வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (31/07/2018)

கடைசி தொடர்பு:10:00 (31/07/2018)

நாளை தொடங்குகிறது டெஸ்ட் தொடர் -பழைய தோல்விகளுக்குப் பதிலடி கொடுக்குமா இந்தியா!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, பர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்

Photo Credit: BCCI

விராட் கோலி தலைமையிலான  இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இதில், டி-20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடர்கள்  முடிவடைந்துள்ளன. இந்திய அணி டி-20 தொடரை கைப்பற்றியதையடுத்து, இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. அடுத்து, இவ்விரு அணிகளும்  டெஸ்ட் போட்டிகளில் மோத உள்ளன. முதல் போட்டி பர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு இந்த டெஸ்ட் தொடர் சவாலானதாகவே இருக்கும். அந்நிய மண்ணில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுவாக உள்ளது. இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடர்களும் இதையே பிரதிபலிக்கின்றன. இங்கிலாந்து மண்ணில் இவ்விரு அணிகளும் மோதிய 57  டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றிபெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 30 போட்டிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது.  ஒட்டு மொத்தமாக இவ்விரு அணிகளும் 117 போட்டிகளில் மோதியுள்ளனர். இதில், இங்கிலாந்து 43 போட்டிகளிலும், இந்தியா 25 போட்டிகளிலும் வென்றுள்ளன. 49 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 

கடைசியாக, இங்கிலாந்து மண்ணில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற பட்டோடி டிராபி தொடரை  ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்திய அணிக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடித்தந்த முன்னாள் கேப்டன் தோனி தலைமையில், 2014 -ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அந்தத் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.  தற்போது, பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக உள்ள இந்திய அணி, இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்படும் என முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்திய அணி இந்தத் தொடரைக் கைப்பற்றி, தனது பழைய தோல்விகளுக்குப் பதிலடி கொடுக்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.