வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (31/07/2018)

கடைசி தொடர்பு:11:10 (31/07/2018)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: கோலிக்கு காத்திருக்கும் சவால்கள்..!

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி,  பர்மிங்ஹாமில் நாளை தொடங்குகிறது.  இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. 

கோலி

Photo Credit: BCCI

இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் முந்தைய செயல்பாடுகள் மோசமாகவே இருந்துள்ளன. பெரிய அளவில் டெஸ்ட் தொடரில் வெற்றிகளைக் குவிக்கவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு, இங்கிலாந்து தொடர்தான் கோலிக்கு தனது முதல் வெளிநாட்டு டெஸ்ட் பயணமாக அமைந்தது. இதில், 5 போட்டிகளில் விளையாடிய கோலி, 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்தத் தொடரில், இவரின் டெஸ்ட் சராசரி 13.40 தான். கோலி இந்த மோசமான வரலாற்றை மாற்றி எழுதுவாரா? இந்திய அணியின் பழைய தோல்விகளுக்கு பழிதீர்ப்பாரா? என்ற கேள்விகள், ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.   

இங்கிலாந்தில், மோசமான தனது பழைய நினைவுகளை அழிப்பதற்காக, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டில் கலந்து கொள்வது என இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிவு எடுத்திருந்தார் கோலி. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்குப் பின்னர், கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக அறிவித்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவருக்கு காயம் ஏற்பட்டதால், கவுண்டி கிரிக்கெட்டில் ஆட முடியவில்லை.  இருப்பினும், தற்போதைய இங்கிலாந்து தொடரில் கோலி சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார். டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.  

கடந்த சில நாள்களுக்கு முன், முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கோலி குறித்துப்பேசினார். `2014-ம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் இருந்து கோலி முற்றிலும் மாறியுள்ளார். தற்போது, அவர் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறார்' எனத் தெரிவித்தார்.  இங்கிலாந்து மண்ணில் பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை அள்ளுவார்கள். 2007-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், இந்திய அணி வெற்றிக்கு ஜாகீர் கான் அள்ளிய 9 விக்கெட்டுகள்தான் உறுதுணையாக இருந்தன. 2011-ல், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை ஸ்டூவர்ட் பிராட் மற்றும் ஆண்டர்சன் நிலைகுலையச் செய்தனர். டெஸ்ட் போட்டியிலிருந்து தோனி ஓய்வு பெற்றதால், இந்திய அணிக்குப் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அணியைத் தேர்வுசெய்வது,  சூழ்நிலைக்கேற்றவாறு பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவது மற்றும் இங்கிலாந்தில் தனது முந்தைய மோசமான வரலாறு என பல்வேறு சவால்கள் இளம் கேப்டன் கோலி முன்பு உள்ளது. இந்தச் சாவல்களை எதிர்க்கொண்டு கோலி சாதிப்பாரா என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.