தனது வேகப்பந்துவீச்சால் பல்வேறு அணிகளைத் திணறடித்தவர் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின். 2004-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவர், தொடர்ந்து தனது திறமையை நிரூபிந்ததால் ஒருநாள், டி20 போட்டிகளிலும் இடம்பெற்றார். வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்துவீச்சால் எதிரணி வீரர்களைப் பலமுறை இவர் கலங்கடித்தார். ஒருகட்டத்தில் இவரும், மோர்னே மார்கலும் தென்னாப்பிரிக்காவை நம்பர் ஒன் அந்தஸ்துக்கு உயர்த்தினர். அதேபோல் ஐ.சி.சி தரவரிசையிலும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்திருந்தார். தொடர்ந்து இவரின் கிரிக்கெட் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்தாலும், காயங்கள் இவரை விட்டுவைக்கவில்லை. அடிக்கடி ஏற்படும் காயத்தால் ஸ்டெயின் அவதிப்பட்டு வந்தார். கிட்டத்தட்ட இவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என அனைவரும் எண்ணும்போது காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடிப்பார். 

இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக்குப் பின் லிமிடெட் ஓவர்ஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஸ்டெயின் அறிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ``ஒருவழியாகக் காயத்தில் இருந்து மீண்டு வந்துவிட்டேன். இது ஒரு மோசமான அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பையில் விளையாட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். ஆனால், உலகக்கோப்பைக்குப் பின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாட முடியாது. அது சாத்தியமும் இல்லை. ஏன் என்றால் எனக்கு வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனினும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்துவேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நீண்ட நாள்கள் கிரிக்கெட் விளையாட முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!