ரபாடா வேகம்... ஷாம்சி சுழல்... இரட்டை தாக்குதலில் சுருண்டது இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை

Photo Credit: ICC

தென்னாப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.  இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புலாவில் இன்று நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிக் வில்லா முதல் ஓவரின் மூன்றாவது பந்திலே நடையைக் கட்டினார். ரபாடா பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.தென்னாப்பிரிக்காவின் அபாரப் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் சிலர் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். குஷல் பெராரா மட்டும் ஒரு பக்கம் போராடினார். அவரும் 81 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். 34.3 ஓவர்களுக்கு அந்த அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்- அவுட் ஆனது. அதிகபட்சமான குஷல் பெராரா 81, திசாரா பெரரா 49 ரன்களும்  எடுத்தனர்.தென்னாப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா, ஷாம்சி இருவரும் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் நிதானமாக விளையாடினர். அந்த அணியின் சீரான ரன்வேகத்திற்கு அகிலா தனஞ்செயா முட்டுக்கட்டை போட்டார். அவரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆம்லா மற்றும் மார்க்ரம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். 31 ரன்களில் அந்த அணி 2 விக்கெட்டுகளை இழந்தது.  இதனைத்தொடர்ந்து ஆட வந்த கேப்டன் டு-பிளிசிஸ் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினார். டு-பிளிசிஸ் - டி காக்கின் இணையின் பொறுப்பான ஆட்டத்தால் ரன்வேகம் சீராக உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 117 ஆக உயர்ந்த போது, டி காக் 47 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய டுமினி அரைசதம் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார். முடிவில் தென்னாப்பிரிக்க அணி 31ஓவர்களில் 5விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக டுமினி 53 ரன்களும், டி- காக், டு பிளிசிஸ் தலா 47 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!