வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (27/07/2018)

கடைசி தொடர்பு:15:50 (27/07/2018)

`இது ஓர் அபத்தமான முடிவு!’ - அடில் ரஷீத் அணியில் சேர்க்கப்பட்டதை விமர்சிக்கும் முன்னாள் கேப்டன்

அடில் ரஷீத்தை இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சேர்த்தது அபத்தமானது என முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். 

அடில் ரஷீத் - மைக்கேல் வாகன்

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்குகிறது. வழக்கத்துக்கு மாறாக இத்தொடர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்திய அணி வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதேபோல் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுக்குப் பிறகு, இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக இந்தியா டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கிடையே, இத்தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், முதல் டெஸ்டில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 

13 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணியில் மொயீன் அலியுடன் இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக அடில் ரஷீத்தும் சேர்க்கப்பட்டுள்ளார். லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வரும் ரஷீத்துக்கு 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, டெஸ்ட் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆனால், உள்ளூர் பயிற்சி போட்டியில் விளையாட ரஷீத்தை அணியில் சேர்த்தது தற்போது விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இதுகுறித்து ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், ``இது முற்றிலும் அபத்தமானது. உள்ளூரில் நடந்த 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஒருவரை நாம் அணியில் சேர்த்து இருக்கிறோம். அவர் சிறப்பாகச் செயல்படுவாரா, மாட்டாரா என்பதை மறந்துவிடுவோம். ஆனால், இதை நான் ஓர் அபத்தமான முடிவாகவே பார்க்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க